ஈரோடு கிழக்கு | தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தலைவர்கள் சிலை மறைப்பு; திருமண மண்டபங்களுக்கு கட்டுப்பாடு

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், 3 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் முதல்வர் உள்ளிட்ட அரசியல் தொடர்பான புகைப்படங்கள் அகற்றப்பட்டு, அரசியல் பேனர்கள், விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் துணிகளைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடந்தது.

இதில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பேசியதாவது: “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது.

மேலும் தங்கும் விடுதிகளில் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை வழங்குபவர்களை மட்டுமே தங்க வைக்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அச்சடிக்கும் துண்டு பிரசுரங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி முழுமையாக தெரியும் வகையில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். இக்கூட்டத்தில்‌, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், ஈரோடு எஸ்பி ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்