திருப்பதி துயரம்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், "திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ள துயர நிகழ்வை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்தச் சோகச் சம்பவத்தில் உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதியில் உள்ள விஷ்ணுவின் இல்லம் அருகே திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவார தரிசனத்திற்கான டோக்கன்கள் தொடர்பாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் டோக்கன்களைப் பெற அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த நேரத்தில் நடந்த இந்த துயர சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். நான் தொடர்ந்து மாவட்ட மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதி சீனிவாசம் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் பலியாகியிருக்கிற சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. மேலும் 30 பக்தர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1 லட்சத்து 20 ஆயிரம் டோக்கன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கவுண்டரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தடுக்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லட்சக்கணக்கில் இலவச டோக்கன்கள் வழங்கும் போது நிறைய கவுண்டர்களை திறந்து ஒரே இடத்தில் பக்தர்கள் குவியாமல் தடுக்கிற பொறுப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு இருக்கிறது. அந்த பொறுப்பை காவல்துறையினரின் ஒத்துழைப்போடு சரிவர நிர்வகிக்காத காரணத்தினால் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு சென்றதினால் 6 பேர் பலியான இக்கோர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக, இலவசங்களை வழங்கும் போது மக்கள் நெரிசலில் சிக்கி இத்தகைய கோர சம்பவங்கள் ஏற்கனவே நிறைய நடந்திருக்கின்றன. அதிலிருந்து படிப்பினையை பெற்று கோர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. இதுகுறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விசாரணை நடத்தி 6 பேர் பலியான சம்பவத்திற்கு உரிய காரணத்தை அறிய முற்பட வேண்டும்.

விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் ஆந்திர மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "திருப்பதியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான டோக்கன் வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்