“தமிழக அரசு ஒருபோதும் டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி வழங்காது” - பேரவையில் அமைச்சர் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: “மாநிலங்களவையில் அரிய வகை கனிம வளங்கள் தொடர்பான சட்டத்தை அதிமுக ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்துக்கு வந்துள்ளது. ஆனால், திமுக அந்தச் சட்டத்தை எதிர்த்தது. ஸ்டாலின் முதல்வராக இருக்கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதுவரை ஒரு பிடி மண்ணைக்கூட அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழக அரசு நிச்சயமாக அனுமதிக்காது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: “மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலகட்டத்தில் அந்த சுரங்கத்தை எந்தவொரு காலகட்டத்திலும் நிச்சயமாக அங்கே அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னவர் தமிழக முதல்வர். அமைக்க மாட்டேன் என்று சொன்னது மாத்திரமல்ல; தான் முதல்வராக இருக்கின்ற வரையில் அங்கே அந்த டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டோமென்று நெஞ்சுரத்தோடு இந்த அவையிலே அறிவித்தவர் முதல்வர்.

அதோடு மட்டுமின்றி, உறுப்பினர் அனைவருடைய ஒத்துழைப்போடு ஏகமனதாக இந்தச் சட்டமன்றத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசினுடைய ஒப்புதலுக்காக முதல்வர் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், அதற்காக இந்தப் பிரச்சினையினுடைய நதிமூலம் என்ன, இந்தப் பிரச்சினையினுடைய ரிஷிமூலம் என்ன, இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் யார், இந்தப் பிரச்சினைக்கு முழுமுதல் காரணம் யார் என்பதை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். இங்கே அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா வேகமாகப் பேசினார். அவரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் யார் மூல காரணம் தெரியுமா? பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினுடைய மாநிலங்களவை உறுப்பினர் அன்றைக்கு மாநிலங்களவையிலேயே, இந்தப் பிரச்சினை வருகிறபோது, strategic minerals ஒரு மாநில அரசினுடைய ஒப்புதலைப்பெற்று, மாநில அரசாங்கம்தான் இத்தகைய சில குறிப்பிட்ட கனிம வளங்களை ஏலம் விடலாம் என்கின்ற முறையை மாற்றி, இவற்றையெல்லாம் strategic minerals என்கின்ற அந்த வட்டத்துக்குள்ளே அடைத்து, அதை ஏலம் விடக்கூடிய அந்த முறையை மத்திய அரசு தன்னுடைய கையிலே எடுத்துக்கொள்ளக்கூடிய அந்த சூழ்நிலையில் அந்தச் சட்டம் அங்கே கொண்டுவருகிறபோது, அதை நீங்கள் ஆதரித்து உங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் ஆதரித்த அந்தக் காரணம்தான் இந்த டங்ஸ்டன் சுரங்கம் மூல முதல் காரணம். அந்த மூல முதல் காரணத்தை நீங்கள் ஆரம்பித்தீர்கள்.

எனவே, நீங்கள் அப்போது ஆதரித்ததற்குப்பிறகு, மத்திய அரசு இந்த strategic minerals என்று அதைக் கொண்டுவந்து, இதை ஏலமிடுவதற்கு அவர்கள் முயற்சித்தபோது, அப்போதே அதை ஒத்துக்கொள்ளாமல், அதை எதிர்த்த அரசு தமிழக அரசின் கனிம வளத் துறை அன்றைக்கே அதை எதிர்த்திருக்கிறது. அதற்குப் பின்னாலுங்கூட, அவர்கள் ஏலத்தைவிட்டு, ஏல நடைமுறைகளை அவர்கள் ஆரம்பித்து, எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஆரம்பித்து, ஏலதாரர் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் Hindustan Zinc Limited என்ற அந்தக் கம்பெனிக்கு ஏலம் கொடுக்கிறபோதும், அந்த ஏலத்தை அவர்கள் கொடுத்தபோதும், அதை எதிர்த்த அரசு தமிழக அரசு.

எனவே, திமுக அரசு எல்லா வகையிலும், எல்லா முறைகளிலும் அதை நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோம் என்பதனை எந்தவிதத்திலும் ஒரு மாற்றுக் கருத்தை உங்களால் சொல்ல முடியாது. அதற்குப் பிறகுதான், சட்டமன்றத்திலே தீர்மானம் கொண்டுவந்தோம். சட்டமன்றத்திலே ஒருமுகமாக தீர்மானம் கொண்டுவந்து, நாம் எல்லாம் நிறைவேற்றியதற்குப் பிறகும்கூட, இங்கே பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அதிலே அரசியல் ஆதாயம் செய்வதற்காக அதிலே குளிர்காய நினைக்கிறீர்கள்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், “உங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நாடாளுமன்ற அவையிலே இதை ஆதரித்துப் பேசியிருக்கிறார். இது உண்மை, இல்லையென்று மறுக்கிறீர்களா? திமுக-வின் சார்பில் நாங்கள் இதை எதிர்த்திருக்கிறோம், ஆதரிக்கவில்லை. ஆனால் அதிமுக-வைச் சார்ந்த உறுப்பினர் ஆதரித்துப் பேசியிருக்கிறார். அது உண்டா, இல்லையா? அதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “எதிர்க்கட்சித் துணைத் தலைவரே, ஒற்றை உறுப்பினர் எங்களுக்கு இருந்தாலும் நாங்கள் உறுதியாக இந்தத் திட்டத்தை ஆதரிப்போம் என்கின்ற வகையிலே மாநிலங்களவையில் நீங்கள் ஆதரித்திருக்கிறீர்கள். அதை உங்களால் மறுக்க முடியாது.

மாநிலங்களின் உரிமையாக இருந்த ஒன்றை, மத்திய அரசு தன்னுடைய பொறுப்பிலே ஏற்றுக்கொண்டு, ‘நாங்கள் அந்த ஏல முறையைக் கொண்டுவருவோம், மாநில அரசுக்கு அதில் பங்கு இல்லை, strategic minerals-அரிய வகை கனிம வளங்கள் இனிமேல் எங்களுடைய பாத்தியதை, நாங்கள்தான் கொண்டுவருவோம்’ என்று மாநில உரிமைகளையும் மீறி, மத்திய அரசாங்கம் அதை எடுத்துக்கொண்டபோது, அதை நீங்கள் ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் ஆக இன்றைக்கு வந்திருக்கிறது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.

ஆனால், டங்கஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக இங்கே தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகும், மத்திய அரசு என்ன சொன்னது? நாங்கள் இதை Geological Survey of India-வினுடைய கவனத்துக்குக் கொண்டுசெல்கிறோம் என்று சொன்னார்கள். நீங்கள் என்ன செய்திருக்கவேண்டும் போராட்டம் நடத்தக்கூடிய நண்பர்கள், நம்முடைய பிரதான எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள்? மத்திய அரசைக் கண்டித்து, நீங்கள் ஒரு வார்த்தை அறிக்கையில் சொல்லியிருந்தால் பரவாயில்லை.

இது யாருடைய கூட்டணிக்கு பின்னாலே இருந்துகொண்டு, நீங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். நான் அந்த வார்த்தையைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், மத்திய அரசை நீங்கள் சொல்லவில்லை. தமிழத அரசு, அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள், விவசாயிகள் அங்கே போராட்டம் நடத்துகிறபோது, அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய், அங்கே இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு அங்கே எந்தவிதமான ஓர் அசம்பாவிதமும் நடந்துவிடாத அளவில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது.

மீண்டும் இந்த அவையில் திட்டவட்டமாக உங்களிடத்தில் சொல்கிறேன், இந்த அவையின் மூலமாக நாட்டு மக்களுக்கும் சரி, போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கும் சரி, நான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக அரசின் சார்பில் சொல்வேன், தமிழக அரசு ஒருபோதும் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கவே வழங்காது. இந்தத் திட்டத்தை வரவே விடமாட்டோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால், நம்முடைய முதல்வர் ஸ்டாலின், முதல்வராக இருக்கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார். அதுவரை ஒரு பிடி மண்ணைக்கூட அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழக அரசு நிச்சயமாக அனுமதிக்காது. இங்கேயெல்லாம் முகக்கவசம் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்களே, நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காகத்தான் இந்த முகக்கவசத்தை உங்கள் முகங்களிலே அணிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்