“அதிமுகவை பார்த்து 100 ‘சார்’ கேள்விகளை கேட்க முடியும்!” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: “பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று அந்த வழக்கை விசாரித்த சிபிஐ தெரிவித்துள்ளது. இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய ‘சார்’ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு வருகிறார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அதிமுகவைப் பார்த்து என்னால் கேட்க முடியும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில், சென்னை அண்ணா. பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புக்கு, பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “சென்னை மாணவி விவகாரத்தில் மட்டுமல்ல, எந்தப் பாலியல் வன்கொடுமை புகாரிலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் இல்லை. விலகி நிற்பதும் இல்லை. மனசாட்சி இல்லாமல், பெண்களின் பாதுகாவலர்கள் மாதிரி பேசுபவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பொள்ளாச்சியில் நடந்தது ஒரு பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் இல்லை. தொடர்ச்சியாக பல பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமைகளை இரண்டு வருடங்களாக ஒரு கும்பல் செய்து வந்திருக்கிறது. அன்றைய அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிபிஐ-வசம் இந்த வழக்கு சென்ற பிறகுதான் உண்மைகள் வெளிச்சத்துக்கே வந்தது.பாதிக்கப்பட்ட பல பெண்களில் ஒருவர், தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி, தன்னுடைய அண்ணனிடம் சொல்கிறார்.

பிரச்சினைக்குரிய நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கின்றார். பாலியல் தொல்லை, ஆபாசமாக படம் எடுத்தல், செயின் பறிப்பு என்று புகார் கடிதம் தரப்படுகிறது. வீடியோக்கள், செல்போன்கள் ஆகியவற்றுடன் 4 குற்றவாளிகளையும் இவர்கள் ஒப்படைக்கிறார்கள். இதனைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்கு பதியவில்லை. எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய முதல்வர் “சார்” ஆட்சியில் சட்டம்-ஒழுங்கின் லட்சணம்.

அதுமட்டுமா? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை அப்படியே குற்றம் செய்தவர்களிடமே கொடுத்து விட்டார்கள். இதையடுத்து அதிமுக பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனைத் தாக்குகிறார். அந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்காத அரசுதான் அதிமுக அரசு.பிரச்சினை பெரிதாகிறது என்று தெரிந்ததும், இதிலே சம்பந்தப்பட்ட முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், ஏதோ மூன்று பேரை கைது செய்து கணக்கை முடிக்கப் பார்த்தார்கள்.

ஆனால், சிபிஐ விசாரணையில், பொள்ளாச்சி சம்பவம் முழுவதுமே அதிமுக பிரமுகர்களால்தான் நடத்தப்பட்டது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான், இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போன்று அன்றைய அதிமுக அரசு ஒரு பெரிய நாடகம் ஆடியது. இதனால்தான் “பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி” என்று நான் அப்பொழுதே சொன்னேன். இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய “சார்”ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு வருகிறார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அதிமுக-வைப் பார்த்து என்னால் கேட்க முடியும்.

ஒரு முன்னாள் முதல்வர், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவர், தன் பொறுப்பையும் தகுதியையும் மறந்து, பேட்ஜ் அணிந்து வந்தது, அரசியலில் எந்தளவுக்கு தாழ்ந்து போகவும் தயாராக இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அதிமுக ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஏனோ, இவற்றையெல்லாம் அரசியல் லாபத்துக்காக, அந்த நோக்கத்துக்காக மறைக்கிறார்கள்.

அதேபோன்று, இந்த வழக்கு பற்றி பாஜக-வினர் பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக கதைகளை எல்லாம் சொல்லி, இந்த அவையின் மாண்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அரசு மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, பொறுப்பினை உணர்ந்து பேச வேண்டும்.

உயர் நீதிமன்றம் அமைத்திருக்கிற சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை முழு வீச்சில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும், எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கடும் நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக நாங்கள் எடுப்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சி, மகளிருக்கான ஆட்சி. மகளிருக்காகவே நாள்தோறும் திட்டங்களைத் தீட்டி, அவர்களுடைய பேராதரவோடு செயல்பட்டு வருகிற இந்த அரசு மீது, அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அதன்மூலமாக களங்கம் ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது ஒருபோதும் எடுபடாது. திமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்