ஈரோடு கிழக்கில் பொது வேட்பாளர்? - அதிமுக முடிவுக்காக காத்திருக்கும் பாஜக

By எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில், தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், திமுகவின் முன்னணி பிரமுகர்களும் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க சில முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

டெல்லி தலைமை விருப்பம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து வரும் 11-ம் தேதி மாவட்ட செயலாளர்களைக் கூட்டி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். என்.டி.ஏ. கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து, பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பாஜக டெல்லி தலைமை தற்போது விரும்புகிறது. அதற்கு ஏற்ப, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்துள்ளன.

அதிமுகவுடன் இணக்கமாகச் செல்ல, அண்ணாமலை தரப்பில் சிக்னல் கொடுக்கப்பட்டாலும், அதிமுக தரப்பில் இதுவரை அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை மையமாக வைத்து, என்.டி.ஏவில் அதிமுகவை இணைக்க முயற்சிகள் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்படியாக, ஈரோடு கிழக்கு தொகுதியில், இண்டியா கூட்டணி வேட்பாளரை எதிர்த்து, பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

ஆளுங்கட்சி மீது அதிருப்தி: இதுகுறித்து என்டிஏ மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தரப்பில் பேசியபோது, ‘ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அமைச்சர்கள் படையே முகாமிட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசியது.பணம், பரிசுப்பொருட்கள் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியான எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதனால் தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதோடு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பொங்கல் பரிசுத்தொகை வழங்காதது, போதை கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மாநகராட்சி கவுன்சிலர்களின் செயல்பாட்டால் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் திமுகவிற்கு எதிராக வரிசை கட்டி நிற்கின்றன. இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும், குறிப்பாக, முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற குரல் திமுகவில் எழுந்துள்ள நிலையில், தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அதிருப்தி ஏற்படும். அதேபோல், திமுகவுக்கு ஒதுக்கப்பட்டாலும், காங்கிரஸில் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

அதிமுக முடிவு என்ன? - இவற்றையெல்லாம் அறுவடை செய்யும் வகையில் பொது வேட்பாளரை தமாகா சார்பில் நிறுத்தவும், அந்த வேட்பாளருக்கு பாஜக தலைமையிலான என்டிஏ மற்றும் அதிமுக ஆதரவு அளிக்கும் வகையிலும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த தொகுதியில் 2021-ல் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு, 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தமாகா பொதுசெயலாளர் யுவராஜாவை வேட்பாளராக்கவும் யோசனை நடந்து வருகிறது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் தரப்பில் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. பொதுவாக ஜி.கே.வாசனுக்கும், பழனிசாமிக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்றாலும், கடந்த மக்களவைத் தேர்தலில், என்டிஏ-வுடன் வாசன் சென்றதால், இபிஎஸ் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக 11-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளதால், அந்த கூட்டத்தில், பொது வேட்பாளர் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுத் தேர்தலுக்கு வியூகம்: அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது இடைத்தேர்தலை அதற்கு முன்னோட்டமாக எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, அரசின் மீது அதிருப்தி உள்ளதை வெளிப்படுத்தினால், அதன் அடிப்படையில், பொதுத் தேர்தலுக்கான பிராச்சார களத்தை அதிமுக - பாஜக அமைத்துக் கொள்ள முடியும்.

மேலும், பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற புள்ளியில், அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்படவும் இந்த முயற்சி பலனளிக்கும். எனவே, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்கான வியூகம் என்ற அடிப்படையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பொது வேட்பாளர் என்ற, ‘பார்முலா’ தற்போது தீவிரமான பரிசீலனையில் இருந்து வருகிறது’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, அதிமுக மற்றும் ஓபிஎஸ், டிடிவி ஆதரவு வேட்பாளர்கள் தனித்தனியாக களமிறங்கிய நிலையில், பாஜக தலையிட்டு, அதிமுக வேட்பாளரை மையப்படுத்தி, களத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்