யாராக இருந்தாலும் நடவடிக்கை: அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வர் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில்,வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். யார் அந்த சார்? என்ற கேள்விக்கு ஆதாரங்கள் இருந்தால், எதிர்க்கட்சிகள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கொடுக்கலாம். அதைவிடுத்து மலிவான செயலில் ஈடுபட வேண்டாம்,” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (ஜன.8) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து இந்த அவையில், ஜெகன் மூர்த்தி, வேல்முருகன், ஈஸ்வரன், சதன் திருமலைக்குமார், கே.மாரிமுத்து, நாகை மாலி, சிந்தனைச் செல்வன், எம்.ஆர்.காந்தி, ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர். இதை பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும், என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

குற்றம் நடந்தபிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தால், அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லாலம்.ஆனால் சில மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் தொடர்புடைய ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செயல்படுவது இல்லை.

24.12.2024 அன்று பிற்பகல், சென்னை மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மறுநாள் காலை இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இது காவல்துறை எடுத்த துரிதமான, சரியான நடவடிக்கை.

ஆனால், எதிர்க்கட்சிகள், முதல் தகவல் அறிக்கை கசிந்தது தொடர்பாக பேசுகின்றனர். அதற்கு காரணம் யார்? மத்திய அரசின் கீழ் செயல்படுகிற தேசிய தகவல் மையம் (என்ஐசி). அது காவல்துறையால் உடனடியாக சுட்டிக்காட்டப்பட்டு, அதன்பின்னர் அந்த தொழில்நுட்பக் கோளாறும் சரி செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக என்ஐசி விளக்கம் அளித்து கடிதமும் எழுதியுள்ளது.

அதேபோல், பாதுகாப்பு இல்லை, கேமரா இல்லை என்று பொத்தாம் பொதுவாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மை இல்லை. சம்பவம் நடந்த இடத்தினை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் இருந்த கண்காணிப்புக் கேமிரா உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு ‘யார் அந்த சார்?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்போது இந்த புகாரை விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த புலன்விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை நூறு சதவீதம் உறுதியோடு கூறுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும்.

நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது, யார் அந்த சார்? குற்றம்சாட்டுகிறீர்களே, உண்மையாகவே அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறுங்கள். அதை யார் தடுக்கப்போகிறார்கள். அதைவிடுத்து ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில், வீண் விளம்பரம், குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம்.

இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும். இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாதது போன்ற ஒரு சதி திட்டத்தை உருவாக்க பலர் முயற்சிக்கின்றனர். இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது. காரணம், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

86 விழுக்காடு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.” என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்