மதுரை: அரிட்டாபட்டி ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், பெண்கள் மதுரைக்கு டிராக்டரகளில் திரண்டு வந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட... - மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரியும், மேலூர் முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் மேலூர் பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், பல்வேறு விவசாய சங்கங்கள் இணைந்து மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இன்று நடத்தினர்.
போலீஸாருடன் வாக்குவாதம்: இப்போராட்டத்துக்காக பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மேலூரை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் டிராக்டர், குட்டியானை உள்ளிட்ட வாகனங்களிலும், நடைபயணமாகவும் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் இன்று காலை 10 மணியளவில் கூடினர்.
» மீண்டும் பாஜக - சமாஜ்வாதி நேருக்கு நேர்: கவனம் ஈர்க்கும் அயோத்தியின் மில்கிபூர் இடைத்தேர்தல்
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மதுரைக்கு புறப்பட்டனர். சுங்கச்சாவடியில் பேரணி புறப்பட்டபோது அங்கு குவிந்திருந்த போலீஸார் மக்களை தடுத்தனர். பொதுமக்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், திருச்சி - மதுரை நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மாறியலில் ஈடுபட்டனர்.
மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக... - பின்னர் போலீஸார் அணிவகுத்து முன் செல்ல பின்னால் மக்கள் மதுரைக்கு புறப்பட்டனர். வழிநெடுகிலும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும், டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை கைவிடக்கோரியும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். போலீஸார் அனுமதி பெறாமல் பேரணி நடைபெற்றதால் வேளாண் கல்லூரி, ஒத்தக்கடை, உயர் நீதிமன்றம் அருகே போலீஸார் பேரணியை தடுக்க முயன்றனர். பொதுமக்களை கைது செய்து தங்க வைக்க திருமண மண்டபங்களையும் தயார் செய்து வைத்திருந்தனர்.
5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: இருப்பினும் தடையை மீறி பேரணி நடைபெற்றது.பேரணி சென்றவர்களுக்கு பல இடங்களில் உணவு, குடிநீர், பிஸ்கெட், குளிர்பானம் வழங்கப்பட்டது. இப்பேரணியால் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. பேரணி ராஜா முத்தையா மன்றம் அருகே வந்தபோது வாகனங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் வாகனங்களிலிருந்து இறங்கி மக்கள் தமுக்கம் மைதானத்துக்கு நடந்து சென்றனர். மதியம் 2.30 மணிக்கு மேல் பேரணி மதுரை தமுக்கத்தை அடைந்தது. அங்கு மக்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
போலீஸார் பேச்சுவார்த்தை: பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர். தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, மாநகர காவல்ஆணையர் லோகநாதன், துணை ஆணையர்கள் ராஜேஸ்வரி, அனிதா, வனிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் தலைமையில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பேரணி தொடங்கியது முதல் முடியும் வரையிலும் ஆங்காங்கே காவல்துறை வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
போராட்டம் குறித்து விவசாயிகள், பெண்கள் கூறுகையில், “தமிழக அரசு டங்க்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய போதும் தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தியுள்ளோம். திட்டம் ரத்தாகும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும். மேலூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒட்டுமொத்த விவசாயத்தை அழிக்கும் முயற்சியாக இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றினால் மேலூர் மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் போய்விடுவார்கள். எனவே திட்டத்தை உடனே ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் ஜன.26-ம் தேதி மேலூர் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்வோம்,” என்றனர்.
மேலூர் புதுசுக்காம்பட்டி வழக்கறிஞர் ஜெகதீசன் கூறுகையில், “இத்திட்டத்தால் பெரியாறு பாசன விவசாயம் அழிக்கப்படும். திட்டத்துக்காக விளைநிலங்களில் சுமார் 3 கி.மீட்டர் ஆழத்துக்கு டங்ஸ்டன் எடுக்க குழிகள் தோண்டப்படும் என்கின்றனர். இதன்மூலம் மேலூர் பகுதியில் வறட்சி ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கும். பெரிய பள்ளங்கள் தோண்டினால் பெரியாறு தண்ணீரை பிற பகுதிக்கு கடத்த முடியாது.
இப்பகுதியிலுள்ள 3 லட்சம் ஏக்கர் விவசாய பூமி பாழாகும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக டங்ஸ்டன் கிடைக்கும் இடங்களில் சுரங்கம் அமைக்காமல் 1 அல்லது ஒன்றரை சதவீதம் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்படும் மேலூர் பகுதியில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு துடிக்கிறது. இதை மாநில அரசு உறுதியாக இருந்து தடுக்க வேண்டும்,” என்றார்.
தொழில் வர்த்தக சங்கம் ஆதரவு: விவசாயிகள் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருட்கள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஜெயபிரகாசம், வேல்சங்கர், வேளாண் உணவு பொருட்கள் வணிகர் சங்கத் தலைவர் ரத்தினவேல், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
- என்.சன்னாசி, கி. மகாராஜன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago