காஞ்சிபுரத்தில் யாத்ரி நிவாஸ் அருகே செயல்படும் வாகன நிறுத்தம் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சர்வதீர்த்த குளம் அருகே ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
பக்தர்கள் தங்கும் விடுதியான யாத்ரி நிவாஸ் மற்றும் அதனுடன் இணைந்து வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட உள்ளூர் வாகனங்கள் மூலம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு, வணிக நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த வாகன நிறுத்துக்கு வரும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு ரூ.300 கட்டணமும், வேன் போன்ற சிறிய வாகனங்களுக்கு ரூ.200 கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை வசூலிக்கப்படுகிறது. இவை தவிர மோட்டார் சைக்கிளை நிறுத்த ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளி மாநில சுற்றுலா பயணிகள் பலர் வாகன நிறுத்தத்திலேயே சமையல் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் வாகன நிறுத்தத்தில் போதிய வசதிகள் இல்லை. குடிநீர் வசதி இல்லை. மீதம் மீறும் உணவுகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால் உணவு கழிவுகள் வாகன நிறுத்தத்திலேயே பல்வேறு இடங்களில் கொட்டப்படுகின்றன. மேலும் கழிவறையில் இருந்து கழிவுநீர் வெளியேறி அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த தூர்நாற்றத்திலேயே பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடும் அவல நிலை உள்ளது.
இந்த வாகன நிறுத்தத்துக்குள் வந்து பக்தர்களை ஏற்றிச் செல்ல ஒரு ஆட்டோவுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 மட்டுமே கோயில் நிர்வாகம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.50-ஐ மட்டுமே செலுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள், அருகருகே உள்ள கோயில்களை சுற்றிக்காட்டுவதற்கு ஒரு நபருக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கின்றனர்.
இவ்வளவு தொகை கொடுத்தாலும், பக்தர்களால் சிரமமின்றி பயணிக்க முடிவதில்லை. ஆட்டோவில், 10 பேர் வரை ஏற்றுகின்றனர். சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள கோயில்களை சுற்றிக் காட்டிவிட்டு ஒரு முறை செல்லும் சவாரிக்கு ரூ.1500 முதல் 2000 வரை வசூலிக்கின்றனர்.
இதனால் பல பக்தர்கள் தங்கள் மாநிலங்களில் இருந்து வருவதற்கு எவ்வளவு செலவு ஆகிறதோ அதைவிட அதிக தொகையை காஞ்சிபுரத்தில் சுற்றிபார்க்க செலவு செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வதை தடுக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணம் செய்ய வேண்டும். மீட்டர் பொறுத்தப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே வாகன நிறுத்தமிடத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தாமரை ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் கே.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டபோது, “எங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு நபருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கின்றனர். அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றுவதில்லை. இந்த ரூ.100 கட்டணத்தில் ஏகாம்பரநாதர் கோயில், உளகலந்த பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில் ஆகிய 4 கோயில்களை சுற்றிக் காட்டிவிட்டு மறுபடி அவர் வாகன நிறுத்தம் இடத்துக்கே கொண்டு வந்துவிட்டு விடுகின்றனர். சில கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் காத்திருந்து அவர்களை அழைத்து வர வேண்டும்.
இதற்கு சில மணி நேரங்கள்கூட ஆகும். இதற்கு இந்த கட்டணம் நியாயமானதுதான். ரூ.100-க்கு மேல் கூடுதலாக வசூலிக்க முடியாது. வரும் சுற்றுலா பயணிகளும் பேரம் பேசிதான் ஏறுகின்றனர். இந்த வாகன நிறுத்தத்தில் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago