திமுக - காங்கிரஸ் பரஸ்பர குஸ்தி: பரபரக்கும் கும்பகோணம் மாநகராட்சி

By சி.எஸ். ஆறுமுகம்

காங்கிரஸ் மேயருக்கும் துணை மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்களுக்கும் நடந்து வரும் பரஸ்பர குஸ்திகளால் கும்பகோணம் மாநகராட்சி பரபரத்துக் கிடக்கிறது. கும்​பகோணம் மாநகராட்​சியில் மேயராக காங்கிரஸ் கட்சியின் க.சரவணனும் துணை மேயராக மாநகர திமுக செயலாளர் சுப.தமிழழகனும் பதவியில் உள்ளனர்.

இந்த நிலையில், மாமன்றக் கூட்டங்​களுக்கான அஜெண்​டாவில் தீர்மானப் பொருள்களை சேர்ப்பது தொடர்பாக மேயருக்கும் திமுக கவுன்​சிலர்​களுக்கும் இடையே கூட்டத்​துக்கு கூட்டம் பிரச்சினை வெடித்து வருகிறது. டிசம்பர் 30-ம் தேதி நடந்த கூட்டத்​திலும், “தீர்மானங்கள் தொடர்பான கோப்பு​களைக் காட்ட வேண்டும்” என திமுக கொறடா தட்சிணா​மூர்த்தி உள்ளிட்​ட​வர்கள் கூச்சலிட்​டனர்.

இதற்கு, கோப்புகளை நாளை வழங்கு​வ​தாகச் சொல்லி​விட்டு தனது அறைக்குச் செல்ல எழுந்தார் மேயர். அப்போது தட்சிணா​மூர்த்தி, ஓடிச்​சென்று மேயரின் அறை வாசலில் வழியை மறித்து படுத்துக் கொண்டு, “பதில் சொல்லிட்டுப் போங்க” என குரல் கொடுத்​தார். பதில் பேசாத மேயர், அவரை தாண்டிக் குதித்துச் செல்ல முயன்​றார்.

அப்போது, “ஐயோ... மேயர் என்னைக் கொல்​றாரு” என அலறினார் தட்சிணா​மூர்த்தி. பதிலுக்கு மேயரும், “ஐயோ... எனக்கு நெஞ்சு வலிக்​குதே” என தரையில் அங்கி​யுடன் படுத்து உருண்டு கதறினார். உடனே, தட்சிணா​மூர்த்தி தனக்கும் நெஞ்சு வலிப்பதாக சொல்லவே, இருவரும் பாரபட்​சமில்​லாமல் மருத்​துவ​மனையில் ‘நெஞ்​சுவலி சிகிச்​சை’க்காக அட்மிட்​டாகினர்.

இதைத் தொடர்ந்து, துணை மேயர், அவரது ஓட்டுநர், தட்சிணா​மூர்த்தி இந்த மூவர் தான் எனது நெஞ்சு வலிக்குக் காரணம் என 31-ம் தேதி போலீஸில் புகாரளித்தார் மேயர். பதிலுக்கு தட்சிணா​மூர்த்தியும் போலீஸில் புகாரளித்​தார். இந்த களேபரங்கள் இரண்டு கட்சிகளின் தலைமைக்கும் எட்டியதை அடுத்து, 1-ம் தேதி அமைச்சர் கோவி.செழியன் இருதரப்​பையும் அழைத்து சமாதானம் பேசினார். அதை ஏற்று இரு தரப்பும் சமாதானம் ஆனது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மேயர் சரவணன், “நான் மேயராக பொறுப்​பேற்ற நாளிலிருந்து திமுக உறுப்​பினர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் கூட்டத்தை சுமுகமாக நடத்தவிட​மாட்​டார்கள். என்னை பேசவி​டாமல் குறுக்கே குறுக்கே பேசி கூச்சல் போட்டு திசை திருப்புவதே அவர்களுக்கு வழக்க​மாகி​விட்டது. 30-ம் தேதி கூட்டத்தின் போது திமுக கொறடா தட்சிணா​மூர்த்தி நெஞ்சில் கையால் குத்தி தள்ளியதால் தான் எனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

வலியால் நான் தவித்த போது ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் அத்தனை பேரும் வேடிக்கை பார்த்​தனர். திமுக-வைச் சேர்ந்த சோடா கிருஷ்ண​மூர்த்தி தான் என்னைத் தூக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்று அமரவைத்​தார். அதன் பிறகுதான் போலீஸில் புகாரளித்​தேன். இனி வரும் கூட்டங்​களில் திமுக-​வினரின் குறுக்கீடு இருக்காது என அமைச்சர் சமாதானம் சொன்னதால் புகாரை வாபஸ் பெற்று விட்டேன்” என்றார்.

துணை மேயர் சுப.தமிழழகனோ, “மேயரை நான் எந்தத் தொந்தரவும் செய்ய​வில்லை. அவருக்கும் தட்சிணா​மூர்த்திக்கும் கைகலப்பு வந்து​விடக்​கூடாது என்பதற்​காகத்தான் அந்த இடத்திற்குச் சென்றேன். ஆனால், நாங்கள் அவருக்கு நெருக்கடி தருவதாகச் சொல்கிறார்.

நாங்கள் அவருக்கு எந்த விதத்தில் நெருக்கடி தருகின்றோம் என்று கூறினால் நேருக்கு நேராக விவாதிக்க தயாராக இருக்​கிறோம். இது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தரப்பிலும் பேசி முடிக்​கப்​பட்டு விட்டதால் இதற்கு மேல் இதை விவாதிக்க விரும்ப​வில்லை” என்றார். திமுக கொறடா தட்சிணா​மூர்த்தி நம்மிடம், “மேயர் என்னை தாக்கியதால் பாதிக்​கப்​பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.

ஒப்பந்​த​தா​ரர்கள் தன்னை வந்து பார்த்தால் தான் தீர்மானப் பொருளில் கையெழுத்​திடுவேன் என்று மேயர் கூறுவது உண்மை. அவர் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். மக்கள் பணியாற்றி வரும் என்னை காழ்ப்பு​ணர்ச்​சி​யுடன் மேயர் பேசுவது வேதனையாக உள்ளது என கண் கலங்கி​னார்” அமைச்சர் தலையிட்​டதால் இருதரப்பும் தற்காலிகமாக வெள்ளைக் கொடி வீசி இருக்​கிறது. இது எத்தனை ​நாளைக்கு பறக்​கிறது என்று ​பார்​க்​கலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்