மன்மோகன் சிங்கின் பொருளாதார திட்டங்களே இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம்: ஸ்டாலின் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: “மிக நெருக்கடியான நேரத்தில் இந்திய நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பெற்றவர் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது” என்று சென்னையில் நடந்த மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வும் முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி இன்று (ஜன.7) நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு, அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக விளங்கியவர் மன்மோகன் சிங். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தூணாக விளங்கியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இரு முக்கியமான தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இவர்களுடைய இழப்பு ஒருவகையில் பெரிய இழப்பாக அமைந்திருக்கிறது.

நாட்டுக்காக மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற முறையில் எனக்கு இது மிகப்பெரிய இழப்புதான். மன்மோகன் சிங் பிறவி அரசியல்வாதி அல்ல. ஆனால், இளங்கோவன் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியாரின் பேரன், ஈ.வி.கே.சம்பத்தின் மகன், அரசியல் குடும்பத்தில் பிறந்து, இறுதிவரை அரசியல் வானில் வலம் வந்தார்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராகவும் இடம்பெற்றிருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர். இருபெருந்தலைவர்களை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம். மன்மோகன் சிங்-கைப் பொறுத்தவரை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவராக மதிக்கப்பட்டவர். அவர் நினைத்திருந்தால், எந்தக் கவலைகளும் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும்.

அவரைப் போன்ற பொருளாதார மேதைகள், சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக அரசியலில் நுழைந்து நிதி அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். அதுவும், மிக நெருக்கடியான நேரத்தில் இந்திய நாட்டின் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கிக் கொடுத்த பொருளாதாரத் திட்டங்கள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

2004-ம் ஆண்டு பிரதமர் நாற்காலி அவரைத் தேடி வந்தது. அவரை வந்து சேர்ந்தது. அந்த தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, அன்றைக்கு பிரதமர் பொறுப்பை சோனியா காந்திதான் ஏற்கவேண்டும் என்று அனைத்து தலைவர்களும் சொன்னார்கள். ஆனால் பிரதமர் பதவியை அவர் மறுத்து, அதை மன்மோகன் சிங்குக்கு கொடுத்ததுதான் சோனியா காந்தியின் பெருந்தன்மை.

வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மன்மோகன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, மொத்தம் பத்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து அவர் ஆட்சியை நடத்தக் காட்டியிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் பல்வேறுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் எண்ணில் அடங்காதது. ஒவ்வொன்றும் மகத்தானவையாக அமைந்தது.

மறைந்த முதல்வர் கருணாநிதியிடத்தில் நெருங்கிப் பழகி, நட்போடு அவர் இருந்தது யாராலும் மறுக்க முடியாது. அதுதான் இத்தனை திட்டங்களை தமிழகத்துக்கு நாம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழகத்தின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்கள், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார். அந்த வகையில் பார்த்தால், மன்மோகன் சிங் இறப்பு என்பது தமிழகத்துக்கு மிக மிக மிக பெரும் இழப்பு.

ஈவிகேஎஸ் இளங்கோவனுடைய மறைவு என்பது நிச்சயமாக சொல்கிறேன் என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ‘உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது’ என்றுதான் கேட்பார். நானும் திரும்ப அவரிடத்தில் அதை தான் கேட்பேன். “நீங்கள் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்” என்றுதான் சொல்வேன். சொன்னார், ‘நீங்கள் எல்லோரும் சேர்ந்து என்னை எம்.எல்.ஏ.-ஆக ஆக்கி இருக்கிறீர்கள், அந்த நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன், உழைப்பேன் உழைப்பேன்’என்று உறுதியுடன் கூறினார். ஆனால், உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு சென்றபோதும், அவருடைய வீட்டாரிடத்தில் சொல்லியிருக்கிறார். ‘என்னைச் சந்திக்க வேண்டும்’என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த செய்தி கிடைத்தவுடன் நான் உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால், அவர் பேச முடியாத நிலையில் இருந்தார். ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால், அவரால் பேச முடியவில்லை. அதைத்தான் இன்றைக்கு நினைத்துப் பார்க்கிறேன். அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா மறைந்தபோது நான் வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன். மகன் மறைந்ததால் இளங்கோவன் போட்டியிட்டு, அவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். அதனால்தான் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு என்று நான் கூறினேன்.

திமுக-வை விட்டு சம்பத் விலகிய பிறகும், அவரை அண்ணா விமர்சிக்கவில்லை. அதேபோல் சில நேரங்களில் இளங்கோவனும் மறைந்த முதல்வர் கருணாநிதியை அரசியல் சூழல் காரணமாக விமர்சிப்பார். ஆனால், அவர், அவரைப்பற்றி எதுவும் பேச மாட்டார். காரணம், 'சம்பத் பையன்தானே' பேசட்டும் என்று பெருந்தன்மையோடு இருப்பார். மனதில் உள்ளதை மறைக்காமல் ,அதே நேரத்தில் துணிச்சலாக, தெளிவாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஆதரித்தாலும் சரி, எதிர்த்தாலும் சரி அதைச் சரியாக, உறுதியாக செய்யக் கூடியவர் அவர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மிகத் தெளிவாக மேடைகளில் அவர் விளக்கிப் பேசினார். அதைவிட மற்றொன்றையும் கூறினார். “இதுதான் உண்மையான காமராசர் ஆட்சி”என்று அவர் வெளிப்படையாக கூறியவர்தான் அவர். தேசிய குடும்பத்தில் பிறந்து, தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த இளங்கோவன் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த நற்சான்றுப் பத்திரம் அது என்பதை நான் இப்போதெல்லாம் நினைத்து நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக என்று எந்தப் பதவியில் இருந்தாலும் அந்தப் பதவியில் முத்திரைப் பதித்தவர் நம்முடைய இளங்கோவன்.

மன்மோகன் சிங்கும் எவ்வளவு நெருக்கடியான நேரத்திலும் நாடாளுமன்றப் பணிகளில் பங்கெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அங்கு பங்கெடுத்து பதிலும் அளித்திருக்கிறார். வயது முதிர்ந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தவர் நம்முடைய மன்மோகன் சிங். இப்படிப்பட்ட இரு தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்