ஆளுநர் வெளிநடப்பு முதல் குரல் வாக்கெடுப்பு தீர்மானம் வரை: பேரவையில் நடந்தது என்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்து அளித்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறினார்.

கடந்த 2023, 2024-ம் ஆண்டுகளில், முதல் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையில் சில தகவல்களை சேர்த்தும், சிலவற்றை தவிர்த்தும் வாசித்தார். இதையடுத்து, அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. காலை 9.23 மணிக்கு சட்டப்பேரவை கட்டிடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை, பேரவைத்தலைவர் மு.அப்பாவு, பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, ஆளுநருக்கு சென்னை காவல்துறையின் மரியாதை அளிக்கப்பட்டது. முன்னதாக முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அவைக்குள் வந்தனர். பேரவையில 9.30 மணிக்கு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதையடுத்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேலமுருகன், காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சமீபத்திய பிரச்சினை தொடர்பாக கோஷங்களை எழுப்பி ஆளுநர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, ஆளுநர் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசிவிட்டு 9.33 மணிக்கு அவையில் இருந்து வெளியேறி, ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் மாளிகை விளக்கம்: இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் புனிதத்தை ஆளுநர் எப்போதும் நிலைநாட்டி வருகிறார்.சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படவில்லை. இசைக்கப்படவும் இல்லை. இதுகுறித்து ஆளுநர் பேரவைக்கு மரியாதையோடு நினைவூட்டி னார். அதோடு, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என பேரவைத் தலைவருக்கும் முதல்வருக்கும் ஆளுநர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஆளுநரின் வேண்டுகோள் கசப்புணர்வுடன் மறுக்கப்பட்டது.

ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாதது அல்லது இசைக்கப்படாதது இந்திய அரசியல் சாசனத்துக்கும் தேசிய கீதத்துக்கும் இழைக்கப்பட்ட அப்பட்டமான அவமரியாதை. இதைத் தொடர்ந்து மிகுந்த வேதனையுடன் பேரவையைவிட்டு ஆளுநர் வெளியேறினார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்களை பேரவைத்தலைவர் உத்தரவுப்படி அவைக் காவலர்கள் வெளியேற்றினர். அதன்பிறகு பாமக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, பேரவைத்தலைவர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். பிறகு, பேரவை முன்னவர் துரைமுருகன், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக தேசியகீதம் பாடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவில், ‘‘கடந்த ஆண்டுகளில் அரசின் உரையில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர், இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழக மக்களையும், அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழக பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா’’ என தெரிவித்துள்ளார்.

‘ஜனநாயகத்துக்கு நல்லதல்ல' - ஆளுநர் மாளிகை வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘‘பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள், பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதி களின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். அதற்கு பதில் மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமை வெட்கக் கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்