பெண்களின் பாதுகாப்பு முதல் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் வரை: ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு இயக்கம் தொடங்கி 6 ஆண்டுகளில், தலா 3.50 லட்சத்தில் கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலக்கு வரை பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:

பெண்களின் பாதுகாப்பு: சட்டம் - ஒழுங்கை சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராக பாரபட்சமற்ற கடுமையான அணுகுமுறையை அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

மாநிலத்தில் அமைதி நிலவவும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பெண்கள் அதிகளவில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நாட்டின் மொத்தப் பெண் தொழிற் பணியாளர்களில் 41 சதவீதம் பெண்கள் தமிழகத்தில் உள்ளனர்.

1000 பேருக்கு 25 மருத்துவர்கள்: சுகாதாரத்துறையில் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 299 அரசு பொது மருத்துவமனைகள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்களின் மூலம் வலுவான மருத்துவக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம்.

தமிழகத்தின் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான விகிதம் 25:1000 என்ற உயர் அளவில் அமைந்துள்ளது. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் மாநிலத்தின் பல்வேறு சுகாதாரக் குறியீடுகளை மேம்படுத்தியுள்ளன. உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் 15 லட்சம் நபர்கள் உயர்தர சிகிச்சை தமிழகத்துக்கு வருகின்றனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 எனும் திட்டத்தில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், கட்டணமில்லா மருத்துவ சேவையைப் பெறுவதற்கான தனிநபர் உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு சட்டம்: 2024-ம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்திற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது. அவர்களின் குடியிருப்புகளையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் வகையில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை அளித்திட தொல்குடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோருக்கு கடனுதவி வழங்குவதற்காக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான முதலமைச்சரின் சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பினை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன், இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நமது கோரிக்கையை மத்திய அரசானது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

முதுகலை பட்டப்படிப்பு வரையிலும் மாற்றுத்திறனாளிகள் படிக்க அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை அண்மையில் அரசு இருமடங்காக உயர்த்தியுள்ளது.

தமிழகத்தின் மரபுசார் கைவினைத் தொழில்கள் மற்றும் இதர சிறுதொழில்களை மேம்படுத்திட கலைஞர் கைவினைத் திட்டத்தை அண்மையில் அரசு தொடங்கியுள்ளது.

தமிழகம் நாட்டின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழ்கிறது. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பங்கு கடந்த 40 ஆண்டுகளில் 9.21 சதவீதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு சான்று. இந்த வெற்றிப்பாதையில் மேலும் முன்னேறும் வகையில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழக அரசு இலக்காக கொண்டுள்ளது.

மகளிர் உரிமை திட்டம்: கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்துவதில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகையை அரசு வழங்கி வருகிறது. இக்குடும்பங்களின் வறுமையை இத்திட்டம் குறைத்துள்ளது. பெண்களுக்கு உரிய உரிமையும், அதிகாரமும் அளித்ததன் மூலம் பெண்களை நிலை உயர்ந்துள்ளது.

மகளிர் விடியல் பயண திட்டத்தில் இதுவரை 5.71 கோடிக்கும் மேலான பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திட்டத்தின் பயனாக ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் ரூ.888 சேமிப்பதுடன் பணிச்சூழலில் பெண்களின் பங்களிப்பும் மேம்பாடு அடைந்துள்ளது மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

முதல்வரின் காலை உணவு திட்டம் கிராமப்புறங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளை தொடர்ந்து, அரசு உதவி பெறும் 3995 தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 34,987 தொடக்கப்பள்ளிகளில் 17.53 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

ஏஐ இயக்கம்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு முதன்மையான இடத்தை தமிழகம் பெற வேண்டுமென தமிழக அரசு விரும்புகிறது. இதற்காக, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழகத்தை நிலைநிறுத்தும்.

தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4,115 கோடி கடன்: தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்திடவும், கடன்களுக்கான உத்தரவாதங்களை நிதி நிறுவனங்களுக்கு வழங்கிடும் வகையிலும், ‘தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம்’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 2023-24 ஆம் நிதியாண்டில் ரூ.4,115 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100 சதவீதம் அதிகம்.

புத்தொழில்கள்: தமிழ்நாடு புத்தொழில் இயக்க நிதியம், ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கான புத்தொழில் நிதி மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை போன்ற மாநில அரசின் திட்டங்களின் மூலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தொழில்கள் தொடங்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

ரூ.576 கோடி உதவித்தொகை: பல்வேறு துறைகளில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளின் மூலம் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 2.85 லட்சம் தொழிலாளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 46 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் மட்டும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் 6.88 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.576 கோடி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தாயுமானவர் திட்டம்: 2019-21-ம் ஆண்டுகளுக்கான 5-ம் கட்ட தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழக மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, தேசிய சராசரியான 14.96 சதவீதத்தைவிட மிகக் குறைவு ஆகும்.

இருப்பினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான இறுதி முயற்சியாக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழக அரசு தொடங்கவுள்ளது. மருத்துவம், வீட்டுவசதி, கல்வி வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்குவதன் மூலம் முதல்கட்டமாக 5 லட்சம் மிகவும் வறிய குடும்பங்களை மேம்படுத்துவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

ஆதரவற்ற தனி நபர்கள், முதியவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஒற்றைப் பெற்றோர் கொண்ட குடும்பங்கள், மாற்றுத்திறன் கொண்டவர்கள், மனவளர்ச்சிக் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட மிகவும் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வடசென்னை வளர்ச்சித் திட்டம்: சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற லட்சிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது சென்னையிலுள்ள வளர்ச்சி குறைந்த பகுதிகளை மேம்படுத்தவும், மாநகரின் வளர்ச்சிப் பாதையில் அவற்றை ஒருங்கிணைக்கவும் முயல்கிறது.

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6,309 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள், மருத்துவமனை கட்டிடங்கள், நீர் நிலைகள், பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், பேருந்து முனையங்கள் போன்ற 252 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டம்: நகர்ப்புற சுற்றுச்சூழலை மேம்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 18 மாநகராட்சிகள் மற்றும் 93 நகராட்சிகளில் உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டங்களை மாநில அரசு தொடங்கி உள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளாக குவிந்துள்ள பழைய கழிவுகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் பூங்காக்களாகவும், பசுமைப் பகுதிகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பொருநை அருங்காட்சியகம்: கீழடி அருங்காட்சியகத்தைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களைக் கொண்டு, திருநெல்வேலியில் உலக தரம்வாய்ந்த பொருநை அருங்காட்சியகம் நிறுவுவதன் மூலம் தமிழ்ப் பண்பாட்டின் வளமான, காலத்தைக் கடந்து நிற்கும் பழம் பெருமையினை உலக்கு வெளிப்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், ராஜேந்திர சோழனின் கடல் கடந்த வெற்றிப் பயணம் மற்றும் அயல்நாட்டு வணிகத் தொடர்புகளை நினைவுகூறும் வகையில், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வரப்படுகிறது. தற்போது எட்டு இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளும் கொற்கை துறைமுகப் பகுதியில் முன்கள ஆய்வும் நடைபெற்று வருகின்றன.

புதுமைப்பெண், தமிழ் புதல்வன்: உயர்கல்வி சேர்க்கையில் மருத்துவம், பொறியியல், விவசாயம் உள்ளிட்ட தொழில்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 35,500 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தால் 4.25 லட்சம் மாணவிகளும், அரசு பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தால் 3.52 லட்சம் மாணவர்களும் பயன் அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களை திறன்வாய்ந்தவர்களாக உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தால் இதுவரை 2 கோடியே 58 லட்சத்து 597 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். விளையாட்டுத்துறையிலும் தமிழக அரசு மாபெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போன்ற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்துக்கும் விலையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்குதல், முன்னெப்போது் இல்லாத வகையில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை திட்டங்கள், விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு என விளையாட்டு துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் முதலீட்டுத் திட்டங்கள்: சுமார் 11,500 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.7,500 கோடிக்கும் மேலான முதலீடுகளை ஈர்த்து அண்மையில் முதல்வர் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் பெரும் வெற்றியடைந்துள்ளது. தமிழக அரசின் அயராத முயற்சியால், 2021-ம் ஆண்டுமுதல் இதுவரை ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

புதிய தொழிற்பூங்காக்களை உருவாக்கத் தேவைப்படும் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு, இதுவரை 14 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, பெரம்பலூர், தருமபுரி, தேனி மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

8 லட்சம் கான்கிரீட் வீடுகள்: 2024-25-ம் ஆண்டு தொடங்கி அடுத்த ஆறு ஆண்டுகளில், தலா 3.50 லட்சத்தில் கிராமப்புறங்களில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற குறிக்கோளுடன் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பிரதமர் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2016-ம் ஆண்டில் வீடு ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட 1.20 லட்சம் கடந்த எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தமிழகத்தில் பிரதமர் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒன்றிற்கு வழங்கப்படும் மானிய தொகையானது ரூ.2.82 லட்சமாக உயர்த்தப்பட்டு, மாநில அரசின் பங்களிப்பு 1.72 லட்சம், அதாவது மொத்த மதிப்பில் 60 சதவீதம் என்பது, நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின்கீழ் உரிய நிதியை விடுவிக்கக்கோரி தொடர்ந்து முறையீட்டும் புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்காததை காரணமாக கூறி, மத்திய அரசு நடப்பு ஆண்டில் இதுவரை எந்தவொரு நிதியையும் விடுவிக்கவில்லை.

ரூ.2152 கோடி அளவில் உள்ள இந்நிலுவைத்தொகை ஆசிரியர்களின் ஊதியம், பள்ளிக்கட்டிடங்களை பராமரித்தல், மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி கட்டணத்தை திரும்பச் செலுத்துதல், உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு மிகவும் இன்றியமையாதது.

மத்திய அரசு நிதியை ஒதுக்காததால் மாநில அரசு தனது சொந்த நிதியில் ஆதாரங்களில் இருந்தே இத்திட்டத்துக்கான ஒட்டுமொத்த செலவையும் ஏற்க வேண்டியுள்ளது. இதனால், மாநில அரசின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் மாணவர்கள், 2.2 லட்சம் ஆசிரியர்கள், 21, 278 பணியாளர்கள் ஆகியோரின் எதிர்காலம் மத்திய அரசு நிதியையை சார்ந்துள்ளது. எனவே, ஆசிரியர்கள், மா்ணவர்கள் நலன் கருதி மத்திய அரசு இந்நிதியை விரைவில் விடுவிக்கும் என மாநில அரசு நம்புகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்