டெல்லிக்கும் கோவைக்குமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் பாஜக-வின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வாகவும் தனது கடைமையை செவ்வனே செய்துவருகிறார். திமுக அரசுக்கு எதிராக அழுத்தமான விமர்சனங்களையும் சமரசமில்லாது முன்வைத்து வரும் வானதி, ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த நேர்காணல் இது
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசின் தவறுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
முதல் தகவல் அறிக்கை வெளியானது காவல்துறையின் முதல் தவறு. இதன் மூலமாக, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க அச்சப்படும் சூழல் ஏற்படும். இந்த வழக்கில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னாலும், அவர் ‘சார்’ என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்திய நிலையில், அவருக்கு பின்னால் என்ன ‘நெட்வொர்க்’ உள்ளது என்பதை அரசு ஆராய்ந்து மக்களுக்கு சொல்ல வேண்டும். அந்த ‘சார்’, யாராக இருந்தாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய தகவல் முகமையில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாகவே, எஃப்ஐஆர் நகல் வெளியானதாகச் சொல்லப்படும் நிலையில், அரசின் மீது எப்படி குற்றம் சாட்ட முடியும்?
அரசுத் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பாதுகாப்பானதாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டியது மாநில அரசின்கடமை. தங்கள் மீது இருக்கும் பொறுப்பை, தங்களுக்கு இருக்கக்கூடிய கடமையை, செய்த தவறை மறைப்பதற்காக இதுபோன்று ஜால்ஜாப்பு சொல்கிறார்கள். அதோடு, பாஜக உட்பட எந்தக் கட்சியாக இருந்தாலும், தங்களோடு இருப்பவர்கள் குற்ற பின்னணி கொண்டவர்களா என்பதை சரிபார்த்துக் கொள்வதும் அவசியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
இதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி உள்ளதே?
தன்னை மிகவும் பாதித்த விஷயம் என்பதால் அவர், உணர்வுபூர்வமான ஒரு முடிவை எடுத்திருக்கிறார். மக்களிடம் கருத்தைச் சேர்ப்பதற்காக போராட்ட வடிவத்தை இந்த முறையில் அமைத்துள்ளார். பிரிவினைவாதிகளையும், தீவிரவாதிகளையும் கண்டு கொள்ளாத தமிழக அரசு, ஜனநாயக வழியில் போராடும் அரசியல் கட்சியினரை, மோசமான முறையில் கைது செய்து வருகிறது. மதுரையில் நீதிகேட்கும் போராட்டம் நடத்திய பாஜக மகளிரணியினரை கைது செய்து ஆடுகள் அடைக்கும் பட்டியில் அடைத்தது ஜனநாயக விரோதம். இதற்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள்.
கோவையில் பாஜக-வின் முகமாக நீங்கள் இருக்கையில், அண்ணா மலையும் கோவையை மையப்படுத்தி அரசியல் செய்வது குறித்து..?
எங்கள் கட்சியில் எல்லோருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் அணி தேசியத் தலைவராக எனக்கு நாடு முழுவதும் வேலை கொடுத்துள்ளனர். மாநிலத் தலைவராக அண்ணாமலைக்கு இங்கு கட்சியை வளர்க்க வேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியை வளர்ப்பது தான் எங்கள் இருவரின் நோக்கம். திமுக மாதிரி, ஒவ்வொரு ஏரியாவையும் ஒவ்வொருத்தருக்கு பிரித்துக் கொடுக்கும் பழக்கம் இங்கு இல்லை.
கோவையில் மீண்டும் பாஜக மத அரசியலைக் கையில் எடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் இறக்கும்போது அவருக்கு அரசியல் கட்சிகள் செய்யும் மரியாதை என்பது, சமுதாயத்தில் எந்தவிதமான புரிதலை ஏற்படுத்தும்? குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தை பற்றி என்றைக்காவது இந்தக் கட்சிகள் பேசினார்களா? அவர்களின் இந்த தவறான சிந்தனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்குமா... உங்களுக்கு போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?
தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் மாநிலத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம். எனக்கு அந்த எண்ணம் இல்லை. தேர்தல் அறிவித்தாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் மாநில தலைவர் தேர்வு நடப்பதுதான் வழக்கமாக உள்ளது.
என்டிஏ கூட்டணில் மீண்டும் அதிமுக சேர வாய்ப்புள்ளதா?
யார் பாஜக-வை விரும்பினாலும், யார் பிரதமர் மோடி அவர்களை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் அத்தனை பேரையும் என்டிஏ வரவேற்கும். அதேசமயம் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தேசியத் தலைமை தான் எடுக்கும்.
உங்களுக்கும் அண்ணாமலைக்கும் கருத்து முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறதே?
பாஜக-வில் ஏதாவது பிரச்சினை வராதா என்று எதிர்பார்த்து காத்திருப்போர் இதனை நீண்ட நாட்களாகச் சொல்லி வருகின்றனர். பாஜக-வில் நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். நான் மட்டுமல்ல, எனது கணவர் உட்பட என் குடும்பமே இந்த இயக்கத்திற்காக வந்துவிட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எப்படி பணியாற்றுவது என்பதையும் நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
அண்ணாமலை வெளியிட்ட ‘திமுக ஃபைல்ஸ்’ ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லையே?
அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மத்தியில், மாநிலத்தில் இருக்கக்கூடிய புலனாய்வு அமைப்புகள் ஆதாரங்களைக் கேட்டால், மாநிலத் தலைவர் நிச்சயம் கொடுப்பார். எந்த வழக்கு எப்போது உயிர் பிடிக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என பெண்களுக்கான தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுவது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி தானே?
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய பிரதேச பாஜக அரசுதான் முதலில் கொண்டு வந்தது. திராவிட மாடல் அரசு அதைப் பார்த்து ‘காப்பி’ அடித்துள்ளது. பொதுவாக, தமிழகத்தில் மகளிருக்கான பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. அதற்கு திராவிடம் தான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. அதேசமயம், தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு, காப்பீட்டுத் திட்டங்கள் போன்றவற்றை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதையும் மறுக்க முடியாது.
அனைத்துக் கட்சிகளிலுமே வாரிசு அரசியல் தவிர்க்கமுடியாத போது திமுக-வை மட்டும் குறிவைத்து தாக்குவது சரியா?
சமூக நீதிதான் எங்களுக்கு உயிர் மூச்சு என்று திமுக சொல்கிறது. ஆனால் திராவிட மாடலில், குடும்ப அரசியல், வாரிசு அரசியல்தான் சமூக நீதியாக மாறிவிட்டது. பாஜக தேசிய தலைவராக ஜே.பி.நட்டா உள்ளார். அவருக்கு பின் அவர் மகன் தலைவராக முடியாது. நட்டாவின் பதவிக் காலம் முடிந்ததும், யார் தலைவராக வருவார் என்பதே தெரியாது. ஆனால், உதயநிதிக்கு போட்டியாக வேறு யாராவது திமுக-வில் வாய் திறந்து பேச முடியுமா?
இரு மொழிக் கொள்கையில் படித்த உங்களைப் போன்றவர்கள் உயர்ந்த பதவிகளுக்கு வந்திருக்கும் போது அதை ஏற்பதில் உங்களுக்கு ஏன் தயக்கம்?
தமிழகத்தில் எந்தப் பள்ளியாக இருந்தாலும் இரு மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்படும் என்று அரசு சட்டம் இயற்ற முடியுமா? திமுக பிரமுகர்களின் பள்ளிகளில் ஆரம்பித்து, அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால், இவர்கள் செய்யும் மோசடி அரசியலால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு மொழியறிவு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
திமுக கூட்டணி எம்எல்ஏ-க்களே தங்களின் கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என புலம்பும் நிலையில், நீங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை முதல்வர் பரிசீலிக்கிறாரா?
சில கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலவற்றை பரிசீலனையில் வைத்துள்ளார்கள். சிலவற்றிற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லி விட்டனர். நாங்கள் மக்களுக்கு எது தேவையோ, அதைச் சொல்வதால் எங்களது கோரிக்கைகளை ஏற்கிறார்கள் என நினைக்கிறேன்.
பாஜக-வில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுக-வில் சேர்ந்து விட்டார். நடிகை குஷ்பு, தான் புறக்கணிக்கப்படுவதாக புழுங்குகிறார். தமிழக பாஜக மகளிர் அணியில் ஏதாவது பிரச்சினையா?
கவுதமி மிகச்சிறந்த, கடினமான உழைப்பாளி. அவர் கட்சியிலிருந்து வெளியேறிய போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். குஷ்புவைப் பொறுத்தவரை நான் எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வந்து விடுவார். கட்சி ரீதியாக, ஒரு சிலரை அழைப்பது, மறுப்பது என்பதெல்லாம் மாநில அளவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago