சென்னை: தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். நவீன தாராளமய பொருளாதார பாதை உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரிசெய்வதற்கான வல்லமை இடது மாற்றுகே உண்டு.
இடது ஜனநாயக மாற்று மட்டுமே தமிழக மக்களுக்கான உண்மையான விடியலாக அமைந்திடும். இந்த வரலாற்று மாற்றத்தை சாதிக்க ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள், அனைத்துத்தரப்பு உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் மனிதநேய சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறையினர் என அனைவரும் முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
இதுகாறும் ஒன்றிய அரசு பின்பற்றி வந்த கொள்கைகள் தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வந்துள்ளன. அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசின் மக்களுக்கு விரோதமான கொள்கைகள் தமிழகத்திலும் அமலாக்கப்பட்டு வந்துள்ளன. அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கி வருகிற பாதையில் தான் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் பயணித்து வந்துள்ளன
» தமிழகம் முழுவதும் பாஜக மாவட்ட தலைவர் தேர்தல் தொடக்கம்
» சில நிமிடங்களில் முடிந்த பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு - பொதுமக்கள் ஏமாற்றம்
தமிழக வரலாற்றில் மக்களிடையே அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்துள்ள திராவிட இயக்கம் மற்றும் அதன் கட்சிகள் சமூக தளத்தில் சீர்திருத்தங்களையும் சில முன்னேற்றங்களையும் சாதித்துள்ளது உண்மையே எனினும், பிரதேச முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாத்து வந்துள்ள இந்தக் கட்சிகள், உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி கொண்டிருக்கிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை உறுதிப்படுத்த தவறிவிட்டன.
இத்தகைய சூழலில் மாற்றுக் கொள்கைகள் இன்றியமையாத தேவையாக உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி அளிக்காதது, மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி திணிப்பு என கூட்டாட்சி முறைக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது அவற்றை வலுவாக எதிர்க்கிறது. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வகுப்புவாத நடவடிக்கைகளையும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திமுகவின் இத்தகைய நிலைபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
அதேநேரத்தில், நவீன தாராளமய பொருளாதார பாதையில் திமுக அரசு பயணித்து வருகிறது. குறிப்பாக, தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல முக்கிய துறைகளில் வெளிமுகமை நிறுவனங்கள் வழியாக பணியமர்த்துவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காதது. சொத்துவரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியது போன்ற தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வது தவறானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழகத்தில் வேலையின்மை, நிரந்தர பணியிடங்கள் ஒழிப்பு, பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறை, பட்டியல் பழங்குடியின மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. மேலும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது. காவல்துறை அத்துமீறல்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, இவற்றிற்கு எதிராக மக்கள் வலுவான ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக குரலெழுப்பி போராடும். கட்சி நடத்தும் போராட்டங்களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் பேராதரவு அளிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து உறுதியான மக்கள் இயக்கம் கட்டுகிற பணியில் மார்க்சிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். மாநிலத்திற்குரிய நிதிபங்கீட்டை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தும் மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் பாதுகாப்பதற்கும் வலுவான குரலை எழுப்பிடும். அதே நேரத்தில் தமிழகத்தில் கீழ்க்கண்ட மக்கள் நலன் காக்கும் பிரச்சனைகளில் மாற்று நடவடிக்கைகளுக்காக குரலெழுப்பும்.
• தொழிலாளர் நலன் பாதுகாப்பு, முறைசாரா தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது. சமூக பாதுகாப்போடு கூடிய வேலை வாய்ப்பை உருவாக்குவது,
• விவசாய விளை பொருட்களுக்கு நியாய விலை உறுதி செய்வது, 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூலி உயர்வு வேலை நாட்களை அதிகரிக்கச் செய்வது, நகர்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தலை எதிர்ப்பதோடு, கிராமப்புறங்களில் நில மறுவிநியோகத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது.
• அரசுத்துறை மற்றும் பொதுத்துறையில் ஒப்பந்தம். மதிப்பூதியம், தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர். மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது, அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது. வெளிமுகமை என்கிற அடிப்படையில் பணியமர்த்தப்படும் அரசாணைகள் ரத்து செய்வது,
• இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சூறையாடுவதை கைவிடக் கோரியும் தமிழகத்தின் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும், வலியுறுத்துவது,
• மாநில நலன்களுக்கு விரோதமாக அந்நிய மூலதனத்தை வரன் முறையற்ற ஏராளமான சலுகைகளை அளித்துக் கொண்டு வருகிற அரசின் கொள்கைகளை எதிர்ப்பதோடு, உள்நாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது,
• கடந்த காலங்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை அளித்து வந்திருக்கக் கூடிய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிமிண்ட் ஆலைகள் பல நலிவடைந்து உரிய கவனம் செலுத்தப்படாமல் உள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்க கூடுதலான நிதி ஒதுக்கி செயல்படுத்துவது, இந்நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பை விரிவுபடுத்துகிற வகையில் சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாத்து, அந்தத் துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது.
• பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவது, மதசார்பற்ற, அறிவியல் பூர்வமான, தரமான கல்வி அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவது,
• அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சுகாதாரக் கட்டமைப்பை பரவலாக்குவது,
• மக்கள் மத்தியில் வகுப்புவாத மதவெறி பிரச்சாரம் மேற்கொள்ளுகிற சக்திகளையும் சாதிய சமூக ஒடுக்குமுறைகள், தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து கருத்தியல் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பது, கருத்துரிமை பாதுகாப்பது. மதச்சார்பற்ற மாண்புகளை போற்றிப் பாதுகாப்பது,
• தமிழ் மொழி வளர்ச்சியை முன்னெடுப்பது. தமிழக பண்பாட்டின் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடித்து மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பது.
இவ்வாறான இடதுசாரி ஜனநாயக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து கட்சி தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை விரிவான அளவில் திரட்டும். இடது மாற்றினை உருவாக்கிட நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராகவும் மக்களை பிளவுப்படுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுமிக்க வர்க்கப் போராட்டங்களை இதர ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்போடு மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
அகில இந்திய அளவில் மாற்றாக உருவாகும் இடது ஜனநாயக அணியின் பகுதியாக தமிழகத்தில் வலுவான ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றினை கட்டமைக்க மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடும். "ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடித்துவிட்டால் அது பௌதீக சக்தியாக மாறும்' என்பது பேராசான் காரல் மார்க்சின் கூற்று. இதற்கேற்ப தமிழகத்தில் இடதுமாற்றுக் கொள்கைகளை தமிழக மக்கள் ஆதரித்து இடதுசாரி இயக்கத்தை வலுப்பெறச் செய்திடுவார்கள்.
இதற்காக தமிழகத்தில் இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படவும். மக்கள் ஆதரவை உறுதியாக திரட்டிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த மேலான லட்சியத்தை அடைய தமிழக மக்கள் பேராதரவு நல்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டி கேட்டுக் கொள்கிறது. தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்று மலரட்டும்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago