மதுரை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவத்துக்கு முதல்வர் நேரடியாக மன்னிப்பு கேட்கும் வரை விடாமல் போராடுவோம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு ஆவேசமாக பேசினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை முதல் சென்னை வரை நீதி யாத்திரை நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இந்த யாத்திரைக்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி யாத்திரை நடைபெறும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் (கண்ணகி கோயில்) அருகே இன்று காலை பாஜக மகளிரணியினர் கூடினர். பாஜக மாநில மகளிரணித் தலைவர் உமாரவி தலைமையில் யாத்திரையை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: “பாஜக மகளிரணி கூட்டத்தை பார்த்து திமுகவினர் பயந்து போய் வீட்டில் முடங்கியுள்ளனர். இக்கூட்டம் திமுகவினரைப் போல் பணம் கொடுத்தோ, பிரியாணி கொடுத்தோ கூட்டப்பட்டது அல்ல. நீதிக்காக போராட வந்த கூட்டம்.
பெண் குழந்தைகள் வைத்துள்ளவர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த வன்கொடுமையால் தெருவுக்கு வந்துள்ளனர். விளம்பரத்துக்காக பாஜக போராடுவதாக திமுகவினர் கூறுகின்றனர். பாஜவுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. உலகின் சிறப்பாக ஆட்சி செய்யும் கட்சி பாஜக. சிறந்த தலைவர் மோடி என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு தான் விளம்பரம் தேவை.
ஒவ்வொரு இடத்திலும் கையில் பேப்பர் வைத்துப் படிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களை பாதுகாப்பது இப்படித்தானா? தேர்தலுக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல விஷயங்களை சொன்னீர்கள். நேற்று கூட பெண்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். பெண்களை காப்பாற்ற வக்கில்லாமல், புதிய திட்டங்களை கொண்டு வந்து என்ன பயன்? பெண்களை முதலில் காப்பாற்றுங்கள்.
பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். பெண்களுக்கு சுயமரியாதை சொல்லிக்கொடுத்தவர் கருணாநிதி. அவர் குடும்பத்தில் இருந்து வந்தவரா நீங்கள்? உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். கூட்டத்துக்கு போனால் போதும், கையில் பேப்பர் வைத்துப் படித்தால் போதும் என இருக்கிறீர்கள். அனைத்தும் பொய், பித்தலாட்டம். நான்கு ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுகிறார். மத்திய அரசின் நிதி எவ்வளவு வந்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்தால் ஒரு முதல்வர் என்ன செய்ய வேண்டும். கட்சிக்கு அப்பாற்பட்டு முதல்வர் என்ற முறையில் என் மண்ணில், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் பெண்ணுக்கு ஒரு பிரச்சினை வந்தால் ஒரு சகோதரனாக துணை நிற்பேன் என சொல்லிருக்க வேண்டும். அதை செய்யாமல் பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் போலீஸார், ஒரு சார் சொன்னதால் ஞானசேகரனை விட்டோம் எனக் கூறியுள்ளனர். யார் அந்த சார். இந்தக் காலத்தில் செல்போன் மூலம் எதையும் கண்டுபிடித்துவிட முடியும். அந்த சார் யார் எனக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளனர். போலீஸாருக்கு அதிகாரம் இல்லையா?
பெண்கள் வெளியே சென்றால் குறிப்பாக பள்ளிக்கு சென்றால் திரும்ப வருவார்களோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உள்ளனர். பள்ளி வாசலில் போதைப்பொருள் விற்கின்றனர். திமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு சுலபமாக போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. போதை வழக்கில் திமுகவைச் சேர்ந்த சாதிக் பாட்சா கைது செய்யப்பட்டார். இதை சாதிக் பாட்சாவால் தனியாக செய்திருக்க முடியாது. திமுகவினர் பலருக்கு தொடர்பு இருக்கலாம். ஆனால் சாதிக் பாட்சா கைதுக்கு பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வரை, முதல்வர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ஒவ்வொரு தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை, இனிமேல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்காது என உறுதியளிக்கும் வரை நாங்கள் சும்மாயிருக்க மாட்டோம். எங்களுக்கு நீதி, நியாயம் வேண்டும். இது தமிழ் மண் மீதும், கண்ணகி மீதும், ஒவ்வொரு தமிழ் பெண்கள் மீதும் சத்தியம்.
இந்தப் போராட்டம் வெறும் ஆரம்பம் தான். இது அப்படியே சென்றுகொண்டு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் சும்மாயிருக்க மாட்டோம். கைது செய்தாலும், வீட்டு காவலில் வைத்தாலும் போராடுவோம். தெருவுக்கு வருவோம். அதில் உறுதியாக இருக்கிறோம். பாஜகவின் குரல் தமிழகத்தில் ஒவ்வொரு தெருவுக்கும், வீடுகளுக்கும் செல்ல வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வரை போராட்டம் நடைபெறும்” என்று அவர் பேசினார்.
பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர்கள் மகா சசீந்திரன், ராஜசிம்மன், சசிகுமார், பார்வையாளர்கள் ராஜரத்தினம், கார்த்திக்பிரபு, மகாலெட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் ஓம்சக்தி தனலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago