நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: ஆண்டுதோறும் 133 உயர்கல்வி நிறுவனங்களில் திருக்குறள் தொடர்பான அறிவுசார் போட்டிகள் நடத்தப்படும். டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரம் கொண்டாடப்படும் என்பது உட்பட 6 முக்கிய அறிவிப்புகளை குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார். தமிழக அரசு சார்பில் இதன் வெள்ளி விழா தற்போது கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விவேகானந்தர் பாறை - வள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை நடைபாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து
வைத்தார்.

இந்நிலையில், வெள்ளி விழா கொண்டாட்டத்தின் 2-வது நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், வள்ளுவர் சிலைகள் அடங்கிய கண்காட்சியை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.1.45 கோடியில் அமைக்கப்பட உள்ள வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார். திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்வர் வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வள்ளுவர் சிலை வெள்ளி விழா, கண்ணாடி இழை பாலம் திறப்பு விழா, வெள்ளி விழா மலர் வெளியீடு, திருக்குறள் கண்காட்சி தொடக்கம், வள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் என ஐம்பெரும் விழா நடைபெறுகிறது. கடந்த 2000-ல் இந்த சிலையை திறக்கும் பொத்தானை அழுத்தியபோது, தனது உடல் நடுங்கியது என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். அந்த அளவுக்கு உணர்ச்சி பெருக்கத்தில் அவர் இருந்தார். வெள்ளி விழாவில் அதே பெருமை நமக்கும் கிடைத்துள்ளது.

முதல்வரின் 6 அறிவிப்புகள்

புதிய படகுகள்: புதிதாக 3 படகுகள் வாங்கப்பட்டு, வள்ளுவர் சிலைக்கு படகு சவாரி வசதி மேம்படுத்தப்படும். பெருந்தலைவர் காமராஜர், தென்குமரியை தமிழகத்துடன் இணைக்க போராடிய மார்ஷல் நேசமணி, திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயர்கள் இந்த படகுகளுக்கு சூட்டப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி: திருக்குறளில் ஆர்வம், புலமை மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

அறிவுசார் போட்டிகள்: ஆண்டுக்கு, 133 உயர்கல்வி நிறுவனங்களில் குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.

குறள் வாரம்: ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும்.

திருக்குறள் மாநாடு: தமிழ் திறனறி தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

குறள், உரை: அரசு அலுவலகங்களில் எழுதப்படுவதுபோல, தனியார் நிறுவனங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் உரையை எழுத முயற்சி மேற்கொள்ளப்படும். இது மட்டுமின்றி, வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றுள்ள கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பள்ளிகள், கல்லூரிகள், அரசுஅலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் திருக்குறளை இன்னும் அதிகமாக இடம்பெற செய்ய வேண்டும். திருவள்ளுவர் வெறும் சிலை அல்ல. திருக்குறள் வெறும் நூல் அல்ல. அது நமது வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மை காக்கும். காவி சாயம் பூச நினைக்கும் தீய எண்ணங்களை விரட்டியடிக்கும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு, தமிழர் பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தலைமைச் செயலர் முருகானந்தம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலர் தா.கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர்அருள், செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன் ஆட்சியர் அழகுமீனா பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்