கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்துக்கு கட்டணமா? - இலவசமாக அனுமதிக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

By எல்.மோகன்

கன்னியாகுமரியில் கடல் நடுவே திறக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்கப்பட்டால், சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குமரியில் கடல் நடுவேயுள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அருகே மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவையிரண்டும் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் மேற்கொள்ளும் படகுப் பயணம் திகழ்கிறது.

இதற்கடுத்த சிறப்பம்சமாக, தற்போது திறக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் திகழ்கிறது. இந்நிலையில், இந்தப் பாலம் வழியாகச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது. அதேபோல், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் படகு கட்டணத்துடன் சேர்த்து, பாலத்துக்கு நுழைவுக் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து, சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கன்னியாகுமரியில் படகு சவாரி, கடல் நடுவேயுள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவைதான் மக்களை அதிசயிக்க வைக்கும் அம்சங்களாக உள்ளன. இதனால்தான், கரையில் இருந்தே விவேகானந்தர் பாறைக்கு பாலம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைவிடப்பட்டது. படகு சவாரி செய்து கடல் நடுவேயுள்ள பாறையை அடைவதுதான் கன்னியாகுமரியின் தனித்துவச் சுற்றுலாவாக உள்ளது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சவாரி செல்ல ரூ.75 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதிலேயே, சிறப்பு வரிசை கட்டணமாக ரூ.300 பெறப்படுகிறது.

விவேகானந்தர் பாறையையும், மண்டபத்தையும் சுற்றிப்பார்க்க விவேகானந்தா கேந்திரா சார்பில் ரூ.30 கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு படகு சவாரி கட்டணம் உயர்த்தப்பட்ட போது, சுற்றுலா பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு பாலம் மூலம் நடந்து செல்வதற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும், படகு சவாரிக் கட்டணத்துடன் இதை சேர்த்து மொத்தமாக வசூலிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, கண்ணாடி இழைப் பாலம் வழியாக சென்று வர சுற்றுலாப் பயணிகளை இலவசமாக அனுமதிக்க வேண்டும். அப்போது கன்னியாகுமரியில் சுற்றுலா இன்னும் மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, “கன்னியாகுமரி கண்ணாடி இழைப் பாலத்தால் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் படகு சவாரி செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. தற்போதைக்கு கட்டண உயர்வு எதுவுமில்லை. வழக்கமாக, திருவள்ளுவர் சிலை பராமரிப்புக்கு என படகு சவாரி கட்டணத்தில் நபர் ஒன்றுக்கு ரூ.5 ஒதுக்கப்பட்டு வருகிறது. கடல் சீற்றத்தால் அங்கு அடிக்கடி படகு சேவை ரத்தான நிலையில், கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டதால் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, கண்ணாடி இழை பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகவே அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கென படகுப் போக்குவரத்து கழகத்தில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்