கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
திருக்குறள் எனும் அறிவுத் திருவிளக்கை, திக்கெட்டும் பரப்புகின்ற பணியை தன்னுடைய ஒப்பற்ற கடமையாக கருதி செயல்பட்ட முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, குறளோவியம் தீட்டினார். குறளுக்கு விளக்கவுரை தந்தார், சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார், அரசு அலுவலகங்களிலும், பேருந்துகளிலும் குறளை எழுதவைத்து, குறளை எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்தார்.
» புத்தாண்டுக்காக அயோத்தியில் குவியும் பக்தர்கள் - உ.பி.யில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
» மேட்டுப்பாளையம் - உதகை இடையே விடுமுறை கால சிறப்பு மலை ரயில் சேவை
கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே திருவள்ளுவருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் நாள் 133 அடியில் சிலை அமைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை தமிழக அரசின் சார்பில் பெருவிழா கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவம்பர் 12-ம் தேதி அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழக அரசின் சார்பில் முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில், இன்றைய தினம் (30.12.2024) திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்குறள் நெறி பரப்பும் 22 தகைமையாளர்களுக்குச் சிறப்புப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குதல், சுகி.சிவம் தலைமையில் ‘திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே - சமுதாயத்திற்கே’ எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றது.
நாளை (31.12.2024) திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாச் சிறப்பு மலர் வெளியீடு, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், பியானோ இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருவள்ளுவரின் பெருமைகளை எடுத்துரைக்கும் தமிழறிஞர்களின் கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளும், 1.1.2025 அன்று திருக்குறள் ஓவியக் கண்காட்சி திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
அதன்படி, திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளிவிழாவையொட்டி, தமிழக முதல்வர் இன்றைய தினம் படகு மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்துக்கு சென்று, திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள “பேரறிவுச் சிலை” (Statue of Wisdom) அலங்கார வளைவினை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர், திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்துக்கும், திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் பாதங்களுக்கும், முதல் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம்: கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை அமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக 37 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி பெறப்பட்டு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதிப் பணியாக தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இப்பாலக் கட்டுமான வடிவமைப்பு சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) கடல்சார் பொறியியல் பிரிவின் ஒப்புதலையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.
இப்பாலமானது 77 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்ட Bowstring Arch பாலமாகும். இது நவீன தொழில்நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக பொருத்தப்பட்ட எக்கு அலகுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு, நெட்வொர்க் ஆர்ச் முழுமையாக பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை மேல்தள கான்கிரீட், கிரானைட் கற்கள் மற்றும் ஒளியூட்டும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருக்குறள் நெறி பரப்பும் தகைமையாளர்கள் முனைவர் ம.சக்கரவர்த்தி, தென்மொழி நற்றேவன், புலவர் அய்யா மோகன், திருக்குறள் சுப்பராயன், தமிழரிமா தா.சம்பத், பாவலர் மேத்தாவாணன், சி.பன்னீர்செல்வம், முனைவர் க.வளனரசு, முனைவர் பேரா.கஸ்தூரி ராஜா, திருக்குறள் தூயர் அ.கோபிசிங், கைலாசம், திருக்குறள் செல்வன், புலவர் செந்தலை ந.கவுதமன், பெரும்புலவர் மு.படிக்கராமு, முனைவர் கலை.செழியன், மு.கவினரசு, முனைவர் மா.பூங்குன்றன், திருக்குறள் க.கோ.பழனி, கோ.பிச்சை வள்ளிநாயகம், திருக்குறள் புலவர் நாவை.சிவம், சி.சொல்லரசு, இரா.கழராம்பன் ஆகிய 22 தகைமையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
பூம்புகார் விற்பனையகம்: கன்னியாகுமரி, திருவள்ளுவர் திருவுருவச் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பூம்புகார் விற்பனையகத்தை முதல்வர ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டார். அவ்விற்பனையகத்தில், பித்தளை, வெண்கலம், பைபர், தஞ்சாவூர் ஒவியம், தஞ்சாவூர் கலை தட்டுகள், கண்ணாடி ஒவியம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சிறிய வடிவிலான (Miniature) திருவள்ளுவர் சிலைகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் திருக்குறள் புத்தகங்கள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அவர்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பின்னர், படகு குழாமிலிருந்து திருவள்ளுவர் திருவுருவச் சிலையில் அமைக்கப்பட்டுள்ள சீரொளிக் (லேசர்) காட்சியினை தொடங்கி வைத்து முதல்வர் பார்வையிட்டார். தொடர்ந்து, சுகி.சிவம் தலைமையில் ‘திருக்குறளால் அதிக நன்மை தனிமனிதருக்கே - சமுதாயத்திற்கே’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இவ்விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதி - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago