சென்னை: “திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நடைபெறவிருப்பதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் விவரம் வருமாறு: உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாகத் திகழ்கிறார். உலக வாழ்வியலுக்கான பொது முறையை வழங்கும் அறநெறிகளைக் கொண்ட திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகளாவிய புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவியவர் கலைஞர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்ததோடு, தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப்படுத்தினார். குறள் நெறியை அனைத்து மக்களுக்கும் பரப்புகின்ற வகையில் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதியவர் அவர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் தென் எல்லையாக உள்ள தமிழ்நாட்டின் குமரி முனையில் உள்ள பாறையில் திருக்குறளில் உள்ள அதிகாரங்களைக் குறிக்கின்ற வகையில் 133 அடி உயரத்திற்கான சிலையை நிறுவி, அதனைப் புத்தாயிரம் ஆண்டான 1-1-2000 அன்று வண்ணவிளக்கொளியில் வான்புகழ் வள்ளுவர் மின்னிடும் வகையில் திறந்து வைத்தார்.
குமரி முனை சிலையின் தலை வரை ஆழிப்பேரலை தாக்கிய போதும், அதனை எதிர்கொண்டு எவ்வித சேதாரமுமின்றி கம்பீரமாக நின்றார் திருவள்ளுவர். காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு, இது வெள்ளி விழா ஆண்டு. திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
கால் நூற்றாண்டு காலத்தை கடந்து, இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கவிருக்கும் சிலைக்கு, பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு.
வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான். சமுதாயம்-ஆட்சி முறை- தனிமனித வாழ்க்கை இவை எப்படி அமையவேண்டும் என்பதற்கான அறநெறிகளை வழங்கிய வழிகாட்டி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர் தந்த ஈரடிக் குறள்கள் இன்றளவும் மானுட சமுதாயத்தின் மேன்மைக்குத் துணை நிற்கின்றன.
பொதுவாழ்வுக்கும் தனி வாழ்க்கைக்கும் துணை நிற்கும் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரை இளந்தலைமுறைத் தமிழர்களும் போற்றிடும் வகையில் பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சிறப்போடு நடைபெறவிருக்கிறது.
வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. அதனைத் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.
பழமைக்குப் பழமையாய்-புதுமைக்குப் புதுமையாய் வள்ளுவம் திகழ்கிறது என்பதன் அடையாளமாக நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கவிருக்கிறேன். இனி சுற்றுலாப் பயணிகள் எளிதாக இரண்டு இடங்களுக்கும் சென்று வர முடியும்.
வள்ளுவத்தைப் போற்றும் கருத்தரங்கம், பட்டிமன்றம், பல்வேறு இலக்கிய சுவை மிக்க நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. பேரறிவுச் சிலையான திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளி-கல்லூரி மாணாக்கர்களுக்கும் இளையோருக்கும் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளும், விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன.
உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் நாளும் உயர்ந்திட வேண்டும், அதற்கேற்ப வள்ளுவர் வழங்கிய திருக்குறளின் நெறி போற்றி நாம் வாழவேண்டும். தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் மட்டுமல்ல எல்லா நாட்களும் திருக்குறளைப் போற்றுவோம். அதன் வழி நடப்போம்.
திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருவள்ளவர் வழங்கிய திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
27 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago