“யார் ஆட்சியில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளை இப்படித்தான் உதாசீனப்படுத்துகின்றனர்!” - கார்த்தி சிதம்பரம் காரசாரம்

By எஸ்.கோவிந்தராஜ்

கூட்டணி விவகாரம், உட்கட்சி சமாச்சாரம் உள்ளிட்ட விஷயங்களில் தன் மனதில் பட்டத்தை அப்படியே சொல்லக் கூடியவர் கார்த்தி சிதம்பரம் எம்பி. அந்த வகையில், அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் தொடங்கி, கூட்டணி ஆட்சி, தமிழக காங்கிரஸ் நிலை உள்ளிட்டவை குறித்து இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த காரசார பேட்டி இது.

திமுக கூட்டணி கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனவே?

​நாங்கள் தேர்தல் கூட்ட​ணியில் இருக்​கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று அரசு அமைந்த பின், அரசுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருப்​ப​தில்லை. யார் பெரும்​பான்மை பெற்று ஆட்சியில் இருந்​தா​லும், கூட்டணிக் கட்சிகளை இப்படித்தான் நடத்து​கின்​றனர்; உதாசீனப்​படுத்து​கின்றனர்​.

கூவம் நதியை சுத்தப்படுத்துவது தொடர்பாக நீங்கள் ஒரு குற்றச்சாட்டை எழுப்பினீர்களே... அதற்காவது உரிய பதில் கிடைத்ததா?

கூவம் நதியை சுத்தப்​படுத்த ரூ.700 கோடி செலவு செய்ததாக சென்னை மேயர் தெரிவித்​தார். என்ன செலவு செய்தீர்கள் என்று நான் கேள்வி எழுப்​பினேன். அதற்கு அரசு தரப்பில் பதில் எதுவும் இல்லை. எனது நியாயமான கோரிக்கைக்கு எனது கட்சிகூட எனக்கு ஆதரவளிக்க​வில்லை என்பது இன்னொரு வேதனை.

இதற்கு என்ன காரணம்?

இயலாமை தான். எதிர்க்​கட்​சி​யாகவும் செயல்​ப​டாமல், ஆளும் கட்சி​யாகவும் செயல்​ப​டாமல், ரெண்டும் கெட்டான் நிலையில் தான் தமிழக காங்கிரஸ் இருக்​கிறது. பொதுமக்​களின் பிரச்​சினைகளை காங்கிரஸ் கட்சி முன்வைப்​ப​தில்லை. முதலில், தான் ஒரு அரசியல் கட்சி என்பதை தமிழக காங்கிரஸ் கட்சி உணர வேண்டும். டெல்லியில் இருந்து சொல்லும் மத்திய விஷயங்கள் தொடர்பாக, சம்பிரதாய போராட்​டங்களை நடத்துவது, பிறந்த நாள், இறந்த நாள் ஏற்பாடுகளை செய்வது, இதைத் தாண்டி வர வேண்டும். அப்படி செயல்​ப​டாததால் தான் கட்சியின் வாக்கு வாங்கி பெரிதாக வளரவில்லை. புதிய கட்சியின் பக்கம் இளைஞர்கள் செல்கின்​றனர். வயதானவர்​களின் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்​டது.

உங்களை மாநிலத் தலைவர் ஆக்கினால் தமிழக காங்கிரஸை வளர்த்துவிடுவீர்களா?

எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தால் சரி செய்வதற்கு தயாராக இருக்​கிறேன். ஆனால், மாநில தலைவர் பதவி கொடுப்​பார்கள் என்று நான் நம்பவில்லை. வாடிக்கையான, சம்பிரதாய சடங்கு அரசியலை செய்வதற்கு நான் தயாராக​வில்லை. ஆனால், காங்கிரஸ் கட்
சியை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல எனக்கு திறமை, அனுபவம் இருக்​கிறது.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்பிய ஆதவ் அர்ஜுனாவை விசிக-வில் இருந்து நீக்கியது சரிதானா?

ஆட்சிக்கு எதிராக சில தேவையற்ற விமர்சனங்களை வைத்து, கட்சிக்கு சங்கடம் தரும் வகையில் நடந்ததால் தான் அவரை நீக்கியுள்ளனர். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று நாங்களும்தான் கேட்கிறோம். ஆனால், வேறு தொனியில் கேட்கிறோம்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சம்பவங்களைப் பார்க்கையில் சட்டம் - ஒழுங்கு சரியாக கையாளப்படவில்லை என்று கருதுகிறீர்களா?

பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த துயரம் கடும் கண்டனத்துக்குரியது. இந்த சம்பவத்திற்காக நான் வருந்துகிறேன். இந்த கொடுமை குறித்து துணிச்சலாக புகார் அளித்த மாணவியை பாராட்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அதேசமயம் பொது இடங்களில் குற்றங்களைத் தடுக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், சம்பந்தம் இல்லாதவர்கள் நுழைவதை தடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேசமயம் கூலிப்படை கொலை சம்பவங்கள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை அடக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறாரே இபிஎஸ்?

குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் காவல்துறை காலம் தாழ்த்தினால் சிபிஐ விசாரணை கேட்கலாம். ஆனால், ஒருவரைக் கைது செய்திருக்கும் நிலையில், எதற்காக சிபிஐ விசாரணை கேட்க வேண்டும்? அத்தோடு, இந்த வழக்கில் பெண் காவல் அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால், சிபிஐ விசாரணை என்ற கோரிக்கையே தேவையற்றதாகி விடுகிறது.

இந்தப் பிரச்சினைக்காக சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு நூதன போராட்டம் நடத்தி இருக்கும் அண்ணாமலை, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் என்று சொல்லியிருப்பது குறித்து..?

இது ஒரு சீரியஸான விஷயம். ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்பதில், சமுதாய ரீதியாக குறைபாடுகள் உள்ளன. இதையெல்லாம் கவனித்து, முதிர்ச்​சியான நடவடிக்கையை, அரசியலை அண்ணாமலை மேற்கொண்​டிருக்க வேண்டும். ஆக்கபூர்​வாமான எதிர்ப்பை வெளிப்​படுத்தி, பொதுமக்களின் விவாதப் பொருளாக இப்பிரச்​சினையை கொண்டு வந்திருக்க வேண்டும். அதை விட்டு​விட்டு, பிரச்​சினையை திசை திருப்பும் வகையில் அவர் செயல்​பட்​டுள்​ளார். யாரோ ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி அவர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பார் என நினைக்​கிறேன்​.

திமுக ஃபைல்ஸ் - 3 வெளியிடுவேன். அதில் கூட்டணிக் கட்சிகளின் ஊழல் குறித்தும் சொல்வேன் என்கிறாரே அண்ணாமலை?

அவர் எத்தனை ஃபைல்ஸ் வேண்டுமானாலும் வெளியிடட்டும். தமிழகத்தில் பாஜக ஒரு சறுக்குப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதனால் ஆளுங்கட்சிக்கு எதிராக ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்று அண்ணாமலை நினைக்கிறார். அவரின் இந்த முயற்சி எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

விஜய்க்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அவரிடம் சித்தாந்த ரீதியாக ஒரு தெளிவு இல்லை. தற்போதைய அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், முதன்முறை வாக்காளர்கள் அவருக்கு ஆதரவளிக்கலாம். விஜயகாந்த் போல் முதல் ரவுண்டில் மட்டும் விஜய் வாக்குகளைப் பெறலாம். நதிநீர் இணைப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அவரது கருத்து என்ன என்று தெரியாது. இதெல்லாம் தெரியாமல் ஒரு ரசிகர் மன்ற கூட்டத்தை வைத்து ஓர் அரசியல் கட்சி வெற்றி பெற முடியாது.

விஜய் தனது கொள்கை எதிரியாக பாஜக-வை அறிவித்திருப்பதால் அவரை காங்கிரஸ் தோழமையுடன் பார்க்கிறதா?

நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கிறது. விஜய் இந்தியா கூட்டணிக்கு வர விரும்பினால், தலைமையிடம் பேசலாம். எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.

கருணாநிதி நாணய வெளியீட்டு விழா, பிரதமரை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்தித்தது போன்ற நிகழ்வுகள் பாஜக-வை திமுக நெருங்கி வருவதை உணர்த்துவது போல் உள்ளதே?

மத்திய, மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கக்கூடாது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நல்ல ராஜாங்க உறவு இருக்க வேண்டும். மத்திய அமைச்சர்கள், தமிழக அரசு விழாக்களுக்கு வர வேண்டும். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த இயல்பான உறவை நான் வரவேற்கிறேன்.

அதானி விவகாரத்தை வைத்து இண்டியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குகின்றன. ஆனால், தமிழகத்தில் அதானி நிறுவனம் தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறதே..?

அதானி குழுமத்தின் முதலீடுகளை தமிழகம் ஏற்பதில் தவறில்லை. அதில் ஏதும் குளறுபடிகள் இருந்தால் சுட்டிக் காட்ட வேண்டும். அதோடு, அதானியை நான் சந்திக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவதை நான் ஏற்கிறேன். அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தாலும் அதில் தவறொன்றும் இல்லை. அதனாலயே, அதானி குழுமம் செய்யும் தவறுகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அர்த்தம் கிடையாது.

குடும்ப அரசியல் என்பது கூர்மையான கத்தியைப் போன்றது என்பார்கள். இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் கட்சியின் தலைவரான அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் வெடித்துள்ள மோதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

குடும்பம், கட்சி இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் நடக்கும் இயக்கங்களுக்கு இந்த பிரச்சினை வரத்தான் செய்யும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்