இந்தியாவில் கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட முதல் பாலம் என்ற பெருமையை பெற்றது பாம்பன் பாலம். கடந்த 1914-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையுடன் வியாபாரத்தை பெருக்க விரும்பி பாம்பன் பாலத்தைக் கட்டினர்.
இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்துக்கு செல்லும் முக்கிய ரயில் பாலமாகவும் அமைந்தது. கடந்த 110 ஆண்டுகளாக பாலம் சிறப்பாகவே செயல்பட்டு சாதனை படைத்தது. அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாமல் கட்டப்பட்ட அந்தப் பாலம் கடல் அரிப்பு உட்பட பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளானது. அதனால், அந்தப் பாலத்தின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதற்குப் பதில் புதிய பாலம் கட்டும் பணியை ரயில்வே நிர்வாகம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. இடையில் கரோனா தொற்று காரணமாக கட்டுமான பணிகள் தாமதமாயின. பின்னர் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனத்தின் (ஆர்டிஎஸ்ஓ) பங்களிப்புடன் பாலத்திற்குரிய அனைத்து தளவாடங்களும் உருவாக்கப்பட்டன. சுமார் ரூ.545 கோடி செலவில் தற்போது பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் 101 துாண்கள் உள்ளன.
குறிப்பாக கடலுக்குள் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து துாக்குப் பாலம் என்ற பெருமையோடு பாம்பன் ரயில் பாலம் முழுமையடைந்து திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, கடந்த நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளில் பாம்பன் பாலம், தூக்கு பாலம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். அதில், பாலத்தின் உறுதித் தன்மை, கடல் அரிப்பு, வெல்டிங் பணிகள் குறித்து சில ஆட்சேபணைகளை அந்த அறிக்கையில் சவுத்ரி சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் பாம்பன் பாலம் குறித்து சர்ச்சைகள் எழுந்தன.
» ஞாயிறு தரிசனம்: பிரிந்த தம்பதி ஒற்றுமைக்கு அருளும் கீழப்பழுவூர் ஆலந்துறையார்
» கேரள இரட்டைக் கொலை: மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ உட்பட 14 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஊடகவியலாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து சென்று பாம்பன் பாலத்தின் கட்டுமானம், தூக்குப் பாலத்தின் செயல்பாடுகள் குறித்த முழு விவரங்களை தெற்கு ரயில்வே துறையினர் விளக்கினர். மேலும், ஊடகவியலாளர்களின் சரமாரியான கேள்விகளுக்கு இந்தியாவில் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) நிறுவனத் துணைப் பொது மேலாளர் னிவாசன் பதில் அளித்தார். அத்துடன், பாம்பன் பாலத்தின் கட்டுமானத்தில் ரயில்வேயில் ஓய்வு பெற்ற பிறகு ரெசிடென்ஸ் இன்ஜினீயராக பணியாற்றிய அன்பழகன் முக்கிய பங்காற்றி உள்ளார். இவர்கள் இருவரும் கூறியதாவது: பாம்பன் பாலம் 2.05 கி.மீ. நீளமுடையது. நாட்டிலேயே 72 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பான் கொண்டது.
சர்வதேச நிபுணர் மூலம் இந்த பாலத்தின் வடிவமைப்பு முடிவு செய்யப்பட்டது. அதை சென்னை ஐஐடி.யிடம் வழங்கி ஆய்வு செய்யப்பட்டது. மும்பை ஐஐடி.யின் ஆலோசனைகளும் ஏற்கப்பட்டன. இப்படி நிபுணர்களின் ஒப்புதலுக்குப் பிறகே பாம்பன் பாலத்தின் வடிவமைப்புக்கு தெற்கு ரயில்வே அங்கீகாரம் வழங்கியது. பாலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புகளில் வெல்டிங் சரியாக இருக்கிறதா என்று திருச்சி வெல்டிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
அத்துடன், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சுட்டிக் காட்டிய விஷயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். அவர் கூறிய சில விஷயங்களை ஆர்விஎன்எல் மூலம் மீண்டும் செய்து முடித்துள்ளோம். இப்போது பாம்பன் பாலம், தூக்கு பாலம் ஆகிய விஷயங்களில் எந்த சந்தேகமும் இல்லை. 100 ஆண்டுகள் இந்தப் பாலம் உறுதியாக உழைக்கும். தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் 100 ஆண்டுகளுக்கு மேலும் இந்தப் பாலம் உழைக்கும்.
இந்த தூக்கு பாலத்தின் வழியாக 22 மீட்டர் உயரம் கொண்டபெரிய கப்பல்கள் செல்ல முடியும். பாம்பன் சாலை பாலத்தின் உயரத்துக்கு இந்த தூக்கு பாலத்தை இயக்க முடியும். தற்போது பாலம் தயாராக உள்ளது. ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்த பின், பாலம் திறப்பு விழா காணும். அதன்பின் ராமேஸ்வரம் வரை பயணிகள் எளிதாக சென்று வரமுடியும். பழைய பாம்பன் பாலத்தை அங்கிருந்து அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பாம்பன் பாலம் கட்டுமான பணிகள் முடிந்து தயார் நிலையில் இருப்பதால், அடுத்த மாதம் அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 நிமிடத்தில்... பழைய பாம்பன் பாலத்தின் தூக்கு பாலம் கத்தரி கோல் வடிவத்தில் மேலே தூக்கும். அதுவும் மனிதர்கள் 20-க்கும் மேற்பட்டோர் இயக்குவதன் மூலம் தூக்குப் பாலம் மேலெழும்பும். இதற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்களாகும். ஆனால், புதிதாக கட்டப்பட்டுள்ள 660 டன் எடையுள்ள தூக்கு பாலத்தை இயக்க ஒருவர் போதும். தானியங்கி தொழில்நுட்பம் மூலம் புதிய பாலத்தை 3 நிமிடத்தில் தூக்கிவிட முடியும். பாலத்தில் அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் ரயில் செல்ல முடியும். எனினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக அதற்கு குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்படும். மேலும், தூக்குப் பாலம் உள்ள இடத்தில் மட்டும் 50 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்க முடியும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago