விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை: ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக நடத்தப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி முதல்வர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். முதல்வரை சந்தித்தபோது விஜயகாந்த் நினைவுநாள் குருபூஜையையொட்டி நடைபெறவுள்ள அமைதிப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், விஜயகாந்த் நினைவு நாள் அமைதிப் பேரணிக்கு நேற்று முன்தினம் காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பிருந்து நேற்று காலை அமைதிப் பேரணி தொடங்கியது. இதனால், காவல்துறையினருக்கும் தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடையை மீறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் அமைதிப் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

பேரணி தேமுதிக அலுவலகம் சென்றதும், அங்குள்ள விஜயகாந்த் ஆலயத்தில் குருபூஜை நடைபெற்றது. நினைவிடத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவியும் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் உணர்ச்சிப்பெருக்கில் கதறி அழுதார். அவரைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன்கள் சண்முகப்பாண்டியன், விஜயபிரபாகரன் , துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் மரியாதை: விஜயகாந்த் நினைவுநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "மாசற்ற மனதுக்கும் தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த குருபூஜையில், திமுக சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே.சசிகலா, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் உள்ளிட்டோர் கூறியதாவது:

அமைச்சர் சேகர்பாபு: முதல்வர் உத்தரவின்படி, திமுக சார்பில் விஜயகாந்த் முதலாவது குருபூஜையில் பங்கேற்றுள்ளோம். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்தபடியே பேரணி நடந்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். பேரணி அனுமதி மறுப்பை ஊதி பெரிதாக்க வேண்டாம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: ‘மாற்று சக்தி வெற்றி பெற முடியும் என தமிழக அரசியலில் நிரூபித்தவர் விஜயகாந்த். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அமைதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்த அவர், சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். அமைதிப் பேரணிக்கு அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது.

விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்: குருபூஜையையொட்டி இன்று 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம். அவரது லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேமுதிக அமைதிப் பேரணி காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்