அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சுக்கு செந்தில் பாலாஜி பில் கேட்டதற்குப் பின்னால் அண்ணாமலை சந்திரமுகியாகவே மாறிப்போனார். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற பிறகு வேறு பக்கம் கவனத்தைத் திருப்பிய அண்ணாமலை, இப்போது மீண்டும் செந்தில் பாலாஜியை சீண்ட ஆரம்பித்திருக்கிறார். பதிலுக்கு பாலாஜியும் பதிலடி கொடுத்து வருகிறார்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்த சமயத்தில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை. ஆனால், சிறைக்குள் இருந்தாலும் வேட்பாளர் தேர்வு உட்பட அனைத்தையும் ரிமோட் கன்ட்ரோலில் சாதித்து அண்ணாமலைக்கு செக் வைத்தார் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும், ‘ஆக்டீவ்’ அரசியலுக்கு லீவுவிட்டு அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் அண்ணாமலை. அந்த சமயத்தில் ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி மீண்டும் ‘ஆக்டீவ்’ அரசியலுக்குள் வந்தார்.
தொலைநோக்குத் திட்டத்துடன் மீண்டும் அவரையே கோவைக்கான பொறுப்பு அமைச்சராக நியமித்தது திமுக தலைமை. இந்தநிலையில், 3 மாத படிப்பை முடித்துவிட்டு டிசம்பர் 1-ல் தாயகம் திரும்பினார் அண்ணாமலை. இதையடுத்து செந்தில்பாலாஜிக்கும் அவருக்குமான வார்த்தைப் போர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஜாமீன் அமைச்சர் செந்தில்பாலாஜி அதானி விவகாரம் குறித்து கேட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டும். நான் லண்டனுக்கு படிக்கச் சென்றிருந்த போது, ஜாமீன் அமைச்சர் புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார்.
உண்மையை கூறியதற்காக என் மீது வழக்கா?” என சீண்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “சிலருக்கு எந்த வேலையும் இல்லை. வேலை இல்லாதவர்கள், அரசியலில் முகவரி இல்லாதவர்கள், தொடர்ந்து மக்களால் தோற்கடிக்கப்படுபவர்கள் தனது இருப்பைக் காட்ட, மக்களிடம் வெளிச்சம் பெற என்னவெல்லாமோ பேசுகிறார்கள்” என்று அண்ணாமலையை போட்டுத் தாக்கினார்.
» பாப்கார்ன் மீம்ஸ்க்கும் வரி வந்துடப் போகுது..!
» தேனி அருகே கார் - வேன் மோதல்: கேரளாவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
இதுகுறித்து பேசும் கோவையின் அரசியல் பார்வையாளர்கள், “அண்ணாமலையும் செந்தில் பாலாஜியும் மீண்டும் வார்த்தை வார் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலிலும் கோவையிலேயே போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறார். அதேபோல், கடந்த முறையைப் போல் இல்லாமல் இம்முறை கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக-வை ஜெயிக்கவைத்து தலைமையிடம் சபாஷ் பெற திட்டமிடுகிறார் செந்தில்பாலாஜி. இருவருமே தாங்கள் நினைத்ததை முடிக்க எந்த எல்லைக்கும் போவார்கள்” என்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், “சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அரசின் நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை திசை திருப்பவே, இதுபோன்ற வார்த்தைப் போர்களை அவர்கள் துவக்குகின்றனர். அதேசமயம், பாஜக-வுக்கு தங்களது ஆதரவை அளிக்க மக்கள் தெளிவாக உள்ளனர். ஓட்டுக்கு பணம் தர மாட்டேன் என பகிரங்கமாக கூறி தேர்தலை எதிர்கொண்டவர் அண்ணாமலை. பாஜக எங்கு உள்ளது என்று கேட்டவர்கள், இன்று பாஜக-வை பற்றியும், அண்ணாமலையை பற்றியும் பேசாமல் அரசியல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரான நா.கார்த்திக் நம்மிடம், “2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவையில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டு 96 சதவீதம் வெற்றி பெற்றோம். மக்கள் திமுக பக்கம் நிற்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை திமுக குறித்தும், அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்தும் அவதூறு கருத்துகளை பேசுகிறார். மக்கள் பாஜகவை நிராகரித்துவிட்டனர்.
யாரும் நெருங்கிப் பார்க்க முடியாத அளவுக்கு, திமுக மக்கள் செல்வாக்கு பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அண்ணாமலை, தனது இருப்பை காட்டிக் கொள்ள தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்” என்றார். பழையன மறந்து திமுக-வை வீழ்த்த பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. அப்படி அமைந்தால் அண்ணாமலை - செந்தில்பாலாஜி மோதல் இன்னும் உக்ரமாகலாம் என்பதை இப்போதே உணரமுடிகிறது!
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago