அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுக, பாஜக வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சூழலில், மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது தரப்பில் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நேற்று, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் ஆஜராகி, “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று முறையிட்டார். “உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்” என்று வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையிட்டார்.

இரு வழக்கறிஞர்களின் முறையீட்டையும், அதிமுக வழக்கறிஞரின் கடிதத்தையும் ஆய்வு செய்த நீதிபதிகள், “தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் வழக்கை எடுக்க முடியாது” என்று தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் தரப்பில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உடனடியாக பட்டியலிடப்பட்டு, நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. அப்போது நடைபெற்ற வாதம்:

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்: வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) காவல் துறையினர் வெளியிட்டது சட்ட விரோதம். இதை காவல் ஆணையரே ஒப்புக்கொண் டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இடைக்காலமாக, முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும். கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ள நிலையில், அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். கைதான நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ள தாக ஆணையர் கூறுகிறார். ஆனால், பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும்.

நீதிபதிகள்: புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கைதானவரே குற்றவாளிதான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? கைது செய்யப்பட்டவரின் காலில் ஏன் கட்டு போடப்பட்டுள்ளது?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரில், கைதாகியுள்ள நபரின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் ஆணையர் கூறியுள்ளார்.

காவல் துறை தரப்பு: கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, தப்பி ஓட முயற்சித்தார். விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டது. இவ்வாறு வாதம் நடந்தது. பிறகு, நீதிபதிகள் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டுகள். அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. கைதானவர் கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உலவி வருவதாக கூறப்படுகிறது. அதை விசாரித்தீர்களா?

“பெண்கள் ஆண்களுடன் பேச கூடாது. பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்க கூடாது” என்றெல்லாம் கூறக்கூடாது. பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்.

வழக்கு விசாரணை நடைபெறும் போதே, செய்தியாளர்களை ஆணையர் சந்திக்கிறார். அரசு அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின்படி, செய்தியாளர்களை சந்திக்கும் முன்பு அரசு அனுமதி பெற வேண்டாமா? எஃப்ஐஆர் வெளியானதற்கு யார் பொறுப்பு? இது தொடர்பாக விரிவான அறிக்கையை அரசு 28-ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும். மாணவிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நிர்பயா நிதி எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது? பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன? இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இன்றும் விசாரணை நடக்க உள்ளது.

அண்ணா பல்கலை.யில் ஆளுநர் இன்று ஆய்வு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று பகல் 12.30 மணி அளவில் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆய்வு நடத்த உள்ளார்.

அப்போது, வளாகத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம், அதைத் தொடர்ந்து காவல் துறைக்கு அளிக்கப்பட்ட புகார், பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாதது உள்ளிட்டவை தொடர்பாக துணைவேந்தர் மற்றும் நிர்வாகிகளிடம் ஆளுநர் விளக்கம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்