அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் ரகுபதி

By செய்திப்பிரிவு

சென்னை: “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும் திமுக-வுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர் கல்வியை சிதைத்து பெண்களை வீட்டினுள் முடக்கும் முயற்சியாகத்தான் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்,” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்துவிட்டது. இந்த வழக்கை மறைப்பதற்கான அவசியம் தமிழக முதல்வருக்கோ, திமுக அரசுக்கோ கிடையாது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், சில ஊடகங்களிலே, அந்த நபர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது போலவும், மாணவரணியின் துணை அமைப்பாளர் என்பது போலவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

தென் சென்னை, சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் திமுக மாணவரணிக்கான துணை அமைப்பாளர்களோ, அமைப்பாளர்களோ இன்னும் நியமிக்கப்படவில்லை. மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஊடகங்களில் வரும் செய்திகளில், துணை முதல்வர் உடன் கைது செய்யப்பட்ட நபர் இருப்பது போன்ற காட்சியை வெளியிடுகிறார்கள். அந்த காட்சியை பார்த்தாலே தெரியும். துணை முதல்வர் நடந்துவரும் போது ஒருவர் புகைப்படம் எடுக்கிறார்.

அவ்வாறு நடந்துவரும் போது புகைப்படம் எடுப்பது எங்கேயும் சகஜம்தான். அதை தடுக்க முடியாது. அதேபோல, இன்னொரு புகைப்படம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியிடப்படுகிறது. அவர் சைதாப்பேட்டை தொகுதியைச் சேர்ந்தவர், அத்தொகுதியைச் சேர்ந்த பலர் அவரை சந்திக்கவும், நன்றி தெரிவிக்கவும் வந்திருப்பார்கள், புகைப்படம் எடுத்திருப்பார்கள். இதை யாரும் தடுக்க முடியாது.

எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கை மூடி மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதால், உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளார். காவல்துறை துரிதமான விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில், நிச்சயமாக உறுதியாக இருக்கிறோம். இது பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற சம்பவம் அல்லை. அந்த சம்பவத்தில் ஒரு முக்கியப் பிரமுகரின் மகனே ஈடுபட்டிருந்தார்.

அதை மறைக்க அன்றைக்கு ஆட்சியாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இறுதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே அதிமுக ஒன்றும் யோக்யமான கட்சியில்லை. அந்த சம்பவத்தை அவர்கள் மறைக்க முயற்சித்தார்கள். ராமேசுவரத்தில் அதிமுக நிர்வாகியின் மருமகன் ராஜேஸ்கண்ணா என்பவர் பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமராவை வைத்து வீடியோப் பதிவு செய்துள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அந்த வீடியோவை வைத்து யாரையும் மிரட்டினாரா? அல்லது வியாபாரம் செய்தாரா? என்பதெல்லாம் தெரியவரும்.

எனவே, இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுபவர்கள் அதிமுகவினர் தானே தவிர நாங்கள் இல்லை. தவறு செய்பவர்கள் மீது உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்துவிடும். அதேபோல், பாஜகவைப் பற்றியும் பல சம்பவங்களை நாங்கள் கூற முடியும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022ம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் லட்சத்துக்கு 65 என்றால், தமிழகத்தில் 24 சம்பவங்கள் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தேசிய சராசரி 4.6%, அதில் தமிழகத்தின் சராசரி 0.7% மட்டுமே.

அந்தளவுக்கு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். எங்கேயும் குற்றம் செய்பவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். அதை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் எங்களுடைய கடமை. குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியதும் எங்களுடைய கடமை. திராவிட மாடல் அரசில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் உயர் கல்வியை சிதைத்து பெண்களை வீட்டினுள் முடக்கும் முயற்சியாகத்தான் எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது. இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பல பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நடைபெற்றுள்ளது. காஷ்மீர் சிறுமி ஆசீஃபாவை வன்புனர்வு செய்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்களே பேரணி நடத்தினார்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைதான் அடித்து துன்புறுத்தி ஒடுக்கப்பட்டார்.

உ.பி.யில், உன்னாவ் முதல் பண்டா வழக்கு என பல பாலியல் கொடுமைகளை பாஜகவினர் அரசியல் பலத்தைக் கொண்டு நீதிக்குப் புறம்பாக அரங்கேற்றினார்கள். பில்கிஸ் பானு வழக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை பாஜக அரசு நன்னடத்தையைக் காரணம் காட்டி அவர்களை விடுதலை செய்தது. மணிப்பூர் குழு மோதல்களில் பாலியல் வன்கொடுமையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இன்னும் இதுபோல நிறைய வழக்குகள் உள்ளன. அதிமுக ஆட்சியில் பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு தள்ள நினைத்த சம்பவமும் நடந்தது.

முதல்வர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக காவல் நிலையங்களை திறந்து வருகிறார். தமிழகத்தில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 12 ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவுகள், 7 புலன் விசாரணைப் பிரிவுகள், 43 குழந்த தடுப்புப் பிரிவுகள், மற்றும் 39 இளஞ்சிறார் காவல் தடுப்பு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்