காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1.50 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட, ராஜாஜி காய்கறி மார்க்கெட் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வந்தது. சென்னை, கோயம்பேடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளை இங்குள்ள வியாபாரிகளிடம் இருந்து, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 80-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் நாள்தோறும் வாங்கிச் செல்கின்றனர்.
மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகளின் மேற்கூரைகள் சேத மடைந்ததால், மழைநீர் புகுந்து சுமார் 2 முதல் 3 அடி வரையிலும் தேங்கி நின்றது. மேலும், காய்கறி மூட்டைகளை உள்ளே கொண்டு வந்து குடோன்களில் பத்திரப்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால், மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் அமைக்கவேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் புதிய மார்க்கெட் கட்டிடம் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 100 ஆண்டுகளை கடந்த ராஜாஜி மார்க்கெட்டின் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றி, பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைப்பதற்காக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, ஓரிக்கை பகுதியில் தற்காலிகமாக மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
மேலும், புதிய கட்டிடத்தில் ஆண், பெண் கழிப்பறைகள், ஓய்வு அறை, உணவகம், ஏடிஎம், காவல் கண்காணிப்பு அலுவலகம், மழைநீர் சேகரிப்பு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது புதிய மார்க்கெட்டில் 250 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டிடத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். இதனால், மார்க்கெட் விரைவில் இயங்கும் என பொதுமக்கள் கருதினர்.
ஆனால், சுற்றுச்சுவர் உட்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதாலும், வியாபாரிகள் தரப்பில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை போன்ற பல்வேறு நிர்வாக காரணங்களாலும் முதல்வர் திறந்துவைத்து 4 மாதங்கள் கடந்த பின்னரும் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வரமுடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், புதிய மார்க்கெட் கட்டிடத்தில் கடை அமைக்க உள்ள வியாபாரிகள் ஒரு ஆண்டுக்கு, ஒருகடைக்கு ரூ.55 ஆயிரம் வாடகையாகவும் மற்றும் கடையில் இரும்பு கூண்டு அமைக்க ரூ.45 ஆயிரம் மற்றும் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்படும் மீட்டருக்கு டெபாசிட்டாக ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.1.7 லட்சம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதன்பேரில், வியாபாரிகள் மேற்கண்ட கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என தெரியாதநிலை உள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பண்டிகை நாட்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்குவதற்கான பிரதான இடமாக ராஜாஜி மார்க்கெட் இருந்து வந்தது. இந்நிலையில், புதிய கட்டிடம் அமைக்கும் பணிகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு மார்க்கெட் மூடப்பட்டது.
இந்நிலையில், பணிகள் நிறைவடைந்து கடந்த ஆகஸ்டில் முதல்வர் மார்க்கெட்டை திறந்து வைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், முதல்வர் திறந்து 4 மாதங்கள் கடந்தும் மார்க்கெட் செயல்படாமல் உள்ளது. இதனால், ரயில்வே சாலை உட்பட பல்வேறு முக்கிய வீதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காய்கறிகளின் விலை ஒரே மாதிரியாக இல்லை. தங்களுக்கு ஏற்றவாறு வியாபாரிகள் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். அதனால், அதிகாரிகள் இம்மாத இறுதிக்குள் மார்க்கெட் கடைகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago