சென்னை: "அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27ம் தேதி சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை மிகமிக இழிவாகப் பேசியதோடு, காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார். அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்ப்பதன் மூலம் உரிய விளக்கத்தையும், பதிலையும் அனைவரும் பெற முடியும்.
இதுகுறித்து விரிவான கருத்துகள் தேசிய ஊடகங்களில் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு திறந்த புத்தகம். அப்பெருமகனாரைப் பற்றி ஆதாரப்பூர்வமான பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்கிற போது, அமித்ஷாவின் குற்றச்சாட்டுகள் கடைந்தெடுத்த அவதூறு பிரச்சாரமாகத் தான் இருக்க முடியும்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சட்டரீதியான அறிவாற்றலுக்கும், அனுபவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, இந்தியாவில் உள்ள சாதி, மத, வேறுபாடுகளை கடந்து அனைவரையும் உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான், மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு ஆகியோர் எடுத்த முயற்சிகளின் விளைவாக, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக தேர்வு பெற்று, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவராக பொறுப்பேற்று அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டார்.
» மீண்டும் சோதனை தரும் பிட்ச் - மெல்பர்னில் இந்திய பேட்டர்கள் மீண்டெழுவார்களா?
» நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள தொண்டர்களுக்கு முத்தரசன் அழைப்பு
அவரது முயற்சிகளுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எத்தகைய ஆதரவு அளித்தார்கள் என்பதை அவரே தமது உரையில் பதிவு செய்திருக்கிறார். அம்பேத்கர் அவர்களின் பங்களிப்பு காரணமாகத் தான் இன்றைக்கும் பட்டியலின, சிறுபான்மையின, பின்தங்கிய மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு கவசம் அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தான். அந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம் தான், ஜனநாயகம், சமூகநீதி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள்.
வரலாற்று ரீதியாக பார்க்கிற போது, இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். வழிவந்த ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதுமே சமூகநீதிக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது. அதன் தலைவர்களான வி.டி. சாவர்க்கர், எம்.எஸ். கோல்வால்கர், ஷியாம் பிரகாஷ் முகர்ஜி ஆகியோர் அம்பேத்கர் எந்த இந்துத்துவா கொள்கையை எதிர்த்தாரோ, அதற்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள்.
இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று விரும்பி அன்றைய பிரதமர் நேரு ஆதரவுடன் இந்து தொகுப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அன்றைக்கு அதனை கடுமையாக எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழிவந்த இந்துத்வா சக்திகள் தான். அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து நிறைவேற்ற முடியாத சூழலில், 1952 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பெரும்பான்மையை பயன்படுத்தி பண்டித நேரு அதே நாடாளுமன்றத்தில் ஐந்து சட்டங்களாக பிரித்து, நிறைவேற்றப்பட்டு அதன்மூலம் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கனவு நனவாக்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவருக்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து, அவர் மூலமாக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் தான் இன்றைக்கும் 140 கோடி மக்களை பாதுகாத்து வருகிறது. அம்பேத்கருக்கு பெருமை சேர்ப்பது அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டம் தானே தவிர, அரசியல் ஆதாயத்தோடு பிரதமர் மோடி அமைக்கிற எந்த நினைவுச் சின்னங்களும் அவருக்கு பெருமை சேர்க்காது.
அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் கருப்பொருளாக டாக்டர் அம்பேத்கர் இருக்கிறார் என்றால், அவர் அனைத்து இந்திய மக்களின் குரலாக இருந்து அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியது தான் காரணமாகும். எனவே, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27 ஆம் தேதி மாலை சென்னை வருகிறார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, ‘அமித்ஷாவே திரும்பிப் போ” என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித்ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago