திமுக-விலிருந்து விலக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக வனவாசத்தில் இருக்கும் மு.க.அழகிரியின் விசுவாசிகளில் 9 பேர் தங்களை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ளக் கோரி திமுக தலைமையிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தென் மாவட்டமே மு.க.அழகிரியின் கண்ணசைவில் தான் இருந்தது. மதிமுக பிளவு ஏற்பட்ட போதுகூட அழகிரியை வைத்துத்தான் தென் மாவட்டங்களில் திமுக கரையாமல் காத்துக் கொண்டார் கருணாநிதி. அதற்காகவே, அழகிரியை தென் மண்டலச் செயலாளர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளில் அமரவைத்து அழகுபார்த்தார். இந்த நிலையில், ஸ்டாலின் - அழகிரி மோதல் வெடித்து கட்சிக்குள் அழகிரிக்கான பிடிமானம் குறைய ஆரம்பித்தது.
இனி ஸ்டாலின் தான் எல்லாமே என முடிவாகிப் போனதால் அழகிரியின் அதிதீவிர விசுவாசிகளாக இருந்த மாவட்டச் செயலாளர்கள் தளபதி, (அமைச்சர்) மூர்த்தி உள்ளிட்டவர்களே அழகிரியை விட்டு ஸ்டாலின் பக்கம் வந்தார்கள். ஆனால், அப்படியான சூழலிலும் எதுவந்தாலும் ‘அஞ்சா நெஞ்சரை’ விட்டு அகலட்டோம் என முன்னாள் துணை மேயர் மன்னன், மாநகர் மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் மண்டலத் தலைவர் கோபிநாதன், முபாரக் மந்திரி, கொட்டாம்பட்டி ராஜேந்திரன் போன்றவர்கள் அழகிரிக்குப் பின்னாலேயே நின்றார்கள்.
இந்த நிலையில், அழகிரியும் அவரது விசுவாசிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களும் 2014-ல் படிப்படியாக திமுக-வை விட்டு நீக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து கடுமை காட்டினார் அழகிரி. அவர் தனிக் கட்சி தொடங்கப் போவதாகக் கூட செய்திகள் முளைத்தன. அவரை வைத்து திமுக-வுக்குள் பாஜக பரமபதம் ஆடப் போகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இந்த நிலையில், ஒரு கட்டத்தில் அழகிரி உள்ளிட்டவர்கள் கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டார்கள்.
இதற்கெல்லாம் அடங்கிவிடாத அழகிரி, “2021 தேர்தலில் திமுக தோற்றுப் போகும்; ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது” என ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினார். இதற்கு நடுவில், அழகிரியுடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர், தலைமைக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்தனர். ஆனால், அதை தலைமை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், 2021-ல் திமுக ஆட்சியை பிடித்ததும். “தம்பி நல்லாட்சி தருவார்” என்று தடாலடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் அழகிரி. இதனால் தங்களின் அரசியல் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும் என அழகிரி விசுவாசிகள் நினைத்தார்கள். ஆனால், தலைமைஎந்த ரியாக் ஷனும் காட்டவில்லை. அழகிரியுடனான அண்ணன் - தம்பி உறவை புதுப்பித்துக் கொண்டாலும் அண்ணனை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து வாய் திறக்கவில்லை ஸ்டாலின்.
இந்தச் சூழலில் அழகிரி விசுவாசிகளான மன்னன், கோபிநாதன், இசக்கிமுத்து, முபாரக் மந்திரி உள்ளிட்ட ஒன்பது பேர் தங்களை மீண்டும் திமுக-வில் இணைத்துக் கொள்ளக் கோரி தலைமைக்கு உருக்கமாக கடிதம் எழுதி இருக்கிறார்கள். இது குறித்து பேசிய அழகிரி விசுவாசிகள் சிலர், “இவர்களில் சிலர் அழகிரிக்காக கொஞ்சம் ‘கூடுதலாக’ செயல்பட்டிருந்தாலும் கட்சி பிடிப்புள்ளவர்கள். அதனால் தான் இன்னமும் வேறு கட்சிகளுக்குப் போகாமல் இருக்கிறார்கள். உட்கட்சி தேர்தலில் இவர்களில் சிலரது வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்தார்கள்.
இதை கலைஞரின் கவனத்துக்கு கொண்டு சென்றார் அழகிரி. பிரச்சினை இப்படித்தான் ஆரம்பித்தது. அதற்குள்ளாக சிலர், அழகிரியை வைத்து போட்டி பொதுக்குழு நடத்தப்போவதாக மதுரைக்குள் போஸ்டர்களை ஒட்டி தலைமையை சீண்டி விட்டார்கள். அழகிரி இனி தீவிர அரசியலுக்கு திரும்புவாரா என தெரியாத நிலையில், 9 பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறது தலைமை” என்றனர்.
இதுகுறித்து கோபிநாதனிடம் கேட்டதற்கு, “1984 முதல் திமுக-வில் பயணிக்கிறேன். இந்த நிலையில், நான் உள்ளிட்ட சிலர் கடந்த 10 ஆண்டுகளாக கட்சியில் எவ்வித பொறுப்பும் இன்றி முடங்கியுள்ளோம். அதனால் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதி மூலம் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அண்ணன் அழகிரியிடமும் இதைக் கூறிவிட்டோம். தலைவர் நல்ல முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago