புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சி இன்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. இன்று கட்சியின் புதுச்சேரி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ''அம்பேத்கர் முன்னின்று வடிவமைத்து உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தால்தான் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது மக்களின் எண்ணம். அம்பேத்கர் சனாதானத்துக்கு எதிராக, சமூக நீதிக்கு ஆதரவான அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். ஆனால் அவரை தாழ்வுபடுத்தும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார். அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட்டத்தால்தான் பட்டியலின மக்கள் ஓரளவு கல்வியைப் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
கண்ணுக்கு நேராக, மக்களுக்கு நேரடியாக நன்மை செய்யும் இட ஒதுக்கீடு வாய்ப்பினை தந்த யார் ஒருவருமே இறைவன்தான். இறைவன் இடத்தில் பார்க்க கூடிய தலைவரை இழிவு செய்துள்ளனர். நம்மோடு சுதந்திரம் பெற்ற பர்மா, வங்கம், பாகிஸ்தான் நாடுகளில் சுதந்திரம் கிடையாது. பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்து கொண்டுள்ளனர். ஆனால் இந்திய மக்களாகிய நாம் 75 ஆண்டுகளை கடந்தும் சுதந்திரமாக இருப்பதற்கு அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம்தான் காரணம்.
மக்களுக்கு கவசமாக, கேடயமாக இருக்க கூடியது இந்திய அரசியலமைப்பு சட்டம். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதுதான் கேள்வி. பல்வேறு இடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். அவசரமாக நிறைவேற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளது, நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
» அரசு ஊழியர்களின் சொத்துகள், கடன்கள் தனிப்பட்ட விவரம் அல்ல: சென்னை உயர் நீதிமன்றம்
» தமிழகத்தில் விரைவில் 1,000 மக்கள் மருந்தகங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அதுபோல் இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டபோதே ஆர்எஸ்எஸ் இது இந்துக்களுக்கு எந்தவிதமான அம்சங்களும் தரவில்லை என்று கூறியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் அமித்ஷாவின் பேச்சு. இன்று அம்பேத்கரை குறை சொல்பவர்கள், நாளை அரசியலமைப்பு சட்டத்தை குறை சொல்வார்கள். சனாதன தர்மத்தில் அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதாவது ஜாதி பிரிவு சொல்ல வேண்டும்.
இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் அவர்களின் ஆழமான எண்ணம். குரல் இல்லாதவர்களுக்கு குரலாக இருப்பது அரசியலமைப்பு சட்டம்தான். இந்த தாக்குதலின் முதல் படிதான் அம்பேத்கர் மீது நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக, முழுமையாக கண்டிக்கிறோம். இது சம்பந்தமாக இந்தியாவில் அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களில் இருந்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்'' என்றார்.
அப்போது புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தின் மீது 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைத்திலிங்கம், ''சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தின் மீது சுயேட்சை எம்எல்ஏக்கள் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு விவாதம் நடத்த வேண்டும். இதற்கென்று தனியாக சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டும்.
புதுச்சேரி அரசு ஃபெஞசல் புயல் மழை பாதிப்புக்கு மத்திய அரசிடம் ரூ.600 கோடி நிவாரணம் கேட்டது. அதற்கு இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை. இயற்கை பேரிடர் பாதிப்பு என்று மத்திய அரசிடம் தெரிவித்தவுடன் மத்தியில் இருந்து குழுக்கள் வருகின்றன, அக்குழுவினர் பாதிப்புகளை பார்வையிடுகின்றார்கள், செல்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய நிலைப்பாடு என்ன? எப்போது, எவ்வளவு நிவாரணம் தருவார்கள்? என்பது எதையும் தெரிவிப்பதில்லை.
அதனால்தான் நாடாளுமன்றத்தில் பேரிடர் சட்ட திருத்தம் கொண்டு வந்த நேரத்தில் இயற்கைப் பேரிடர் பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழுவானது 15 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுக்கு அதன் நிலைப்பாட்டை தர வேண்டும். ஒரு மாத்துக்குள் பேரிடர் தொகையை தர வேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு தமிழகம், புதுச்சேரி இரண்டு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் தரவில்லை. பேரிடர் மீட்பு நிவாரணம் குறித்து விவாதம் செய்யவாவது சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்.
அதில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநர் அல்லது பேரவைத் தலைவர், அமைச்சர், எம்எல்ஏக்களிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். பேரவைத் தலைவர் செல்வம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அனைத்திலும் மூக்கை நுழைப்பது தவறுதான். பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துத்தானே ஆக வேண்டும். சட்டரீதியாக சரியாக நடந்து கொள்கின்றேன் என்பதை சபாநாயகர் சட்டப்பேரவையில் சொல்ல வேண்டும்'' என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago