சென்னை: அம்பேத்கரை அவதூறு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக செயற்குழுக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைபொதுச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் புத்தகம் வழங்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “கூட்டணியை கட்டமைப்பதில் திமுக தலைவருக்கு நிகர்யாருமில்லை. நாம் களத்தில் கவனம் செலுத்துவோம்” என்றார்.
துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேசும்போது, “தமிழக அரசுக்கு ஆதரவான சூழலால் 50% வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். பெண்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும் பணியை மகளிரணி கவனித்துக் கொள்ளும்” என்றார். துணை முதல்வர் உதயநிதி பேசும்போது, “கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிறது. சமூக வலைதளங்களில் திமுகவை வலுப்படுத்த வேண்டும். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்” என்றார்.
நிறைவாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் களத்தை எதிர்கொள்ள ஒன்றரை ஆண்டுகளே உள்ளது. ஏழாவது முறை ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். இந்த நம்பிக்கைக்கு ஆணிவேர் கட்சியினர்தான். தமிழகம் என்னும் எல்லையோடு அல்லாமல் இந்தியா முழுவதும் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பை ஏற்று பணியாற்றுகிறோம்.
இதற்கிடையே, காற்றில் கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும் பழனிசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்கு 1 சதவீதம் உயர்ந்திருக்கிறது என உளறி இருக்கிறார். அவர் சொன்ன கணக்கை அறிவுள்ள அதிமுககாரர்களே கேட்டு சிரிக்கிறார்கள். பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக பாஜகவை கண்டித்தாரா? அம்பேத்கரை கொச்சைப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பேசினாரா? பிரதமரை எதிர்க்கும் துணிவு அவருக்கு இருக்கிறதா?
திமுக ஆட்சி மீது பெண்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவற்றை ஆதரவு வாக்குகளாக மாற்ற வேண்டும். திமுக நூற்றாண்டு காணும்போதும் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அம்பேத்கரை அவதூறு செய்த மத்தியஉள்துறை அமைச்சர், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, நிதி வழங்குவதில் மத்திய அரசின் பாரபட்ச அணுகுமுறை உள்ளிட்டவற்றுக்கு கடும் கண்டனம். தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு, பேரிடர் நிதி என்பது பாஜக கட்சி நிதி அல்ல என்பதை உணர்ந்து வழங்க வேண்டும். டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கும், கைகோர்த்து திட்டத்தை ஆதரித்து தமிழகத்துக்கு துரோகம் செய்து கபடநாடகமாடும் அதிமுகவுக்கும் கண்டனம். கேரளாவில் நதிநீர் பிரச்சினை குறித்து பேசி திரும்பிய முதல்வருக்கு பாராட்டு. கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை அமைக்கப்பட்ட வெள்ளி விழாவை முன்னெடுக்க வேண்டும். பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் - ஏன் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago