தேயிலை விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: நீலகிரி தேயிலை விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பறிக்கும் பசுந்தேயிலை நீலகிரி மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகிறது. அங்கு தயாரிக்கப்படும் தேயிலைத் தூள் கூட்டுறவு செயலின் நிறுவனமான இன்ட்கோசர்வ் மற்றும் குன்னூர் தனியார் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பசுந்தேயிலைக்கான கொள்முதல் விலையை மாவட்ட கலெக்டர் மற்றும் தேயிலை வாரியம் இணைந்து நிர்ணயம் செய்கிறது. இந்த விலையை விவசாயிகளுக்கு அந்தந்த தொழிற்சாலைகள் வழங்குகின்றன. நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையை தனியார் தொழிற்சாலைகள் வழங்கி வரும் நிலையில், கூட்டுறவு தொழிற்சாலைகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இதுதொடர்பாக விவசாய அமைப்புகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தேயிலை விவசாயிகள் நாளை (திங்கட்கிழமை) முதல், தேயிலையை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சிறுகுறு விவசாயிகள் 1½ லட்சம் பேர் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். பசுந்தேயிலையை விநியோகம் செய்யும் விவசாயிகளுக்கு கொள்முதலுக்கான விலையை மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு நிர்ணயம் செய்கிறது.

அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட அக்டோபர் மாதத்திற்கான தொகையை கூட்டுறவு நிறுவனம் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கவில்லை. தனியார் வெளி மார்க்கெட்டில் கூட்டுறவு விலையை விட அதிக விலைக்கு கொள்முதல் செய்வதாக ஒரு போட்டியை உருவாக்கி, இந்த விளை நிலங்களையும் அபகரித்து விவசாயிகளை வெளியேற்றுவதற்கு சதி செய்யப்படுகிறது. இந்த சதிக்கு தமிழக அரசும் துணை போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்காக நிர்ணயம் செய்யப்படும் தொகையை மாதம் தோறும் சரியாக வழங்க வேண்டும்‌.

இதேபோல் அக்டோபர் மாத நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். படுகர் இன மக்கள் மற்றும் ஆதிவாசி இன மக்களுக்கான உரிமைகள் சரியாக வழங்கப்பட வேண்டும். அரசு நிர்ணயம் செய்யும் விலையை கூட விவசாயிகள் பெற முடியாத சூழ்நிலை இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே நாளை முதல் விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீவிரமடைய உள்ளது.

விவசாயிகள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மாநில மற்றும் தேசிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும். நீலகிரி தேயிலை விவசாயிகளின் உரிமைகள் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் படுக தேச பார்ட்டி தலைவர் மஞ்சை மோகன் உட்பட பலர் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்