தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் நடத்தவிருக்கும் சென்னை முற்றுகைப் போராட்டத்தை தவிர்ப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிசயங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படி நிகழ்ந்தால் தான் அதற்கு அதிசயம் என்று பொருள். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு. பாமக எப்போதெல்லாம் அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் அதிசயங்கள் நிகழும். அந்த வரிசையில் தான் திருவண்ணாமலையில் விவசாயிகள் பேரியக்க மாநாடு என்ற பெயரில் மாபெரும் அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. அமாவாசையிலிருந்து முழு நிலவு உருவாக தேவைப்படும் அதே 28 நாட்களில் இந்த அதிசயம் நிகழ்த்தப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது.

உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்கள் விவசாயிகள் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையாய தத்துவம். ஆனால், கடவுள்களான விவசாயிகளின் இன்றைய நிலையோ சபிக்கப்பட்டதாகவே இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகளை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாட்டை டிசம்பர் 21 ஆம் நாள் திருவண்ணாமலையில் நடத்த வேண்டும் என்று அதன் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகியோரையும், அவர்களை வழிநடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸையும் கேட்டுக் கொண்டேன். மாநாட்டுக்கான அறிவிப்பு நவம்பர் 18 ஆம் நாள் வெளியிடப்பட்ட நிலையில், அதை எவ்வாறு நடத்துவது? என்பது குறித்த கலந்தாய்வு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தான் நடைபெற்றது.

அந்த நாளில் இருந்து சரியாக 28 ஆம் நாளான சனிக்கிழமை மிகவும் பிரமாண்டாக விவசாயிகள் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே மாநாட்டுத் திடல் நிரம்பி வழிந்த நிலையில், திடலுக்குள் நுழைய முடியாமல் இருபுறமும் 6 கி.மீ தொலைவுக்கு பாட்டாளிகள் அணிவகுத்து நின்றனர். 3 லட்சத்திற்கும் கூடுதலான பாட்டாளி விவசாயிகள் திருவண்ணாமலையில் திரண்டிருந்ததைப் பார்த்த போது நடுவில் மலையும், மலையைச் சுற்றி மக்கள் கடலுமாக காட்சியளித்தது.

இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிய விவசாயிகள் பேரியக்க நிர்வாகிகளுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முனைவர் கணேஷ்குமார், ஏந்தல் பக்தா, வேலாயுதம், பாண்டியன் ஆகியோருக்கும், அவர்களுக்கு துணை நின்ற தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பாமக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவண்ணாமலையில் நடத்தப்பட்ட உழவர் பேரியக்க மாநாடு என்பது கூடிக் கலைவதற்கான நிகழ்வு அல்ல. மாறாக, விவசாயிகளின் துயர் துடைப்பதற்கான மாநாடு. அந்த மாநாட்டில் உழவர்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக வடிக்கப்பட்டு மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை தீர்மானங்கள் என்பதையும் தாண்டி உழவர்களின் குரல்கள். அவை அபயக்குரல்கள் அல்ல.... உரிமைக்குரல்கள். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் பேரியக்கமும் ஓயப் போவதில்லை.

தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பகுத்தும், தொகுத்தும் மொத்தம் 10 கோரிக்கைகளாக வடிவமைத்திருக்கிறோம். அவற்றின் விவரம் வருமாறு:

1. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்புக்கு டன்னுக்கு ரூ.5,000 கொள்முதல் விலை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்.

2. கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்வதற்காக வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்க வேண்டும்.

3. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் இழந்த 40 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பை மீட்டெடுக்கும் வகையில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசனத் திட்டங்களை அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டும்.

4. நிலக்கரி சுரங்கம், சிப்காட் வளாகங்கள், அறிவுசார் நகரம் உள்ளிட்ட எதற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நீர்நிலைகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

5. விவசாயிகளின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

6. இயற்கைப் பேரிடர்களில் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அவற்றுக்கு இழப்பீடு வழங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் அதிகபட்ச காப்பீடு வழங்க வகை செய்ய வேண்டும்.

7 விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25,000 கோடிக்கு வேளாண் பயிர்க்கடன்கள் வழங்கப் பட வேண்டும். கடந்த காலங்களில் வாங்கப்பட்டு, செலுத்தப்படாத பயிர்க்கடன்களை அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

8. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். 100 நாள்கள் வேலைத் திட்டத்தை தனியார் விளைநிலங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

9. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

10. கருவேல மரங்களை அழித்து விட்டு, பனை மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் தேவையானவை. இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் விவசாயிகள் திருவண்ணாமலைக்கு திரண்டு வந்தனர் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஏற்பதாக தமிழக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதற்கான இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை போர்நினைவுச் சின்னம் அருகில் முற்றுகை போராட்டத்தை அடுத்த ஆண்டில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் நடத்தும். தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர்கள், மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் தலைநகரை நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

1978 ஆம் ஆண்டில் இந்திய விவசாயிகளின் சாம்பியனான சவுத்ரி சரண்சிங், விவசாயிகள் நலனுக்கான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தியப் போராட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு டெல்லி போட் கிளப் பகுதியில் விவசாயிகள் நலனுக்கான 35 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மகேந்திரசிங் திகாயத் நடத்தியப் போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி 2020- 21ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 491 நாட்களுக்கு நடத்தப்பட்ட போராட்டத்தில் பல லட்சம் விவசாயிகள் பங்கேற்றனர். அந்தப் போராட்டங்களை விஞ்சும் வகையில் சென்னை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இதற்காக தேசிய, மாநில அளவிலான விவசாயிகள் அமைப்புகளின் ஆதரவு கோரப்படும். இந்தப் மாபெரும் போராட்டத்திற்கான தேதியை அடுத்த ஆண்டில் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் அறிவிக்கும்.

உலகில் உயர்ந்த சக்தி என்றால் அது விவசாயிகள் சக்தி தான். அதனால், தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் 10 கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் நடத்தவிருக்கும் சென்னை முற்றுகைப் போராட்டத்தை தவிர்ப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்