சென்னை: ஆதி திராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகப் பல சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாகவும், அவற்றின் பயனாக ஆதிதிராவிட-பழங்குடியின சமுதாயத்தினர் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை விவரம்: 2024ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட சட்டம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்ட சட்டம் (தமிழ்நாடு அரசு சட்டம் 20/2024) இயற்றப்பட்டு 29.5.2024 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இச்சட்டத்தின்மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டத்தைத் தயாரித்தல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல், மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப, நிதியை ஒதுக்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்குரிய செயல்பாடுகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உருவாக்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய "தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்” உருவாக்கப்பட்டுள்ளது
» விடுதலை பாகம் 2 - திரை விமர்சனம்
» சென்னையில் பைனான்சியரை கடத்திய வழக்கில் பெண் உட்பட 4 பேர் கைது
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்: முதல்வர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, ஆழ்ந்த சிந்தனைகளுடன் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” 2023 – 2024- ஆம் ஆண்டு மே திங்களில் அறிவித்தார்கள். நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் இதுவரை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கென்று தனியே முதன் முதல் தொடங்கப்பட்டுள்ள திட்டம் என்பது இத்திட்டத்தின் தனிப்பெருமையாகும்.
இந்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான உன்னதமான திட்டமாகும். முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு இத்திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும், 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது.
இத்திட்டத்தில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 ஆதி திராவிட பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் தகுதியானவர்களான 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் 159.76 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றனர் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1687 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1966 பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்: ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ரூபாய் 100 கோடி வீதம் ரூபாய் 200 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3,082 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழங்குடியினர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தொல்குடி திட்டம்: பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொல்குடி முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் வீடற்ற பழங்குடியினருக்கு 750 வீடுகள் ரூ.40.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. மேலும், இந்நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் இணைந்து வீடற்ற பழங்குடியினருக்காகக் கூடுதலாக 3,594 வீடுகள் கட்டப்படவுள்ளன. பழங்குடியினர் குடியிருப்புகளைத் தன்னிறைவு பெற்ற குடியிருப்புகளாக மாற்றிட 26 மாவட்டங்களில் ரூ.62.22 கோடி மதிப்பீட்டில் 560 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழங்குடியின கிராம மக்கள் மருத்துவ மற்றும் அவசியத் தேவைகளுக்காக அவர்கள் வாழும் கிராமங்களை இணைக்கும் வகையில் 8 மாவட்டங்களில் 26 அணுகு சாலைகள் ரூ.51.47 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் 13 மாவட்டங்களில் முக்கிய மருத்துவ சாதனங்களுடன் கூடிய 20 நடமாடும் மருத்துவ ஊர்திகள் (MMU) வாங்குவதற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 25,000 பழங்குடியின மாணவர்களுக்குச் சிக்கில் செல் அனிமியா மற்றும் தாலாசிமியா பொன்ற மரபணு நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை (Screening) மேற்கொள்ளப்பட்டுள்ளது. செவிலியர் படிப்பு பயிலும் 100 பழங்குடியின மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 70,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகளை மறுசீரமைத்தல்: பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைத்திட முதற்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை நவீன முன்மாதிரிப் பள்ளிகளாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைத் தேவையின் அடிப்படையில் வாகனவசதி, அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM ARISE): ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பொருளாதார மேம்பாடு, இளைஞர்களுக்கான மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த சிறப்பு சுய வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் கடனுதவிகள், நிலம் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் போன்ற திட்டங்களை உள்ளடக்கி முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். இத்திட்டத்தின்கீழ், தனிநபர் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், வங்கியில் கடன் தவணைத் தொகையினைத் தவறாமல், திரும்பச் செலுத்தும் பயனாளிகளுக்கு 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 40 மாதங்களில் இத்திட்டத்தின்கீழ் 52,255 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ரூ.409.68 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு / போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காகச் சிறப்புப் பயிற்சிகள் வழங்க ரூ.10.00 கோடி செலவிடப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற 100 பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்களுக்கு (Traditional Tribal Healers) சுயமாக தொழில் துவங்க ரூ.50,000/- வீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் தொடங்கிய நன்னிலம் எனும் ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டம்: முதல்வர் விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிட மகளிரை நில உடைமையாளர்களாக மாற்றி சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் நன்னிலம் எனும் ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தைப் புதிதாக உருவாக்கியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், 217 பயனாளிகளுக்கு ரூ.10.63 கோடி மானியம் வழங்கப்பட்ட நிலையில், அதிக மகளிரை நில உடைமையாளராக மாற்றுவதற்காக 2024-2025ஆம் நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்திய முதல்வர்: முதல்வர் ஸ்டாலின், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு, 85,000/- ரூபாயிலிருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த தீருதவித் தொகையைக் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 12 இலட்சம் ரூபாயாகவும், மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 317 பேருக்கு வேலைவாய்ப்புகளும், 578 பேருக்கு ஓய்வூதியமும், ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் வழங்கப்பட்டுள்ளன.
சாதி வேறுபாடுகளற்ற முன்மாதிரி சமத்துவக் கிராமங்களுக்குப் பரிசுகள்: சாதி வேறுபாடுகளற்ற முறையில் சமத்துவ மயானங்கள் கொண்டுள்ள கிராமங்களில் 37 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் 37 முன்மாதிரிக் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த திராவிட மாடல் சார்பில் தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் ரூ.3.70 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 199 முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.30.30 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் புதுப்பித்தல்: முதல்வரின் சிறப்புக் கவனம் காரணமாக தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உயர்த்திய ஆதிதிராவிட எழுத்தாளர்களுக்கான பரிசுத் தொகை: முதல்வர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்கள் தொடர்பான கலை, பண்பாடு, இலக்கிய படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.50ஆயிரம் என்பதை ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார். ஆதிதிராவிடர்களை மேலும், பெருமைப்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த தமிழ்ப் படைப்புளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குதல்: வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையினை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 2021க்குப் பின் 19.30 கோடி மதிப்பீட்டில் 2,861 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்வி பயில சிறப்புச் சலுகை: அரசுச் சட்டக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் உயர்நீதிமன்ற சிறந்த நிறுவனங்களிலும் மூத்த வழக்கறிஞர்களிடமும், உட்பயிற்சி (Intenship) பெறுவதற்கு உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் 774 மாணவர்களுக்கு ரூ.77.40 லட்சமும், சென்னை, மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர்களிடம் பயிற்சி பெற உதவித் தொகையாக ரூ.15,000 வீதம் 15 மாணவர்களுக்கு ரூ.65 லட்சமும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2023-24 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவோருக்கான உதவித் தொகை திட்டம்: முதல்வர், ஆதிதிராவிட இளைஞர்கள் உள்நாட்டில் உயர்கல்வி பெறுவதிலும் வெளிநாடுகளுக்குச் சென்று தனித்தன்மையான உயர்கல்வி பெறுவதிலும் தாராளமாக உதவி வருகிறார். அதன்படி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பொறியியல், நிதி, உலக சுகாதாரம், உலகத் தொழில், சட்டம் போன்றவைகளில் முதுகலை படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 64 ஆதிதிராவிட – பழங்குடியின இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் அறிவியல் ஆய்வுக்கூடங்களும்: ரூ.100.00 கோடி மதிப்பில் 150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 39 அரசு உறைவிடப்பள்ளிகளுக்கு 100 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. 2022-2023-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.6.19கோடி செலவினத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்குப் புதிய விடுதிகள்: மாணவர்கள் தங்கள் கல்வியினைச் சிறப்பாகப் பயிலும் பொருட்டு 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட புதிய விடுதிக் கட்டடங்களும், விடுதிகளில் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுகின்றன. முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 535 விடுதிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவுடன் கூடிய விடுதி மேலாண்மை அமைப்பு: விடுதிகளை சீரான முறையில் பராமரித்து, மாணாக்கருக்கு கல்வி பயில நல்ல சூழலை உருவாக்கும் வகையில், பராமரிப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவுடன் கூடிய விடுதி மேலாண்மை அமைப்பு 1,275 விடுதிகளில் ரூ.27.15 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள்: கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தி பழங்குடியின மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கடந்த 40 மாதங்களில் 5,374 பணிகள் ரூ.158.46 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுதல்: பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் 2,787 வீடுகள் கட்டுவதற்கு ரூ.126.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 500 நரிக்குறவர் மற்றும் 1,000 இதர பழங்குடியினர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 மாவட்டங்களில் ரூ.79 கோடி செலவில் 1,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வீடற்ற அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியின குடும்பங்களுக்கு 750 வீடுகள் கட்டுதல்: வீடற்ற அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் மற்றும் இதர பழங்குடியினருக்கு ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து 750 வீடுகள் கட்டுவதற்கு ரூ.40.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இருளர் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டுதல்: அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய இருளர் பழங்குடியினர்களுக்கு (Particularly Vulnerable Tribal Groups) 1,094 வீடுகள் கட்டுவதற்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் வீடற்ற 443 இருளர் பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.19.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்துதல்: பழங்குடியினத்தைச் சார்ந்த 146 இளைஞர்களை அடையாளம் கண்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு ZF குரூப்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா, முருகப்பா குரூப், சாந்தி கியர்ஸ், HDB வங்கி மற்றும் குன்-வோக்ஸ்வாகன் போன்ற உயர் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமுதாயக் கூடங்கள் கட்டுதல்: 20 மாவட்டங்களில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 28 சமுதாயக் கூடங்கள் ரூ.32.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன.
அறிவுசார் மையங்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது அறிவுத்திறனை வளத்துக்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.117.27 கோடி மதிப்பீட்டில் 120 கிராம அறிவு சார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஈங்கூர் மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளை புனரமைத்தல்: ரூ.50 கோடி முதலமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு; ஆதிதிராவிட தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, ஈங்கூர் மற்றும் முதலிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் அரசு தொழிற்பேட்டைகள் தற்போதைய தேவைக்கேற்ப புதிய உட்கட்டமைப்புடன் மேம்படுத்தப்படுகின்றன.
நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியினருக்கான சிறுவணிக கடன்: நரிக்குறவர் மற்றும் இருளர் பழங்குடியினருக்கான வாழ்வாதாரத்தினை மீட்டெடுக்கவும் சுய தொழில் தொடங்கவும் 26 மாவட்டங்களில் வாழும் 2,024 நரிக்குறவர் பழங்குடியினருக்கும், 178 இருளர் பழங்குடியினருக்கும் ரூ.11.01 கோடி அரசு மானியத்துடன் தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.11.01 கோடி சிறுவணிக கடனாக வழங்கப்படவுள்ளது
இப்படி, முதல்வர் பொறுப்பேற்றது முதல் தனிக் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலம் சார்ந்து புதியபுதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழம் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago