‘2026 தேர்தலில் 200+ இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்’ - திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: "2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர்" என்று திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

உள்துறை அமைச்சருக்கு கண்டனம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

புயலின்போது மக்களைக் காப்பாற்றிய முதல்வருக்கு பாராட்டு: தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலை நிர்வாக திறமையுடனும், நேரடி கள ஆய்வுகள் மூலமும் மிகக் கவனமாக கையாண்டு- உரிய முன்னெச்சரிக்கை வெள்ள அபாய அறிவிப்புகளை வெளியிட்டு சாத்தனூர் அணையை படிப்படியாகத் திறந்து - மழை - வெள்ளம் மற்றும் அணை நீரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000 உதவித் தொகை வழங்கி - பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு ஓடோடிச் சென்று ஆறுதல் தெரிவித்து, அவர்களோடு இக்கட்டான நிலையில் துணை நின்று - உயிரிழப்பையும், உடைமைகள் இழப்பையும் பெருமளவில் தவிர்த்து - தங்கள் ஒரு மாத ஊதியத்தை பேரிடர் நிதிக்கு அளித்து-

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதே தங்களின் தலையாய பணி என்று முன்களவரிசையில் நின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் குறைதீர்க்க களத்தில் நின்ற துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் - அனைவருக்கும் தலைமை தாங்கி தானே களத்திற்குச் சென்று ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து - அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட- திராவிட மாடல் அரசின் தலைமைப் பண்பு நிறைந்த - முன்கள வீரர் முதல்வர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த செயற்குழு தனது மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பேரிடர் நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்: ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி ரூபாய் பேரிடர் நிதி கோரி- அதில் அவசரமாக 2000 கோடி ரூபாய் பேரிடர் நிதியை முதல் கட்டமாக அளித்திடும்படி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து - அதன்பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த ஒன்றியக் குழுவிடமும் வலியுறுத்தியுள்ள நிலையில் - தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்த மாநில பேரிடர் நிதியிலிருந்து 944.80 கோடி ரூபாய் வழக்கமான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதே தவிர, ஃபெஞ்சல் புயலுக்கு தமிழ்நாடு முதல்வர் கோரியை அவசரத் தொகை ரூ. 2000 கோடியையோ

அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான 6675 கோடி ரூபாயையோ இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்காமல் - தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு இந்த செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றிய அரசு பேரிடர் நிதி என்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி - இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடுக!: கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் - ஜனநாயகத்தின் வேர்களுக்கும் எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் நடைமுறை சாத்தியமற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை - ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து “நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு” அதிகாரத்தின் துணை கொண்டு, அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக சட்ட ஆணையத்தின் முன்பும், இது குறித்து அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர்நிலைக்குழு முன்பும் “அரசியல் சட்டத்திற்கு எதிரான” முயற்சி என்று தொடர்ந்து எதிர்த்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம்- அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் இருந்து பிரிக்க முடியாத ஜனநாயகத்தினை- அந்த ஜனநாயகத்தின் உயிர் மூச்சான நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்குச் சவால் விடும் வகையில் கொண்டு வரப்படும் “ஒரே நாடு - ஒரே தேர்தல்” மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்து - அதற்கு பணிந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு இந்த மசோதாவை ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுப்பியிருந்தாலும் - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசாதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக, பாஜகவுக்கு கண்டனம்: மாநிலங்களிடமிருந்த ஏல உரிமையை பறித்து முதலில் Mines and Minerals (Development and Regulation) மசோதா-2023யை கொண்டு வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அந்த சட்டத் திருத்தத்தில் “டங்ஸ்டன்” கனிமத்தை ஏலம் விடும் உரிமை ஒன்றிய அரசுக்கே உண்டு என்று குறிப்பிட்டுச் சொன்னதும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்த சட்ட திருத்தம் மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கு வந்த போது, “அதிமுக இந்த மசோதாவை ஆதரிக்கிறது” (Our ADMK Party Supporting this bill) என்றும், “இச்சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ள துறை அமைச்சரை பாராட்டுகிறேன்” (Appreciate the Honble Minister for having brought up this bill) என்றும் டங்ஸ்டன் கனிம ஏல முறையை ஆதரித்து மாநிலங்களவையில் பேசியதும், வாக்களித்ததும் அதிமுக என்பதை நினைவுபடுத்தி, இச்சட்டதிருத்தம் வந்த போதே கடுமையாக எதிர்த்து மக்களவை, மாநிலங்களவைகளை நடத்த விடாமல் குரல் கொடுத்து - வெளிநடப்பும் செய்து எதிர்ப்பை காட்டியது திராவிட முன்னேற்றக் கழகம்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் பற்றி தகவல் வந்தவுடனேயே எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது திராவிட மாடல் அரசு. அதன் பிறகு இதற்காக போராடிய மக்களிடம் சென்று இந்த ஏலத்தை அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்தது திராவிட மாடல் அரசு. கொடுத்த வாக்குறுதிப்படி பிரதமருக்கு கடிதம் எழுதி இந்த டங்ஸ்டன் கனிம ஏலத்தை எதிர்த்ததோடு - சமீபத்தில் நடைபெற்ற மழைகால கூட்டத் தொடரில் சட்டமன்றத்தில் எதிராக தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளதோடு -

“நான் முதலமைச்சர் பதவியிலிருக்கும் வரை டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது” என்று துணிச்சலாக சட்டமன்றத்தில் அறிவித்தார் நமது முதல்வர். “டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும்” “அப்படி பறித்துக் கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அதிமுகவும்” கைகோத்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்சினையை மறைத்து கபட நாடகம் போடும் அதிமுகவிற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கல்வித்துறையில் உரிய நிதி வழங்காத மத்திய அரசுக்கு கண்டனம்: பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதுடன், உயர்கல்வி பயிலும் இருபால் மாணவர்களின் விகிதாச்சாரத்தில் இந்தியாவின் சராசரி 28.4%ஆக மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 47% என மிக உயர்ந்த அளவில் இருப்பதுடன், இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தர வரிசையிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க வேண்டிய நிதியை பாரபட்ச அணுகுமுறையுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கென சிறப்பான கல்விக் கொள்கை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத காரணத்தால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசை இந்த செயற்குழு கடுமையாகக் கண்டிப்பதுடன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநில உரிமைகளைக் கல்வித்துறையிலும் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு இந்த செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்த திமுக அரசுக்கு பாராட்டு: சமூக நீதிக்கும், தமிழ் மொழிக்கும் திராவிட மாடல் அரசு தொய்வின்றி தொண்டாற்றி வருகிறது. குலத் தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என்று கடுமையாக எதிர்த்து பிரதமருக்கும், அந்த துறை சார்ந்த ஒன்றிய அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள திராவிட மாடல் அரசு, “விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ தொடங்கி வைத்துள்ளதற்கும்,

“வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை” தந்தை பெரியார் முன்னின்று போராடிய வைக்கத்தில் கேரள மாநில முதலமைச்சர் அவர்களுடன் கொண்டாடி - தந்தை பெரியாருக்கு அங்கே “புதுப்பிக்கப்பட்ட நினைவகம், நூலகம், கம்பீரமான சிலை” என முப்பெரும் சாதனைச் சின்னங்களை வைக்கத்தில் நிறுவி - தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்திற்குக் கொண்டு சென்று - அங்கே மாபெரும் விழா எடுத்து தந்தை பெரியாரின் புகழ்பாடி - இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நதி நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியிருப்பதற்கும் முதல்வருக்கு செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை கொண்டாடுவோம்: இந்தியாவின் தொடக்கமான குமரி முனையில் 133 அடி உயர அய்யன் திருவள்ளுவர் சிலையினை புத்தாயிரம் ஆண்டு எனும் மில்லினியம் ஆண்டு பிறந்த 1-1-2000 அன்று உலகம் வியக்கும் வகையில் நிறுவித் திறந்து வைத்தார் கருணாநிதி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி வழியிலான சமத்துவத்தைத் தமிழ்மறையாம் திருக்குறள் மூலமாகத் தந்த அய்யன் திருவள்ளவர் சிலை ஆழிப்பேரலையையும் எதிர்கொண்டு, கால் நூற்றாண்டு காலமாக கம்பீரத்துடன் நிற்கிறது.

அறிவு அற்றம் காக்கும் கருவி என்றுரைத்த அய்யன் வள்ளுவரின் சிலையின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் வகையில் டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் எழிலுடனும் ஏற்றத்துடனும் கொண்டாடும் முதல்வருக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து, உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாக (Statue of Wisdom) போற்றிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

தமிழர் பண்பாட்டுத் திருநாளாக பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம்: இயற்கையைப் போற்றி, உழைப்பின் பெருமையை சிறப்பிக்கும் தமிழர் திருநாளான பொங்கல் நன்னாள் தமிழர்களின் பெருமைமிக்க திருவிழாவாகும். தமிழர்கள் மீது படையெடுப்பு நடத்திய கலாச்சாரங்களைத் தகர்த்தெறிந்து, தமிழர்களின் தனி அடையாளமாகவும், சாதி - மதம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்தும், தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் மரபார்ந்த ஆண்டுக்கணக்கின் தொடக்கமாகவும் இருப்பதை தமிழ்ச் சான்றோர்கள் நிறுவியுள்ளனர்.

திராவிடப் பேரியக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பொங்கல் திருநாளைத் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக முன்னெடுத்து தமிழ்ச் சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கினர். அந்த உணர்வை மீண்டும் நிலைநாட்டிடும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத பிற ஆதிக்க கலாச்சாரங்களை முறியடிக்கும் முறையிலும் தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு பாராட்டு: தமிழ்நாட்டை நிர்வாகம், நிதி, உட்கட்டமைப்பு, தொழிற்சாலை, வேலை வாய்ப்பு என அனைத்து துறைகளிலும் சீரழித்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்குப் பிறகு பொறுப்பேற்ற திமுக அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் எண்ணற்றவை. கழக அரசு மேற்கொண்ட நிதி சீர்திருத்தங்கள், நிர்வாக சீர் திருத்தங்கள் மற்ற மாநிலங்களும் வியக்கத்தக்கவை.

மாவட்டந்தோறும் தொழிற்சாலைகள், இளைஞர்களுக்கு அடுத்தடுத்து அரசு வேலை வாய்ப்புகள் - வெளிப்படைத்தன்மை நிறைந்த அரசு நிர்வாகம் என தமிழ்நாட்டில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர், “மகளிர் விடியல் பயணம் திட்டம்” “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” “புதுமைப் பெண் திட்டம்” “தமிழ்ப் புதல்வன் திட்டம்” “தாயுமானவர் திட்டம்” “இல்லம் தேடி கல்வி திட்டம்” “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” “காலை உணவு திட்டம்” “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” “நான் முதல்வன் திட்டம்” “கலைஞர் நூற்றாண்டு உயர் தர சிறப்பு மருத்துமனை” “கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்- கிளாம்பாக்கம்” “பணி புரியும் மகளிர் தோழி விடுதி திட்டம்” “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம்” என பட்டியலிட்டுக் கொண்டே போகும் பன்முக வளர்ச்சிக்கு அடிகோலும் திட்டங்களை பட்டி தொட்டிகளுக்கு எல்லாம் கழக உடன்பிறப்புகள் எடுத்துச் சென்று - “அமைந்ததோர் திமுக நல்லாட்சி- அணிவகுக்கும் மக்கள் நலத் திட்டங்களே அதற்கு சாட்சி” என்று விளக்கிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

2026 தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்: திமுக அரசின் தலைவர் - முதல்வர் மு.க. ஸ்டாலினின் சாதனைத் திட்டங்களை குக்கிராமங்கள் தோறும் - வீடு வீடாக கழக நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் எடுத்துச் சென்று- “வாக்களித்தீர். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தியுள்ளோம். வாய்ப்பளிப்பீர் நல்லாட்சி தொடர்ந்திட” என மக்களிடம் சொல்ல வேண்டும். “வாக்களிக்காத மக்களுக்கும் வாழ்வளிக்கும் அரசு” என்பதை விளக்கிட வேண்டும். அனைவருக்குமான வளர்ச்சி என்பதோடு- அனைவருக்குமான அரசை நடத்தி வருகிறோம் என்பதை அறிவித்திட வேண்டும்.

“குறையேதுமில்லை” என்பதையும், கண்ணுக்குப் புலப்படாத சிறு குறைகளை பொதுமக்கள் சுட்டிக்காட்டினாலும் உடனே சரிசெய்யப்படுகிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள மனமின்றி - வீண் புரளிகள், பொய் பிரசாரங்கள், கற்பனைக் குற்றச்சாட்டுகள் என வெட்டி அரசியல் பேசி, விவேகமாக - தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காவே பாடுபட்டு வரும் அரசை குறை கூறிவரும் அதிமுகவிற்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க தகுதியின்றி - அரைவேக்காட்டு அரசியல் நடத்தி வரும் சில அரசியல் கட்சிகளுக்கும் தக்க பாடம் புகட்ட - 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

மீனவர்களை உடனே விடுதலை செய்திடுக: இலங்கை ராணுவத்தால் தமிழ்நாடு மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது - அவ்வாறு கைது செய்யப்படும் போது தாக்குதல் நடத்துவது - படகுகளை பறிமுதல் செய்து நிரந்தரமாக முடக்கி வைப்பது எல்லாம் மீனவர்களை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தி - அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பதையும் - கைது செய்யப்படும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் கடும் சிறைத் தண்டனை - அபராதம் உள்ளிட்டவை இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு அடையாளமாகத் தெரியவில்லை எனவும் இச்செயற்குழு கவலை தெரிவிக்கிறது.

பிரதமரை சந்திக்கும் நேரங்களிலும் - ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதங்கள் வாயிலாகவும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் எனவும், இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்வதை தடுத்து நிறுத்தி- கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனே மீட்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இச்செயற்குழு பாராட்டுகிறது.

திராவிட மாடல் அரசின் இவ்வாறான தொடர் அழுத்தத்தின் விளைவாக - கடந்த 16.12.2024 அன்று டெல்லி வந்த இலங்கை அதிபர், இந்தியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளியான கூட்டறிக்கையில் “மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகவும்” “மீனவர்கள் தாக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவும்” “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும்” இலங்கையின் புதிய அதிபர் தனது முதல் பயணத்தின்போதே ஒப்புக்கொண்டிருப்பதை - மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான ஒரு நல்ல துவக்கமாக இந்த செயற்குழு கருதுகிறது.

இதை முன்னெடுத்துச் செல்லும் வகையில், “இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து - பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று முதல்வர் விடுத்த வேண்டுகோளை இச்செயற்குழுவும் வழிமொழிந்து - முதல்வரின் ஆலோசனையை உரிய முறையில் ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்து - “இந்தியப் பிரதமர்- இலங்கை அதிபர்” ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக - தமிழ்நாடு மீனவர்களை, படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் - தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு ஒன்றிய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

48 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்