விஜய்யின் கூட்டணி அழைப்பு, ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம், ஆட்சி ஆதிகாரத்தில் பங்கு கோஷம், அம்பேத்கர் பற்றிய அமித் ஷாவின் சர்ச்சை பேச்சு என தொடர்ச்சியாக லைம்லைட்டிலேயே இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த சூழலில் அதன் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்...
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது நாடெங்கும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறதே?
ஒரு பக்கம், அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டை கொண்டாட வேண்டுமென பிரதமர் மோடி அறிவிக்கிறார். மறுபக்கம், நாடாளுமன்றத்திலேயே “அம்பேத்கர் எனச் சொல்வதற்கு பதில் கடவுள் பெயரை சொல்லியிருந்தால் சொர்க்கமாவது கிடைத்திருக்கும்” என்கிறார் அமித் ஷா. அம்பேத்கர் பெயரை சொல்லாதீர்கள் என்பதுதான் அதன் பொருள்.
அம்பேத்கர் “நான் இந்துவாக பிறந்தேன், ஆனால், இந்துவாக சாகமாட்டேன்” எனச் சொல்லி அந்த மதத்திலிருந்து வெளியேறியவர். ஆனால், பாஜக-வின் இலக்கு இந்துராஷ்டிரம் எனச் சொல்கிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற அவர்களின் முழக்கமே அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் வழங்குகின்ற பன்முகத்தன்மைக்கு எதிரானது. ஒருபக்கம், அம்பேத்கர் பெயரைச் சொல்லும் பாஜக, மறுபக்கம், அவரின் பெயரை இருட்டடிப்பு செய்கிறது; இழிவுபடுத்துகிறது.
» ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ரூ.2,152 கோடியை விடுவிக்க வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
“காங்கிரஸ் தான் அம்பேத்கரை புறக்கணித்தது, நாங்கள்தான் அவருக்கு அங்கீகாரத்தை கொடுத்தோம்” என்கிறாரே பிரதமர் மோடி?
காங்கிரஸுக்கும் அம்பேத்கருக்குமான முரண்பாடு என்பது வெறுமனே ஒரு தேர்தல் தொடர்பான முரண்பாடு தான்; கொள்கை முரண்பாடு இல்லை. ஆனால் பாஜக-வுக்கும், அம்பேத்கரை பின்பற்றுவோருக்குமானது கொள்கை முரண்பாடு. அம்பேத்கர் 1952 ஜனவரி 18-ம் தேதி தனது நண்பர் சக்திகாந்த் சித்ரேவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், ‘நடந்து முடிந்த தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டதற்கு முழு காரணம் சாவர்க்கரும், டாங்கேயும் தான்.
காஷ்மீரை நான் பிரிக்க விரும்புவதாகச் சொன்னதாகச் சொல்லி என்னைத் தோற்கடித்தார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து விலகும்போது, ‘இந்து மசோதாவை கொண்டுவந்தபோது நாடுமுழுவதும் உள்ள ஆர்எஸ்எஸ்காரர்கள், காங்கிரஸில் உள்ள ஆர்எஸ்எஸ்காரர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நேரு இந்த விவகாரத்தில் சரியாகவே நடந்துகொண்டார்’ எனச் சொல்கிறார். இப்படியான சூழலில் வரலாற்றை திரிக்கப் பார்க்கிறார் பிரதமர் மோடி. அம்பேத்கரின் கோட்பாடு ஜனநாயகம், பாஜக-வின் கோட்பாடு சனாதனம். இரண்டும் நேர் எதிரானது.
அம்பேத்கர் - அமித் ஷா விவகாரம் பாஜக-வுக்கு பின்னடைவை உருவாக்குமா?
காங்கிரஸின் உயிர்ப்பே பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் வாக்குகள்தான். அதனை கவரவே சமீபகாலமாக அம்பேத்கரை பெயரளவில் புகழ்பாடும் வேலையை பாஜக செய்து வருகிறது. ஆனால், இப்போதைய அமித் ஷாவின் பேச்சு அவர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. இந்த விவகாரம் பாஜக-வுக்கு பெரிய பின்னடைவை மட்டுமல்ல... நாடு முழுவதும் அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தும்
விசிக-வில் இருந்துகொண்டு ‘ஆட்சி - அதிகாரத்தில் பங்கு’ என ஒரு பிரளயத்தை உருவாக்கியவர் ஆதவ் அர்ஜுனா. அதை எப்படி பார்க்கிறீர்கள்?
1999-ல் விசிக தேர்தல் பாதைக்கு வந்தபோதே ‘எளிய மக்களுக்கும் அதிகாரம், கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்’ எனச் சொன்னார் திருமாவளவன். இதுதான் 2016-ல் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் கோட்பாடாக மாறியது. இதைத்தான் ஆதவ் அர்ஜுனாவும் பேசினார். இதைத்தான், “ஆதவ்வின் இந்த கருத்து தவறான கருத்து இல்லை. கட்சியின் நிலைப்பாடு தான்” என்று தலைவரும் சொன்னார். அந்த நிலைப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்.
அப்படியானால் ஆதவ் அர்ஜுனாவை ஏன் இடைநீக்கம் செய்தீர்கள்?
‘இதையெல்லாம் பேசவேண்டாம்’ என தலைவர் சொன்னதை மீறி புத்தக வெளியீட்டில் அவர் பேசினார். அப்படி கட்டுப்பாட்டை மீறியதால் தான் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொதுவாக கட்சியிலிருந்து இப்படி இடைநீக்கம் செய்யப்படுபவர்கள் அதுகுறித்து விளக்கமளிப்பார்கள். அதை உயர்மட்டக்குழு பரிசீலித்து மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பை ஆதவ் அர்ஜுனா உருவாக்கவில்லை. விலகுவதாக அறிவித்து விட்டார். அவர் விலகியது வருத்தமளிக்கக்கூடியதுதான்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி, 2 எம்பி-க்கள், 4 எம்எல்ஏ-க்கள் என அரசியலின் உச்சத்தில் இருக்கிறது விசிக. 2026-லும் திமுக கூட்டணிதானா?
விசிக-வின் இந்தப் பயணம் சாதாரணமானது அல்ல. குருதியாற்றை கடந்து பயணித்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். இப்போது நாங்கள் வலிமைமிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகியிருக்கிறோம். இப்போது தமிழகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு விசிக-வை கூட்டணியில் சேர்த்தால், தலித் அல்லாதவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எண்ணவோட்டம் இருந்தது.
அதனை மாற்றி இப்போது விசிக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற சூழலை உருவாக்கியுள்ளோம். 2026-ல் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என திருமாவளவன் கூறியுள்ளார். என்னைப்போன்ற கடைநிலை தொண்டர்களின் மனநிலை என்னவென்றால், 2026-ல் 25 தொகுதிகளை கேட்டுப் பெறவேண்டும், இது நமது கட்சிக்கான சரியான நேரம் என எண்ணுகிறோம்.
ஆதவ் அர்ஜுனா எழுப்பிய ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் போன்ற முழக்கங்கள் விசிக-வினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதே?
விசிக-வில் உள்ள அனைவரின் விருப்பமுமே எங்கள் தலைவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். எதார்த்த சுழலில் ஒரு தலித் முதல்வராக முடியாது என எங்கள் தலைவர் சொல்கிறார். ஆனால், இன்று அவரை தலித் தலைவராக பார்க்காமல், பொதுத்தலைவராக மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். எனவே, அவருக்கான உயரத்தை அடையவைக்க நாங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது, அதற்காக உழைக்க ஆரம்பித்துவிட்டோம்.
திமுக-வின் ஆட்சி எப்படி உள்ளது?
இந்திய அளவில் மாநில உரிமைகள், மக்கள் உரிமை, திட்டங்கள் என எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளது திமுக ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம் போன்ற பல முன்னோடி திட்டங்களை இந்த ஆட்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒரு மாநில கட்சியாக மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசோடு உரிமையோடு சண்டையிட்டு மாநில உரிமைகள், நிதிபங்கீட்டை போராடிப் பெறுவதில் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதேசமயம் மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறியுள்ளதா என்றால் அது இல்லை. வரும் காலத்தில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
விஜய்யின் கொள்கைகளில் முரண்பாடுகள் இருக்கிறது. ஒருபக்கம், அம்பேத்கரை பற்றி பேசுகிறார். மறுபக்கம் வருணாசிரமத்தை வளர்க்கும் பகவத் கீதையை வாங்குகிறார். பெரியாரை ஏற்பேன் என்கிறார், கடவுள் மறுப்பை ஏற்கமாட்டேன் என்கிறார். இப்படி அவரிடம் பல குழப்பங்களும், தெளிவின்மையும் உள்ளது.
அவர் இன்னும் களத்தில் இறங்கவில்லை. களம் பனையூரில் மட்டும் இருக்கிறது. அவர் இன்னும் பயணம் செய்யவேண்டிய தூரம் நிறைய உள்ளது. சனாதானம், பிளவு வாதம், பிரிவினை வாதம், மதவாதத்துக்கு எதிராக அவர் நிற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
கோவை குண்டுவெடிப்பில் தண்டிக்கப்பட்ட பாஷாவின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்த நீங்கள் நேரில் சென்றது சர்ச்சையை உருவாக்கியுள்ளதே?
இதனை விமர்சிப்பது யார் என்றால் பாஜக-வினர்தான். ஆனால், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே விடுதலையாகவேண்டும் என சொன்னவர்கள் அவர்கள். கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவை வரவேற்றவர்கள் அவர்கள். பில்கிஸ் பானு விவகாரத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளையும் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அசீமானந்தா சாமியாரையும் மாலையிட்டு வரவேற்றவர்கள் பாஜக-வினர். மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரத்யா தாக்கூரை எம்.பி ஆக்கியது பாஜக.
இப்படி பயங்கரவாத செயல்களை செய்வோரை கொண்டாடுபர்கள்தான் பாஜக-வினர். ஆனால், நான் உயிரிழந்த பாஷாவுக்கு மனித நேயத்தின் அடிப்படையில் இரங்கல் தெரிவித்தேன். “குண்டுவெடிப்புக்கும் எனக்கும் சம்மந்தமில்லை” என பாஷா பலமுறை தெரிவித்துள்ளார், இருப்பினும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 80 வயது முதியவரான அவரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தியது மனிதநேயத்தின் அடிப்படையில்தான். எல்லா வகையிலும் வெறுப்பை கட்டமைக்கவே பாஜக எப்போதும் திட்டமிடுகிறது.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வின் செயல்பாடு எப்படி உள்ளது?
மாநில உரிமைகளுக்காக காலமெல்லாம் குரல் கொடுத்த அண்ணாவின் பெயரில் இயங்கும் கட்சி அதிமுக. இப்போது அதற்கு எதிராக செயல்படுகிறது. மாநில உரிமையை பறிக்கும் டெல்லி சீர்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.பி-யான தம்பிதுரை, “அமித் ஷாவுக்காக வாக்களித்தேன்” என்கிறார். அதுபோல ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்துக்கு ஆதரவளிக்கிறார்கள். இப்படி அண்ணாவுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறார்கள்.
தமிழகத்திலும், தமிழக அரசுக்கு எதிராக பல போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கலாம். உதாரணமாக, வேங்கை வயல் பிரச்சினையை தலித்களின் பிரச்சினையாக பார்த்து, அதுகுறித்து ஒரு போராட்டம்கூட நடத்தவில்லை. இதுபோல எந்த இடத்திலும் அவர்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு’ ஆன கதையாக அதிமுக மாறிவிட்டது.
2026-ல் விசிக-வின் இலக்கு என்ன?
2026-ல் விசிக வாக்கு வங்கி அடிப்படையில் வலிமை மிக்கதாக இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள கட்சியாக விசிக இருக்கும். கட்டாயம் சட்டப்பேரவையில் இரட்டை இலக்கத்தில் விசிக உறுப்பினர்கள் இருப்பார்கள்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago