‘விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’ - அன்புமணி ஆவேசம்

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: “விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (டிச. 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், உழவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “யாருக்கும் நிரூபிப்பதற்காக மாநாட்டை நடத்தவில்லை. உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மாநாட்டை நடத்துகிறோம்.

தமிழகத்தில் உள்ள மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் உழவர்களை பற்றிய அக்கறை கிடையாது. அதிலும் குறிப்பாக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி முதலாளிகளுக்கான ஆட்சியாக உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்று சொன்னால் சுற்றிலும் இருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கி போராட்டத்தை தீவிரமாக நடத்துவார்கள். கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. அதுபோல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சென்னையை நோக்கி சென்று அங்கு தங்கி நாம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். கோரிக்கையை நிறைவேற்ற உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துங்கள். விவசாயிகள் சிதறி கிடக்கிறார்கள். ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது.

முதலாளிகளுக்காக திமுக தமிழகத்தில் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது உழவு என்றால் தெரியாது. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். தமிழகத்தில் 63 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு தமிழக அரசாங்கம் எதுவுமே செய்வதில்லை. பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும், ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கின்றனர். 2026-ல் நடைபெற உள்ள தேர்தலில் நிலை மாறும். விவசாயிகள் இனியும் ஏமாந்து போகக்கூடாது. உழவர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 45 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றினால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக மாறும்.

ஐந்தினைகள் உள்ள மாநிலம் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸும், நாங்களும் இருக்கிறோம். உழவர்களே ஒன்று சேருங்கள். வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். தமிழக விவசாயிகளுக்கு இலவசமோ பிச்சையோ வேண்டாம் எங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்தால் போதும் நியாயமான விலையை கொடுக்க வேண்டும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500-ம், ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரமும் கொடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் உரங்களின் விலை அதிகமாக ஏறிவிட்டது.

சென்னை, தென் மாவட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும் திமுக அரசு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்குகின்றனர். இங்குள்ள மக்கள் என்ன பாவம் செய்தவர்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா?. திமுக அரசாங்கம் செய்த தவறால்தான் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், சாத்தனூர் அணையை அதிகாலையில் திறந்துவிட்டதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. இதற்கு பதிலாக திருப்போரூர் அருகில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் பகுதியில் விமான நிலையத்தை கொண்டு வரலாம். வேலூரில் பாலாற்றையும் தென்பெண்ணையாற்றையும் இணைக்க வேண்டும். அந்த மாவட்டத்தில்தான் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார். அவரிடம் கேட்டால் "உம்..." என இரண்டு கைகளை விரித்து காண்பிக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மேல்மா என்ற பகுதியில் சிப்காட் கொண்டு வரவும் 3500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டார்கள். அதனை தடுத்து நிறுத்தியது பாமக.

ஆங்கிலேயர் ஆட்சியில் கூட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடவில்லை. ஆனால் தற்போது நடைபெறுகிற கொடுங்கோல் ஆட்சியில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த திமுக ஆட்சி, எப்படியானது என சிந்தித்துப் பாருங்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் அவர் அமைச்சர் கிடையாது, வியாபாரி. அவரை போன்று முதல்வரை சுற்றி 3 அமைச்சர்கள் உள்ளனர். தொழிற்சாலையை ஆகாயத்திலா கட்ட முடியும் என கேட்கிறார். விவசாய நிலங்களை எல்லாம் அழித்துவிட்டு, நாளை சோற்றுக்கு ஆகாயத்திலா சாகுபடி செய்யமுடியும். தமிழகத்தில் ஒரு சென்ட் விளை நிலத்தை கையகப்படுத்தினால், பாமகவும் அன்புமணியும் சென்று போராட்டம் நடத்துவோம்.

ஏற்கனவே 50,000 ஏக்கர் விளைநிலங்களை என்எல்சிக்கு கொடுத்துவிட்டனர். மேலும் முப்போகம் விளையக்கூடிய 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழிக்க துடித்துக் கொண்டிருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக பேசும் முதல்வர், என்எல்சி சுரங்கத்துக்கு ஆதரவு கொடுத்து, இரட்டை நிலைபாட்டில் உள்ளார். கடலூர் மக்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம், நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கம் மட்டும் வேண்டுமா?. வட தமிழக மக்கள் எப்படியும் வாக்களித்து விடுவார்கள் என மிதப்பில் உள்ளனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். உழவர்களே ஒன்று சேருங்கள், வாருங்கள், எங்கள் கரத்தை நாங்கள் நீட்டுகின்றோம், உங்கள் கரத்தை நீட்டுங்கள், எங்கள் கையை பிடியுங்கள், உங்கள் கையை நாங்கள் பிடிக்கின்றோம், இருவரும் கரம் கோர்த்தால், பிரச்சினைகள் தீரும், ஆட்சி மாற்றம் வரும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்