‘ஒருபக்கம் விழா, மறுபுறம் அம்பேத்கருக்கு அவமரியாதை; இதுவே பாஜகவின் பசப்பு அரசியல்’ - ஸ்டாலின் சாடல்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா. இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அம்பேத்கருக்கு அவதூறு. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பாராட்டியும், கூட்டத்தொடர் முழுவதும் பாஜக அவையை முடக்கியதாகவும் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கையின் விவரம் வருமாறு: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவுற்றுள்ளது. இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுக நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைப் பார்த்து நாடே வியந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுப்பது - மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக கழக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

திமுக எம்.பி.க்கள் என்ன பேசுகிறார்கள் - நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்சினைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை இன்று நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு இந்த திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தான் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்.பி.க்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பாஜக ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் திமுக கவலை கொள்கிறது.

குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மக்களவையானது 54.5 விழுக்காடும், மாநிலங்களவை 40 விழுக்காடும்தான் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட வேதனையான செய்தி இருக்க முடியுமா?

நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பாஜக ஆட்சியின் கையில் “நாடாளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிரகாலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது – அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து - இழிவுபடுத்திப் பேசுவது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. ஒருபுறம் அரசியல் சட்டத்திற்கு விழா - இன்னொரு புறம் அதை உருவாக்கித்தந்த அண்ணலுக்கு அவதூறு! இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் ஆகும்.

இவ்வளவு களேபரத்திலும் – திமுக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்ற தவறவில்லை என்பது - இவர்கள் கலைஞர் வளர்த்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட திராவிட இயக்க ஆற்றலாளர்கள் என்பதை அரங்கேற்றியுள்ளது.

“ஒரே நாடு ஒரே தேர்தலை” கடுமையாக எதிர்த்துப் பேசிய திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு - “மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்” என்றும் “பேரிடர் மேலாண்மை 2024 திருத்தச் சட்டத்தை எதிர்த்தும்” அனல் பறக்கப் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி - “அவைக்குப் பிரதமரே வருவதில்லை” என்று முழங்கிய திருச்சி சிவா - அரசியல் சட்டத்தின் 75 ஆவது ஆண்டில், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்” என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா - மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன் - “வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக” என தயாநிதி மாறன் - என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒன்றிய அரசைத் தட்டிஎழுப்பினார்கள்.

தமிழ்நாடு நலன் சார்ந்த - நம் நாட்டு நலன் சார்ந்த பேச்சுக்களை நான் மட்டுமல்ல நாடே கைதட்டி இப்படியல்லவா நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் எனப் பாராட்டி வருகிறது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டும் நம் எம்.பி.க்கள் ஆக்கப்பூர்வமாக எழுப்பிய அடுக்கடுக்கான திட்டங்கள் பற்றி இங்கே சுட்டிகாட்ட விரும்புகிறேன்.

> இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை.

> ரயில்வே திட்டங்கள்.

> மெட்ரோ ரயில் திட்ட நிதி ஒதுக்கீடு.

> சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது.

> விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிக்கை.

> விவசாயிகளுக்கான பி-எம். கிசான் திட்டத்தின்கீழ் போதிய நிதி ஒதுக்காதது.

> தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்துதல்.

> சுங்கச்சாவடிகளை ஒழித்தல்

> நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை.

> நீதித்துறையில் பன்முகத்தன்மை கோரிக்கை.

> சிறுபான்மையினர் பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய கோரிக்கை.

> சிறுபான்மையினரைத் தாக்கிப் பேசிய உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நாடாளுமன்றக் கண்டனத் தீர்மானம்.

> நீட் தேர்வு முறைகேடுகள்

> வக்ப் வாரிய சட்டத் திருத்த எதிர்ப்பு

> தமிழ்நாட்டின் விமான நிலையத் திட்டங்கள்.

> இந்திய - சீன எல்லைப் பிரச்சினை பற்றி வெள்ளை அறிக்கை கோரியது.

> சென்னை-தூத்துக்குடி வந்தே பாரத்.

> பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்காதது.

> உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை.

> மதுரை எய்ம்ஸ்

> நூறு நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி - தினக் கூலியையும் உயர்த்துவது.

> அகழ்வாராய்ச்சிக்குத் தமிழ்நாட்டிற்கு ஏன் நிதி ஒதுக்கவில்லை.

இப்படி எண்ணற்ற திட்டங்களை - தமிழ்நாட்டின் உரிமைகளை - எந்த மாநில எம்.பி.க்களைக் காட்டிலும் – தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய கழக எம்.பி.க்கள் எழுப்பியது எழுச்சியூட்டியது.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் திமுகவின் தலைவர் என்ற நிலையில் நம் எம்.பி.க்களின் சாதனைகளை மார்தட்டி அறிவித்துக்கொள்ள வேண்டியது முக்கியம் என்றே கருதுகிறேன்.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள் - எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள் – ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் “ஒரே நாடு ஒரே தேர்தலை” ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை – தமிழ்நாட்டு மக்களை ஓரவஞ்சனையுடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்த முடியாது என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாகக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்கள் நமது எம்.பி.க்கள்!

இனியும் ஒன்றிய அரசு திருந்தவில்லை என்றால் - தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் - தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்