சென்னை: திருநெல்வேலியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்ற வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களையும் மீறி இந்தப் படுகொலை நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வரும் அனைவரும் தீவிர ஆய்வுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், காவல்துறையின் சோதனையையும் மீறி கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே வந்தது எப்படி? அப்படியானால், காவல்துறையினர் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கொலையாளிகள் ஆயுதங்களுடன் உள்ளே நுழைவதை காவல்துறையினரே கண்டும் காணாமலும் விட்டுவிட்டார்களா? என்ற ஐயங்கள் எழுகின்றன. இவை அனைத்திற்கும் தமிழக காவல்துறையும், அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களில் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது, நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
ஒவ்வொரு நிகழ்வின் போதும் முன்பகை காரணமாகவே இத்தகைய நிகழ்வுகள் நடப்பதாகக் கூறி காவல்துறையின் தோல்வியை நியாயப்படுத்தும் வகையில் தான் தமிழக அரசு பதிலளிக்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையின் அலட்சிய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
நெல்லை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்கு வந்தவரை கொலை செய்தவர்களை கைது செய்துவிட்டோம் என்று காவல்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையினர் முன்னிலையில் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதைத் தடுக்க தவறிய காவல்துறையினர், கொலை நடந்த பிறகு கொலையாளியைப் பிடிப்பது ஒன்றும் சாதனையல்ல. கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன் கடலூரில் கடை ஒன்றில் வணிகம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டு, 15 நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், அந்த வழக்கிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு என்பது இல்லாமலேயே போய்விட்டது. அது எங்கு போயிருக்கிறது? என்பதுதான் தெரியவில்லை.
ஒரு மாநிலத்தில் அமைதியும், சட்டம் - ஒழுங்கும் நிலவாவிட்டால், அங்கு மக்களால் வாழ முடியாது. சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத தமிழக ஆட்சியாளர்கள், தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் இருந்து வெளியே வந்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி நடமாடவும் வகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago