அதிக மழை பெய்தும் குளம், கண்மாய்களில் நீர் தேங்கவில்லை - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை @ திண்டுக்கல்

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: "திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக மழை பெய்தபோதும் குளம், கண்மாய்களில் தேங்காமல் மழைநீர் வைகை ஆற்றில் கலந்து பிற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டது. நீர்ஆதாரம் இருந்தும் வறட்சி நிலை காணப்படுகிறது" என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் பூங்கொடி தலைமையில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிலக்கோட்டை பகுதி விவசாயி ராஜேந்திரன் பேசுகையில், ''நிலக்கோட்டை பகுதியில் இந்தமுறை அதிக மழைப் பொழிவு இருந்தது. ஆனால் நிலக்கோட்டை பகுதியில் உள்ள 17 கண்மாய், குளங்களில் பெரும்பாலானவை நிரம்பவில்லை. அப்பகுதியில் பெய்த மழை எங்கே போனது.

குளம், கண்மாய்களை இணைக்கும் வரத்து வாய்க்கால்கள் இல்லாததுதான் இதற்கு காரணம். வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போயுள்ளதால் மழைநீர் குளம், கண்மாய்களுக்கு சென்றடைய முடியவில்லை. பெரும்பாலான மழை நீர் ஆற்றில் கலந்து ராமநாதபுரம் மாவட்டப்பகுதிக்கு சென்றுவிட்டது. இனி வருங்காலத்திலாவது குளம், கண்மாய் இணைப்புகளை முறையாக கண்காணித்து வரத்து வாய்க்கால்களை சீரமைத்து மழை நீரை சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நிலக்கோட்டை பகுதியில் போதிய மழை பெய்தும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறட்சி நிலவும் நிலை தான் உள்ளது'' என்றனர்.

இதற்கு பதில் அளித்த ஆட்சியர் பூங்கொடி, ''விவசாயிகள் குளம், கண்மாய்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்ற உத்தரவையடுத்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் எடுத்து பயனடைந்துள்ளனர். இதனால் குளம், கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. வரத்து வாய்க்கால்களை வரும் காலத்தில் முறையாக சீரமைத்து மழைநீரை சேகரிக்கலாம். இந்த ஆண்டு திண்டுக்கல் நகரில் கடந்த ஆண்டைபோல் குடியிருப்பு பகுதிகளுக்கும் மழைநீர் புகாமல் தடுக்க சாக்கடை கால்வாய், வடிகால்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதால் மழைநீர் குடியிருப்பு பகுதிக்கு செல்வது தடுக்கப்பட்டது'' என்றார்.

விவசாயி தங்கவேல் பேசுகையில், ''குஜிலியம்பாறை ஆர்.கோம்பை பகுதியில் மதகுகள் சீரமைக்கப்படாததால் குளங்களில் மழைநீரை தேக்க முடியவில்லை. மழைக்கு முன்னரே இந்த பணிகளை மேற்கொண்டிருந்தால் மழைநீரை சேகரித்திருக்கலாம்.'' என்றார். தொடர்ந்து விவசாயிகள் குறைகள் குறித்த மனுக்களை ஆட்சியர் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்