பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து...
வெள்ள நிவாரணமாக சென்னைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும்போது வடமாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்குவது பிச்சை போடுவது போல இருக்கிறது என காட்டமாக பேசியது ஏன்?
நானே 20 புயல்களுக்கு மேல் பார்த்துள்ளேன். புயல் வெள்ளம் வரும்போதெல்லாம் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள எனது பண்ருட்டி தொகுதிதான் சின்னாபின்னமாகிறது. சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டாலோ, கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டாலோ கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம். அப்படி இருக்கையில், வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிரமாவது கொடுக்க வேண்டும். அதில்லாமல் ரூ.2 ஆயிரம் கொடுப்பது பிச்சை போடுவது மாதிரித்தானே... அதைத்தான் அப்படிச் சொன்னேன். இந்த பாதிப்பைத் தடுக்க அரசூரில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று 2001-ம் ஆண்டு முதல் அதிமுக, திமுக அரசுகளிடம் போராடி வருகிறேன்.
உரிய வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் அரசுக்கு எதிராக நானே களத்தில் இறங்கிப் போராடுவேன் என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறீர்களே..?
» சென்னை, புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
» குட்கா முறைகேடு வழக்கின் ஆவணங்களை பென்-டிரைவில் வழங்க எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள் தள்ளுபடி
வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் இன்னமும் 28 ஆயிரம் பேருக்கு போய்ச் சேரவில்லை. இதனால் எனது தொகுதியில் பலரும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்காக நானும் தலைமைச் செயலகம், தொகுதி என எங்கும் போராடத் தயாராக உள்ளேன். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. மொட்டை மாடி, மரங்களில் ஏறி மக்கள் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அவர்களது உடைமைகள் முழுவதுமாக வெள்ளநீரில் வீணாகிவிட்டது. கடந்த 300 ஆண்டுகளுக்குப் பிறகு கெடிலம் ஆறு, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு இதுவரை இல்லாத பாதிப்பு என்பதால் தான் நிவாரணம் பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறேன்.
தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை தருகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து அமைச்சர்களாகிவிட்டால் அவர்களது வீட்டு வேலைக்காரர்களோ, உதவியாளர்களோ தான் போனில் பேசுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டிருக்கிறீர்களே?
அரசு விழாக்களுக்கு அழைப்பிதழ் அச்சிடும்போது அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களை அடுத்து ஐந்தாவது ஆறாவது இடத்தில் எனது பெயர் இடம்பெறுகிறது. மேடையிலும், நான் பிரச்சாரம் செய்து எம்எல்ஏ ஆனவர்களுக்கு பின்னால் என்னை அமரச் செய்கிறார்கள். சுயமரியாதை, தன்மானத்தை இழந்து எப்படி இருக்க முடியும்? துணை முதல்வர் கடலூர் மாவட்டத்திற்கு வந்தபோது கூட்டணி கட்சித் தலைவர்கள் அரவணைக்கப்படவில்லை.
மழை வெள்ளத்தின் போது துணை முதல்வர் எனது தொகுதிக்கு வந்தபோதும் எனக்குத் தகவலும் கொடுக்கப்படவில்லை. எந்த அமைச்சர் வந்தாலும் இப்படித்தான். பேரிடர் கண்காணிப்பு அதிகாரிகளும் அதுபோலவே நடந்து கொள்கிறார்கள். எங்களை அமைச்சர்களோ, அதிகாரிகளோ மதிப்பதில்லை. கோபித்துக் கொண்டால் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மட்டும் கண்டுகொள்வார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருபோதும் இப்படி நடந்துகொண்டதில்லை. அவரைப் போல இப்போதுள்ள திமுக தலைவர்கள் இல்லை என்பது வேதனையான உண்மை.
இத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு திமுக கூட்டணியில் இனியும் தொடர முடியும் என கருதுகிறீர்களா?
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகத்தான் எனது குரல் ஒலிக்கிறது. ஆளும் கட்சியும், அரசும் இதை சகித்துக் கொண்டு நிவாரணம் தேட உரிய முயற்சியில் இறங்க வேண்டும். அதைவிடுத்து வேல்முருகன் திமுக சின்னத்திலே போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு இப்படி பேசலாமா என எதிர்வினையாற்றினால் அதற்கு நானும் கடுமையாக எதிர்வினையாற்றுவேன்.
மக்களின் வலியைப் பிரதிபலிப்பதுதான் ஒரு எம்எல்ஏ-வின் கடமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். திமுக சின்னத்தில் போட்டியிட்டேன், கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக மக்கள் பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டு என்னால் இயங்க முடியாது.
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக காட்டும் வேகம் உங்களிடம் இல்லை. கூட்டணியில் இருப்பதால் திமுக அரசுக்கு அழுத்தம் தருவதில்லை என்கிறார்களே?
இது முற்றிலும் தவறு. தமிழக சட்டப்பேரவையில் பலதடவை இது குறித்து பேசியுள்ளேன். உச்ச நீதிமன்றம் தரவுகள்தான் கேட்டுள்ளதே தவிர, சாதிவாரி இடஒதுக்கீடு தரக்கூடாது எனச் சொல்லவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்கள் தொடர்பான தரவுகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தாருங்கள் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். அவரும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இப்போது ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
சமூகநீதி வழிவந்த அரசு என்று சொல்லும் திமுக அரசு ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது, தயங்கிறது எனத் தெரியவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுதான் சமூகநீதி. முன்னேறிய சாதிகள், சமூகநீதியைப் பிடிக்காத சாதிகள் முதல்வருக்கு தவறான தகவல்களை தருகின்றனர். எந்த சக்தி முதல்வரின் கைகளைக் கட்டிப்போடுகிறது? இந்த விவகாரத்தில் முதல்வர் தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும்.
எந்தெந்த விஷயங்களில் பிடிவாதமாகவும் உறுதியாகவும் சமரசம் செய்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்?
மூன்று விடயங்களில் எனக்கு சமரசமே கிடையாது. ஒன்று, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும். இரண்டாவது, தனித்தமிழீழ அரசை உருவாக்குவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துவது மற்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த இரண்டையும் உள்ளடக்கிய தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதுபோல திமுக அரசும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இது குறித்து நாடாளுமன்றத்திலும் திமுக கூட்டணி கட்சி எம்பி-க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
மூன்றாவது, எனது பண்ருட்டி தொகுதியில் நிரந்த வெள்ள தடுப்புப் பணிகள், கலைக்கல்லூரி, வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எனது போர்க்குரல் தொடரும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கண்ட 3 கோரிக்கைகள் குறித்த அறிவிப்பையும், அதற்கான விரிவான செயல் திட்டத்தையும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், பொதுக்குழுவைக் கூட்டி, திமுக கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா என்று மறுபரிசீலனை செய்து முடிவெடுப்போம்.
எனக்கு பதவி பெரிதல்ல. கூட்டணி முக்கியமில்லை. எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலோ, எல்லா கட்சிகளும் விரும்பும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமலோ இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து கொண்டு மக்களை எப்படி சந்திக்க முடியும்?
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago