மகா தீப மலையில் தடையை மீறி ஏறிச் சென்று வழி தெரியாமல் தவித்த ஆந்திர பெண் மீட்பு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தடையை மீறி மகா தீப மலையில் ஏறி சென்று வழி தெரியாமல் சிக்கிக் கொண்ட ஆந்திர மாநில பெண்ணை, வனக்காப்பாளர் முதுகில் சுமந்து கீழே கொண்டு வந்தார்.

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழைக்கு திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் திரு அண்ணாமலையில் கடந்த 1-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, மலையில் உள்ள வீடுகள் மீது (வ.உ.சி.நகர் 11-வது தெரு) பாறைகள் விழுந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இதையடுத்து புவியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதில், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள், மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையின் உச்சியில் கடந்த 13-ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மகா தீபம் ஏற்றும் பணியில் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 11 நாட்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிப்பு வெளியானது. மகா தீப மலையில் பக்தர்கள் ஏறிச் செல்லும் வழிதடத்தில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆந்திர பெண்ணை முதுகில் சுமந்து வந்த வனக்காப்பாளர் ராஜேஷ்.

இவ்வளவு, கடுமையான கண்காணிப்புகளையும் மீறி ஒரு பெண் பக்தர் உட்பட 2 பேர் மகா தீப மலையில் கடந்த 15-ம் தேதி ஏறி சென்றுள்ளனர். இதில், அவர்கள் இருவரும் வழி தெரியாமல் தனித்தனியே பிரிந்துள்ளனர். இவர்களில் ஆண் நபர் மட்டும், மலையில் இருந்து கீழே இறங்கி உள்ளார். மேலும் அவர், மலையில் வழி தெரியாமல் பெண் பக்தர் ஒருவர் சிக்கிக் கொண்டுள்ளதாக வனத் துறையிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து வனக்காப்பாளர் ராஜேஷ் மற்றும் தன்னார்வலர்கள், மகா தீப மலையில் கடந்த 16-ம் தேதி காலை ஏறி சென்றனர். ஆண் நபர் தெரிவித்த வழி தடங்களில் சுமார் 5 கி.மீ., தொலைவு சுற்றி வந்தனர். இருப்பினும், அந்த பெண் கிடைக்கவில்லை. பின்னர், 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, மகா தீப மலையின் தெற்கு திசையில் 2 கி.மீ., தொலைவில் (கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பு உள்ள பூங்கா வழித்தடம்) அப்பெண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை அணுகியபோது, உடல் சோர்ந்து இருப்பது தெரியவந்தது. இதனால், அப்பெண்ணை முதுகில் சுமந்து, மலையில் இருந்து வனக்காப்பாளர் இரவு 8 மணியளவில் கீழே கொண்டு வந்தார்.

மலையில் இரவு முழுவதும் தனியாக இருந்ததாலும், குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் இருந்ததாலும் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண்ணின் பெயர் வெங்கடேஸ்வர ராவ் மனைவி அண்ணபூர்ணா (55) என்பதும், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்தது. தடையை மீறி மலையேறிய ஆந்திர பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்