காஞ்சிபுரம் மாநகராட்சியின் 21-வது வார்டு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாய் கரையில் அருந்ததியர் நகர், ஆதிதிராவிடர் பகுதி அமைந்துள்ளது. இங்கு, கடந்த 1983-ம் ஆண்டு முதல் சுமார் 64 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ராஜாஜி மார்க்கெட் பகுதியில் வசித்து வந்த இந்த மக்களை, அப்போதைய அரசு இடமாற்றம் செய்ததால் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகின்றனர்.
மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் மானியத்தில் தொகுப்பு வீடுகள் அமைத்து தரப்பட்டது. இந்த அருந்ததியர் நகர், மஞ்சள் நீர் கால்வாய் கரையோரம் அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தின்போது கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி வாசிகளின் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழையின்போது, வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், வெள்ளம் வடிந்ததும் மீண்டும் முகாமிலிருந்து குடியிருப்புகளுக்கு திரும்பினர். ஆனால், அப்பகுதியில் எந்தவித சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மஞ்சள்நீர் கால்வாயில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், மீண்டும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
» “தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வெள்ளையாக்கப்பட்ட ஜாபர் சாதிக் பணம்” - அண்ணாமலை குற்றச்சாட்டு
» ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு திட்டம் தாமதம்: பணம் ஒதுக்கியும் நிலம் எடுக்கவில்லை!
ஆனால், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாஜகவை சேர்ந்தவர் மாமன்ற உறுப்பினராக உள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.
அதனால், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அருந்ததியர் நகர் பகுதியில் நிரந்தர கால்வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் மற்றும் சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் அல்லிராணி கூறியதாவது: மஞ்சள்நீர் கால்வாயின் இருபக்கங்களிலும் தடுப்பு சுவர் அமைத்திருந்தும், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை உள்ளது. கால்வாயில் வரும் அதிகளவிலான தண்ணீரால் மட்டுமே எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதே தவிர, மழையினால் பாதிப்பு ஏற்படுவதில்லை.
அதனால், இதுதொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கையில்லை. மேலும், குடியிருப்புகளை மழைநீர் சூழும்போதெல்லாம் 2 நாட்கள் பள்ளியில் அமைக்கப்படும் முகாமில் தங்கவைப்பதும், பின்னர் வெள்ளம் வடிந்ததும் மீண்டும் எங்களை குடியிருப்புகளுக்கு அனுப்புவதை மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
40 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். நத்தப்பேட்டை ஊராட்சியாக இருந்தபோதாவது, எங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கிடைத்தன. ஆனால், நகராட்சி மற்றும் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு அரசு உதவிகள் கிடைப்பது மிகவும் அரிதான செயலாக உள்ளது என்றார்.
இதுகுறித்து, அதேபகுதியை சேர்ந்த குமரன் கூறியதாவது: எங்கள் பகுதி தொகுப்பு வீடுகள் பல ஆண்டுகள் கடந்தவை என்பதால், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. சிலரின் வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளது. தற்போது, ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் எங்கள் பிள்ளைகளின் பள்ளி புத்தகங்கள் சேத மடைந்துள்ளன. இதை மாற்றித் தருமாறு முறையிட்டும் நடவடிக்கையில்லை. அதேபோல், ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்துள்ளன.
மேலும், கால்வாய் நீர் தேங்கியதால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, குழந்தைகள், சிறுவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு மருத்துவ முகாம் கூட நடத்தவில்லை. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ததால், நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மஞ்சள்நீர் கால்வாயின் பக்கவாட்டு சுவர்களை உயர்த்தி, தரமாக அமைத்தால், கால்வாய் நீர் எங்கள் பகுதிக்குள் நுழையாது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியை கண்டுகொள்வதேயில்லை. அதனால், சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளாவது எங்களுக்கு புதிய குடியிருப்புகள் மற்றும் வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நவீந்திரன் கூறியதாவது: மஞ்சள்நீர் கால்வாயின் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றால் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் நகர் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனினும், தாழ்வான பகுதியாக உள்ளதால், சின்னவேப்பங்குளம் மற்றும் மின்நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து கால்வாய்களில் வெளியேறும் மழைநீரால், மேற்கண்ட பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
அதற்கு, உரிய தீர்வுகாணும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. அதேபோல், வீட்டு வசதி மற்றும் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகளை அமைத்து தரவும், சீரமைக்கவும், துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவ முகாம் உள்ளிட்ட சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago