யாருக்கும் எந்தக் கட்சியும் நிரந்தரம் இல்லை என்பதுதான் புதுச்சேரி அரசியல் களத்தின் கடந்த கால வரலாறு. அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்குப் போட்டு இங்கே ஆளாளுக்கு தனி அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரசுக்கும் பாஜக-வுக்கும் நீண்ட நாட்களாகவே சுமுகமான உறவு இல்லை.
அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்காத பாஜக எம்எல்ஏ-க்கள் டெல்லிக்கே சென்று முதல்வர் ரங்கசாமி மீது புகார் வாசித்துவிட்டு வந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “பாஜக வேண்டாம்ணே... தனித்தே நிற்போம்” என என்.ஆர்.காங்கிரஸ் காரர்களும் முதல்வர் ரங்கசாமிக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதே மனநிலையில் இருக்கும் ரங்கசாமியும் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைவராக இருந்தும் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தை இதுவரை ஒரு முறைகூட கூட்டாமல் இருக்கிறார்.
தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி கிடைக்காததால் ரங்கசாமி மீது அதிருப்தியில் இருக்கும் பாஜக எம்எல்ஏ-க்களான ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமையில் தனி அணி ஒன்றை அமைத்துள்ளனர்.
» ‘ஸ்பாட்டிஃபை ராப்’ அலப்பறைகள் - நடந்தது என்ன?
» பாஜக - திமுக இடையே ரகசிய உறவு: புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு
இவர்கள் ஆளாளுக்கு ஒரு தொகுதியை பிரித்துக் கொண்டு அங்கு களமிறங்க காய்நகர்த்தி வருகிறார்கள். அதற்காக இப்போதே பணத்தை வாரி இறைக்கிறார்கள். தமிழகத்தைப் போலவே இங்கும் இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. அதனால், கட்சியை விட்டு வெளியே போனவர்கள் மீண்டும் திரும்பி வந்தால் சேர்ப்பதில்லை என்று திடமாக இருக்கிறது காங்கிரஸ். இருந்த போதும் ஆளும் கூட்டணி எம்எல்ஏ-க்கள் சிலர் காங்கிரசுக்கு தூதுவிட்டபடி இருக்கிறார்கள்.
இதுபற்றி காங்கிரஸ் எம்பி-யான வைத்திலிங்கத்திடம் கேட்டதற்கு, “ஆளுங்கட்சியில் இருந்து அந்த எம்எல்ஏ வருகிறார், இந்த எம்எல்ஏ வருகிறார், கட்சி மாற தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் தயாராக இருந்தாலும் நாங்கள் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை” என்றார்.
பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ தமிழகத்தில் திமுக அணிக்கு இருக்கும் செல்வாக்கு தங்களுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் அமைதிகாக்கிறது. அதிமுக-வும் இங்கு தனது இருப்பைக் காட்டிக்கொள்ள மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதிமுக வலுவான கூட்டணியை கட்டமைப்பதைப் பொறுத்தே இவர்களுக்கான எதிர்காலம் இருக்கும்.
இந்நிலையில், புதுச்சேரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு, கட்சி நடவடிக்கைகளை விட்டு விலகி இருக்கும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
இதுபற்றி நேருவிடம் கேட்டதற்கு, “அரசின் தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். புதுச்சேரியை சிலர் விலைபேசி விற்க முயல்கிறார்கள். அதனால் இங்கு ஊழல் மலிந்துவிட்டது. ‘ரெஸ்டோ பார்’களால் மக்கள் வாழ முடியாத ஊராக புதுச்சேரியை மாற்றி வருகின்றனர். இதையெல்லாம் சரிசெய்ய ஒத்த கருத்துடைய நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
ஓரணியாக இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளோம். எங்களோடு வேறு சில கட்சிகளில் இருந்து இன்னும் சிலரும் வரதயாராக உள்ளனர். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார். தேர்தலுக்குள்ளாக புதுச்சேரி அரசியலில் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு காசு இருப்பவர்கள் கரை சேர எத்தனை அணிகளை உருவாக்கப் போகிறார்களோ... யாருடன் யார் கைகோக்கப் போகிறார்களோ... பார்க்கலாம்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago