சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி: அன்புமணி, தினகரன் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:

அன்புமணி: காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மிலி ரூ.25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தை கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பை ஏற்படுத்துகிறது.

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்திவிட்டு, அதற்கு சில்லறை தட்டுப்பாடுதான் காரணம் என்பது மக்களை முட்டாளாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலி ரூ.20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மிலியாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம். ஆனால், பாலின் அளவையும் 50 மிலி குறைத்துவிட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்.

ஒரு காரணம் போதாது என்று, சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு சற்று அதிக கமிஷன் தரும் நோக்குடனும் விலை உயர்த்தப்படுவதாகவும் ஆவின் கூறியிருக்கிறது. அனைத்து வகை பால்களுக்கும் செய்யப்படும் குளிர்சாதன செலவினங்கள்தான் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலுக்கும் ஏற்படும்.

பாலின் விற்பனை விலையை உயர்த்த அது எந்த வகையிலும் காரணமாக இருக்காது. சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் கமிஷன் என்பது, அதிக விலை கொண்ட பாலை முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்வதற்கான ஊக்குவிப்பே தவிர அது நியாயமான காரணம் அல்ல.

ஆவின் நிறுவனத்தின் இந்த விளக்கங்களையெல்லாம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டிடிவி. தினகரன்: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் பெயரில் "பிளஸ்" எனும் பெயரை சேர்த்து லிட்டருக்கு ரூ.11 வரை உயர்த்தப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில்லறை தட்டுப்பாட்டை காரணம் காட்டி பொதுமக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் முடிவை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்ற உற்பத்தியாளர்களின் நீண்டகால கோரிக்கையை பரிசீலனை கூட செய்ய முன்வராத திமுக அரசு, ஆண்டுக்கு இருமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்துவது உற்பத்தியாளர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும்.

எனவே, ஏழை, எளிய பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, ஆவின் நிர்வாகத்தின் வருவாயைப் பெருக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்