“என்னை நீக்க வலியுறுத்தியது திமுக-வின் மன்னராட்சி மனப்பான்மை!” - ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி

By எஸ்.கோவிந்தராஜ்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய பேச்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி திமுக-வுக்கு எதிரான தனது கருத்தால் விவாதப் பொருளாகிப் போனார் ஆதவ் அர்ஜுனா. அதற்காக விசிக-வை விட்டு தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்ட போதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத ஆதவ், தொடர்ந்து தடதடத்து வருகிறார். ‘இந்து தமிழ் திசை’க்காக அவரிடம் பேசியதிலிருந்து...

பட்டியலினத்தை சாராத ஒருவருக்கு கட்சியின் உயர் பதவி வழங்கப்பட்டதால், உங்கள் மீது பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டதா.?

பட்டியலின மக்களுக்கான அதிகாரத்தை உருவாக்குவதும், பொருளாதார வலிமையை கட்டமைப்பதும் எனது இலக்காக இருந்தது. இந்த நிலையில் விசிக-வில் எனக்கு துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்ட போது, எல்லா நிர்வாகிகளும் வரவேற்றனர்.

ஆனால், அதன்பின் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற குரலை எழுப்பினேன்: அது ஆளும் வர்க்கத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. என்னை விசிக-வை விட்டு நீக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அறிக்கை விடுத்தார். விசிக-வில் திமுக சார்பில் உள்ள சிலரைத் தூண்டிவிட்டு எனக்கு எதிராகப் பேச வைத்தனர்.

விசிக-வில் இருந்து உங்களை நீக்க திமுக தான் அழுத்தம் கொடுத்ததா?

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற எனது குரல் ஆளுங்கட்சியை கோபப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கட்சியிலிருந்து என்னை நீக்க எல்லா திட்டங்களும் உருவாக்கப்பட்டது. விசிக-வில் இருந்து என்னை நீக்க வேண்டும் என ஆ.ராசா சொல்கிறார். அப்படியானால் சாம்சங் போராட்டத்தில் அரசுக்கு எதிராக போராடிய சவுந்தரராஜனையோ, வாசுகியையோ நீக்க வேண்டும் என ஏன் சொல்லவில்லை?

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை திருமா வளவனின் ஒப்புதலோடு தான் நீங்கள் எழுப்பினீர்களா?

நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக ஆட்சியில் பங்கு என்று சொல்லக் கூடாதா? ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை நான் மக்கள் மன்றத்தில் வைக்கிறேன். நான் இந்த பிரச்சாரத்தை உருவாக்கிய போது, எந்த எதிர்ப்பும் இல்லை. ஐந்தாறு பேர் எம்எல்ஏ ஆவதற்காக இந்தக் கட்சி உருவாக்கப்படவில்லை.

உங்களது கோஷத்தைத் தொடர்ந்து விஜய் தனது கட்சி மாநாட்டில் இதையே வழிமொழிந்து பேசியது எதார்த்தமாக நடந்ததா?

விஜய்யின் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற ஒரு கருத்து எனது கருத்துடன் ஒத்துப் போகிறது. இந்த மனப்பான்மை தமிழகத்தில் உருவாக வேண்டும். கூட்டணி இல்லாமல் யாரும் இங்கு முதல்வராக முடியாது என்று அவர் யோசித்திருக்கலாம்.

பிரதமர் மோடி வெற்றி பெற்ற பிறகு, அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுக்கிறார். சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற பிறகு அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கு அமைச்சரவையில் பங்கு கொடுக்கிறார். ஆனால், தமிழகத்தில் 25 சதவீத வாக்கு மட்டுமே வைத்துள்ள ஒரு கட்சி தனிப் பெரும் கட்சியாக தன்னை நினைத்து அதிகாரப் பரவலைத் தடுக்கிறது. இதைத்தான் மன்னராட்சி என்று குறிப்பிடேன்.

உங்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக விசிக-வை உடைத்திருக்கும் என்கிறார்களே?

விசிக தலைவர் திருமாவளவனை மக்கள் நம்புகின்றனர். எனவே, அது எப்போதும் சாத்தியமில்லை. பட்டியலின மக்களின் காட்ஃபாதர் திருமாவளவன் மட்டுமே.

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடந்ததா?

அந்த விழாவுக்கு திருமாவளவன் ஒப்புதலுடன் தான் விஜய் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கட்சி தொடங்கவில்லை. விஜய் கட்சி தொடங்கிய பின், விழா நடந்தது. இதில் பங்கேற்கலாமா என்று திருமாவளவன் எல்லோரிடத்திலும் கருத்துக் கேட்டார். என்னிடம் கேட்டபோது. “கலைஞர் இருந்திருந்தால், அவரே விழாவில் பங்கேற்று, தேவைப்பட்டால் விஜய்க்கு அறிவுரை கூறியிருப்பார்” என்று சொன்னேன்.

ஆனால் “இப்போதுள்ள திமுக-வில் இந்த ஜனநாயக போக்கு இல்லை. நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் நீங்கள் கலந்து கொண்டால் கூட்டணியில் பிரச்சினை வரும் நீங்கள் அதில் பங்கேற்கக்கூடாது” என அமைச்சர் எ.வ.வேலு, திருமாவளவனிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு மேல் அவர் என்னவெல்லாம் பேசினார் என்பதை மனசாட்சியின் அடிப்படையில் நான் பேசவில்லை.

திருமணத்துக்கு என் அப்பா வரவில்லை என்றால் என்ன கோபம் இருக்குமோ, அந்த கோபம் தான் என்னுடைய விழா பேச்சில் எதிரொலித்தது. இந்த விஷயத்தில் திமுக கடந்து போயிருக்கலாம். ஆனால், என்னை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது தான் திமுக-வின் மன்னராட்சி மனப்பான்மை.

அந்த விழாவில் நீங்கள் பேசிய மன்னராட்சி, காஞ்சிப் பெரியவர் போன்ற விவகாரங்கள் சர்ச்சையாகி விட்டதே.?

ஊழல் பற்றி பேசும்போது சாமியார்கள் பற்றி பேசினேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம். ஆனால், சமூகத்தில் உண்மையான பெரியாரிஸ்டுகளும், திராவிட இயக்கத்தினரும் இருக்கிறார்கள். மறுபுறம் மேடைக்கு மேடை பெரியாரைப் பேசிக்கொண்டு, அமைச்சர்களாக பதவி வகித்து, ஊழல் பணத்தில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைக் கட்டி குடும்ப வளத்தை பெருக்கிக் கொள்பவர்களும் இருக்கின்றனர்.

அதோடு, மன்னராட்சி மனப்பான்மை தூக்கி எறியப்பட வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ராகுல் காந்தி துணைப் பிரதமராகும் வாய்ப்பு இருந்தும், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை. இந்தப் பக்குவம் தமிழகத்தில் இல்லை. பிறப்பால், வாரிசு அடிப்படையில் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்களாக எத்தனை பேர் மாறியுள்ளனர். இது ஒழிக்கப்பட வேண்டும். மன்னராட்சி குறித்து நான் பேசும் போது யாருக்கு கோபம் வருகிறதோ அவர்கள் தான் மன்னர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மூன்றரை ஆண்டு கால திமுக ஆட்சி எப்படி உள்ளது?

திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது நான் அவர்களுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டேன். அப்போது (கடந்த ஆட்சியில்) என்னென்ன தவறுகள் நடந்ததோ அவை அப்படியே தொடர்கின்றன. மக்கள் பிரச்சினைகள் எதுவும் பெரிய அளவில் தீர்க்கப்படவில்லை. மூன்றரை ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரம் நன்றாக உள்ளது என்று அறிவு ஜீவிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக. பட்டியலின மக்களுக்கான பிரச்சினைகள் தீரவில்லை.

பட்டியலின மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றால் என்னதான் எதிர்பார்க்கின்றீர்கள்?

குறைந்தபட்சம் 20 தொகுதிகள் விசிக-வுக்கு கொடுக்க வேண்டும். நான்கு அமைச்சர்கள் கொடுக்க வேண்டும். ஆறு மேயர்கள், 25 நகராட்சி தலைவர்கள், 300 பஞ்சாயத்து தலைவர் பதவிகளைக் கொடுக்க வேண்டும். இதற்காகத்தான் 40 ஆண்டுகளாக விசிக உழைத்து வருகிறது.

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்.. ஆறு மாதம் அமைதி காப்பீர்களா?

அதை விசிக தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். என்னால் ஒரு நொடி கூட அமைதியாக இருக்க முடியாது. எந்த அடக்குமுறை வந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுப்பேன். அமைதியாக இருந்தால் எம்எல்ஏ பதவி, எம்பி பதவி கிடைக்கும் என்றால், அது மக்களுக்கு நான் செய்யும் துரோகம். அதை என்றும் செய்யமாட்டேன்.

தேர்தல் வியூக வகுப்பாளராக சொல்லுங்கள்... 2026 தேர்தல் களம் எப்படி இருக்கும்?

எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்.

இன்றைய சூழலில் தமிழகம் தழுவிய தலைவராக மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார் என்பதை ஏற்கிறீர்களா?

இன்று தமிழகத்தில் யாரும் பெரிய தலைவர்கள் இல்லை. ஜெயலலிதா போல், தனித்து நின்று 45 சதவீத வாக்குகளைப் பெற்றால் தான் தனிப்பெரும் தலைவர் என்று சொல்ல முடியும். திருமாவளவனும், ஸ்டாலினும் சமமான தலைவர்கள் தான்.

விஜய் கட்சியில் சேர்ந்து விடுவீர்கள் என்கிறார்களே..?

அதை எதிர்காலம் தான் முடிவு செய்யும். விசிக-விலேயே தொடர்ந்து இருந்து, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான பிரச்சாரத்திற்கான முயற்சிகளை எடுக்குமாறு திருமாவளவன் கூறினால் இங்கேயே இருந்து விடுவேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்