“சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்” - அன்புமணி குற்றச்சாட்டு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்க்கும் வேளையில், என்எல்சி சுரங்க விரிவாக்கத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடம் தெரியவந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை, செங்கம் சாலையில் வரும் 21-ம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெற உள்ள இடத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (டிச.14) பார்வையிட்டு, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் வரும் 21-ம் தேதி மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள உழவர்கள் கூட உள்ளனர். உழவர்களை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம். விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மாநாடு நடத்தப்பட உள்ளது. இது போன்ற மாநாட்டை, பிற அரசியல் கட்சிகள் நடத்தியது கிடையாது, நடத்த போவதும் கிடையாது. மாநாட்டில், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வலியுறுத்தப்படும்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500, ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர், கனி, பூக்கள் உட்பட அனைத்து விளை பொருட்களுக்கும், மத்திய மாநில அரசுகள் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். சுய மரியாதையுடன் வாழ முடியாத சூழல், தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலவுகிறது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் திராவிட மாடல் அரசுக்கு விவசாயிகளின் பிரச்சினை தெரியாது. 38 மாவட்டங்களிலும் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கி, விளை பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக உருவாக்கலாம். இத்திட்டம் மேற்கத்திய நாடுகளில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

காவிரி - குண்டாறு திட்டம், சேலம் - மேட்டூர் உபரி நீர் திட்டம், தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டம் போன்ற நீர் பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டும். விளை நிலங்களை, தமிழக அரசு வலுகட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்து, பெரு முதலாளிகளுக்கு சிப்காட் பெயரில் நேரிடையாகவும் மற்றும் மறைமுகமாகவும் தானமாக வழங்குகிறது. திருவள்ளூவர் மாவட்டத்தில் அறிவு சார் நகர் அமைக்க, முப்போகம் விளையும் 1,200 ஏக்கர் நிலத்தை, அதிகாரத்தின் மூலம் அபகரித்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துள்ளனர். செய்யாறு சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் 3,500 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர்.

கொடுங்கோல் ஆட்சி: இதை எதிர்த்து போராடிய 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது, திராவிட மாடல் ஆட்சியின் கொடுங்கோல் ஆட்சி. அவர்களை போராடி மீட்டு கொடுத்தது பாமக. தமிழகத்தில் 63 விழுக்காடு உழவர்கள் வாழ்கின்றனர். பாமகவில் 90 விழுக்காடு உழவர்கள் உள்ளனர். நம்மாழ்வார், நாராயணசாமி நாயுடு வாழ்ந்த காலத்தில் விவசாயிகள் ஒன்றாக இணைந்ததால், அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியது. இப்போது கட்சி ரீதியாக பிரிந்து உள்ளதால், விவசாயிகளுக்கு எதிராக அரசாங்கம் செயல்படுகிறது. எதிர்காலம் இல்லாத சூழல் உருவாக்கி உள்ளனர். விவசாயிகள் மாநாடு மூலம் திருப்புமுனை ஏற்படும். விவசாயிகளின் கோரிக்கையை முன் வைக்கக்கூடிய மாநாடு இது. விளம்பர அரசியல் செய்யும் காலத்தில், நாங்கள் விவசாயிகளின் பிரச்சினையை பேசுகிறோம்.

நிதி வழங்குவதில் பாரபட்சம்: தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் அரசு என்பது, விவசாயிகளுக்கு எதிரான அரசு. பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. விவசாயம் என்றால் முதல்வர், துணை முதல்வருக்கு தெரியாது. விவசாயத்துக்கு வெற்று அறிவிப்பு வெளியிடுகின்றனர். மத்திய அரசு தொடக்கத்தில் 12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியது. இப்போது 6 கோடி விவசாயிகளாக குறைத்துவிட்டனர். தமிழகத்திலும் மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. திமுக அரசால் ஏற்பட்ட வெள்ளம். சாத்தனூர் அணையை அதிகாலையில் முன்னறிவிப்பு இல்லாமல் விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி திறந்ததால் இழப்பு ஏற்பட்டது. தென்பெண்ணையாறு வெள்ளத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். புயலுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். உணவுக்கு வழி இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை மாவட்டத்தில் வெள்ளம் வந்தால் ரூ.6 ஆயிரம் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், வட மாவட்டங்களில் வெள்ளம் வந்தால் ரூ.2 ஆயிரம் கொடுப்பது ஏன்?. பாரபட்சம் ஏன்?. சென்னைக்கு ஒரு நீதி, வட மாவட்டங்களுக்கு ஒரு நீதியா?. சமமாக கொடுக்க வேண்டும்.

10 மாதம் அமைதியாக இருந்த முதல்வர்: டங்ஸ்டன் சுரங்கம் தொடங்க, 5,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது. திமுக அரசு 10 மாதமாக அமைதியாக இருந்துவிட்டு, மக்கள் போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியதால், நாங்கள் எதிர்க்கிறோம் என முதல்வர் கூறுகிறார். டங்ஸ்டன் தொடங்க பாமக அனுமதிக்காது. மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

டங்ஸ்டன் சுரங்கங்களை பதவியில் உள்ள வரை அனுமதிக்க மாட்டோம் என கூறும் முதல்வர், நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்தை எதிர்க்காதது ஏன்? ஏற்கெனவே, 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்கப்பட்டுவிட்டது. மேலும் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் அழிக்க துடிக்கின்றனர். இதற்கு திராவிட மாடல் அரசு துணையாக உள்ளது. மதுரைக்கு ஒரு நீதி, கடலூருக்கு ஒரு நீதியா?. இதன்மூலம் முதல்வரின் இரட்டை வேடம் தெரியவருகிறது. நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைபாட்டை எடுக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயல்: ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவை நடத்துவோம், நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர். 18 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை நடந்தது. இது ஜனநாயத்துக்கு எதிரான செயல். விவாதம் இல்லாமல், 16 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளனர். மக்கள் ஆவேசத்துடன் உள்ளனர். இதனால் 200 தொகுதி அல்ல, 300 தொகுதியில் கூட வெற்றி பெறலாம். ஆதானியிடம் நேரிடையாக மின்சாரம் வாங்கவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். லஞ்சத்தை கையில் வாங்க மாட்டேன், மேஜையில் வைத்துவிட்டு போ என சொல்வது போல் உள்ளது. சூரிய ஒளி மின்சார கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது என அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்துள்ள வழக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு தயாரா? - நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை பாமக ஆதரிக்குமா? என சட்டப்பேரவையில் முதல்வர் கேட்கின்றார். அதானி விவகாரத்தில் எந்த வகையான விசாரணையும் ஆதரிக்கிறோம் என முன்பே கூறிவிட்டோம். தமிழ்நாடு மின்சார வாரியம் பெயர் இடம்பெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் தயாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை. தவறு இருப்பதால் அமைதியாக உள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்கள், பாலங்கள் அனைத்தும் உறுதி தன்மை இல்லாமல் இருக்கு என்ற அதமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு நாங்களும் ஆதரவு கொடுக்கிறோம். லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் தரம் இல்லாமல் பாலம், கட்டிடம் கட்டுகின்றனர். 3 மாதத்தில் பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றுவிட்டது. பிஹார் போன்று பாலம் அடித்து செல்லப்படுகிறது” என்றார்.

இந்த சந்திப்பின் போது மாநில கவுரவத் தலைவர் கோ.க.மணி, பசுமை தாயகம் தலைவர் சவும்யா அன்புமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட பாமக செயலாளர்கள் பக்தவச்சலம், பாண்டியன், கணேஷ்குமார், வேலாயுதம், மாநில செயற்குழு உறுப்பினர் காளிதாஸ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதையடுத்து அண்ணாமலையார் கோயிலில் மனைவியுடன் அன்புமணி ராமதாஸ் தரிசனம் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்