தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவியது.
இந்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்க கூடும். மேலும் இன்று (டிச.14) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகல் முழுவதும் கனமழை கொட்டியது. இரவு 9 மணிக்கு பிறகு மழை படிப்படியாக குறைந்தது. கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தின் வடபகுதியில் பெரும்பாலான இடங்களில் மிக கனமழை பெய்தது. நேற்று அதிகாலையில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. காலை 9 மணிக்கு பிறகு லேசாக வெயில் அடித்தது. மதியம் 12 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதே நேரத்தில் தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. மதியம் 2.30 மணி முதல் தூத்துக்குடியில் மிதமான சாரல் மழை பெய்தது.
» விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு
» ஒரே நாளில் 36.5 செ.மீ மழை: கோவில்பட்டியில் கண்மாய்கள் உடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு
தொடர் மழையால் தூத்துக்குடி மாநகர பகுதியில் ராஜீவ்நகர், தபால் தந்தி காலனி, முத்தம்மாள் காலனி தொடர்ச்சி, ராம்நகர் பகுதிகளில் ஆங்காங்கே வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. முக்கிய சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. மற்ற பகுதிகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த பணிகளை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் லி.மதுபாலன் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலையில் மழைநீர் தேங்கியது. அதனை உடனடியாக மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினர். கீழ் தளத்தில் உள்ள நோயாளிகள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக முதல் மாடிக்கு மாற்றப்பட்டனர். அனைத்து உபகரணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் வடபகுதியில் பெய்த கனமழையால் கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலை, நாகலாபுரம்- கே.துரைச்சாமிபுரம் சாலை,புதுப்பட்டி- வேடப்பட்டி சாலை, ஆதனூர்-மிளகுநத்தம் சாலை, பட்டினமருதூர்- குளத்தூர் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஓடையில் வெள்ளப்பெருக்கு: நேற்று முன்தினம் கயத்தாறு, கடம்பூர், மணியாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி உப்பாற்று ஓடையில் கலந்தது. இதனால் அந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உப்பாற்று ஓடை மழை வெள்ளம் நேற்று காலையில் கோரம்பள்ளம் குளத்தை வந்தடைந்தது. இதனால் கோரம்பள்ளம் குளத்தில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்ததால் அதிலுள்ள 5 மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மாலை 3 மணி நிலவரப்படி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 3,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அத்திமரப்பட்டி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அத்திரமரப்பட்டி- காலாங்கரை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், பல ஏக்கர் வாழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தாண்டி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது. இது 75 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை 6.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடி 59.50 ஸ்ரீவைகுண்டம் 145, திருச்செந்தூர் 41.10, காயல்பட்டினம் 105, சாத்தான்குளம் 64.60, கோவில்பட்டி 364.70, கழுகுமலை 168, கயத்தாறு 113, கடம்பூர் 156, எட்டயபுரம் 174, விளாத்திகுளம் 186, காடல்குடி 121, வைப்பார் 169, சூரங்குடி 127. மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மொத்தம் 2,271,60 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரியாக 119.56 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோவில்பட்டியில் 364.70 மி.மீ., மழையும், குறைந்தபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 17 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago