தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஏராளமான வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியில் இருந்து நேற்று காலை 10 மணி வரை தொடர்ந்து 29 மணி நேரம் மழை பெய்தது.
மதியத்துக்கு மேல் சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. முதல் நாளில் தூறலாக இருந்த மழை இரவில் வலுத்தது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் சிற்றாறு, அனுமன் நதி, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
செங்கோட்டைக்கு மேற்கு பகுதியில் உள்ள தஞ்சாவூர் குளம் உடைந்து கொல்லம் - திருமங்கலம் சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை தீயணைப்புத்துறை,யினர் மற்றும் காவல்துறையினர் மீட்டனர்.
தமிழகம்- கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமான இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் விஸ்வநாதபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
» ஒரே நாளில் 36.5 செ.மீ மழை: கோவில்பட்டியில் கண்மாய்கள் உடைப்பு, போக்குவரத்து துண்டிப்பு
» பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை
இதேபோல் செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு பகுதியில் நீலியம்மன் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீர் கொல்லம்- திருமங்கலம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. செங்கோட்டைக்கு மேற்கு பகுதியில் பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட சில கிராமத்துக்கு செல்லும் வழிகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தஞ்சாவூர் குளம் உடைந்து வெளியேறிய தண்ணீர் வயல்களில் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல் காசிமேஜர்புரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வயல்களில் பயிர்கள் நீரில் மூழ்கின.
கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: குற்றாலம் பிரதான அருவி வெள்ளம் அருவிக்கரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலுக்குள் புகுந்தது. கோயில் வளாகத்தில் தேங்கி நின்ற நீரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரதான அருவியின் வெள்ளம் சன்னதி பஜாரில் பெருக்கெடுத்து ஓடியது. பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதேபோல் தென்காசி சிற்றாறு வெள்ளம் தட்சிணாமூர்த்தி கோயிலுக்குள் புகுந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள்ளும் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
கடைகளில் தண்ணீர் புகுந்தது: ஆலங்குளத்தில் கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட கடைகளில் தண்ணீர் புகுந்ததால் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் சேதமடைந்தன. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. துத்திகுளம் சாலையில் உள்ள பீடி நிறுவனத்தில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் நனைந்து வீணாகின.
தாழ்வான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. கடப்போகாத்தி வழியாக மேலப்பாவூர் செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் செங்கானூர் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
சுரங்கப்பாதை மூழ்கியது: பாவூர்சத்திரம் அருகே செல்வவிநாயகர் புரத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையிலும் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாவூர்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறுவதால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தற்போது அப்பகுதி வழியாக செல்ல முடியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் உள்ள சிற்றாறு பாலத்தின் மேல் பகுதியிலும், தென்காசி யானைப்பாலம் பகுதியிலும் சிற்றாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைப் பாலம் அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 50 பேர் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
தென்காசி அருகே ஆயிரப்பேரியில் இறந்தவரின் உடலை எரியூட்ட மயானத்துக்கு சென்ற 50-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
கடையம் அருகே ஜம்புநதி பாலம் மூழ்கியதால் இந்த வழியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கீழக்கடையம் ஊராட்சி ரோஜா நகர், குமரேசபுரம் வடக்கு ரயில்வே காலனி ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. உடனடியாக பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
நெற்பயிர்கள் மூழ்கின: ஆழ்வார்குறிச்சி அருகே நாணல்குளம் பகுதியில் வாய்க்கால் கரை உடைந்து வயல்களில் புகுந்ததால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. செங்கோட்டை வல்லம் சாலையில் அரிகர நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட தனியார் கேக் தொழிற்சாலை ஊழியர்களை செங்கோட்டை தீயணைப்புபடை வீரர்கள் மீட்டனர். பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் நீங்கியதும் போக்குவரத்தை அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மின் விநியோகம் பாதிப்பு: சேர்ந்தமரம் அருகே ஓடையில் அதிக நீர்வரத்தால் அங்குள்ள 4 மின் கம்பங்கள் சாய்ந்தன. தென்காசி அருகே திரவிய நகரில் ஆற்றின் குறுக்கே மரம் சாய்ந்து விழுந்ததில், மின் கம்பம் முறிந்தது. கீழப்பாவூர் அருகே பூலாங்குளத்தில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் மின்மாற்றி சாய்ந்தது. சில மின் கம்பங்களும் சாய்ந்தன.
இதனால் இப்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆய்க்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் செல்வராஜ், மழையால் சேதமடைந்த மின் கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago