செம்பரம்பாக்கம் ஏரியில் 4,500 கனஅடி உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கனஅடி உபரிநீர் இன்று (டிச.13) திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்தது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3453 மில்லியன் கன அடி என்ற நிலையில் ஏரிக்கு வினாடிக்கு 6498 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததது. இதன் காரணமாக ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலையில் இருந்ததால் முதல் கட்டமாக ஆயிரம் கன அடி உபரி நீர் காலையில் திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீர் திறப்பின் அளவு 4500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இந்த ஏரியில் 5 கண் மதகில் இரண்டு மற்றும் நான்கு ஆகிய இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு அதன் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் உள்ளே வராத வகையில் ஏரிக்குச் செல்லும் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

துணை முதல்வர் ஆய்வு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியின் நிலவரம், வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அனைத்து இடங்களிலும் மழை நீரை முறையாக வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. யாரும் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை. மழைக் காலங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஆய்வு செய்ய பொறுப்பு அமைச்சர்களை, முதல்வர் அறிவித்துள்ளார். தேவைப்பட்டால் நானும் ஆய்வுக்கு செல்வேன். அனைத்து இடங்களிலும் முகாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம், என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது அதிகளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்