சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்’ என்று பெரியார் நினைவகம் திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டினார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெரியார் நினைவகம், நூலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவுக்கு தலைமையேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார். கேரள மக்கள் நாராயணரை ‘குரு’ என்று அழைப்பதுபோல், தமிழக மக்கள் ஈ.வெ.ராவை ‘பெரியார்’ என்று அழைக்கின்றனர். ‘பெரிய’ ஆள் என்ற சொல்தான் பெரியாராக மாறியது. சுதந்திரம் மற்றும் சமூக சீர்திருத்த சிந்தனையாளரான பெரியார், உழைப்பாளி வர்க்கத்தினர், கம்யூனிஸ்ட் அமைப்பினருடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தார். எம்.சிங்காரவேலு, ப.ஜீவானந்தம் ஆகியோருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.
கடந்த 1952-ல் தமிழகத்தில்கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு பெரியாரின் பங்களிப்பு நாம் அனைவரும் அறிந்த விஷயம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானபோது, பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட பி.ராமமூர்த்தியின் திருமணத்துக்கு தலைமை தாங்கியது பெரியார்தான். அந்த அளவுக்கு தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பெரியாருக்கும் நெருங்கிய தோழமை இருந்தது.
அவர் தனது சீர்திருத்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான் ‘குடியரசு’ என்ற பத்திரிகையை தொடங்கினார். கடந்த 1970-ல் திராவிட கட்சியால் தொடங்கப்பட்ட ‘உண்மை’ என்ற பத்திரிகையில், பெரியார், ‘ஜனநாயக நாட்டில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் இல்லை, அனைவரும் சமமே’ என்று எழுதினார். சாதி, மத, நிற வேறுபாடுகளை ஒழிப்பதற்கான போராட்டமே ‘வைக்கம் போராட்டம்’. அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ‘சமதர்மம்’ என்று பெரியார் முழங்கினார்.
வைக்கம் கோயிலின் சுற்றுப்பாதை தடை விலக்கப்பட்டது மலையாள மக்களுக்கு மட்டுமே. ஆனால், இதை மலையாள மக்களுக்கான, திருவிதாங்கூருக்கான பிரச்சினையாக கருதாமல் ஒரு நாட்டின் பிரச்சினையாக கருதி போராடியவர்கள் பெரியார் மற்றும் இதர போராட்டவாதிகள். தேச தலைவர்கள் மற்றும் சீக்கியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
எனவே, எல்லை தாண்டிய சகோதரத்துவமும், ஒத்துழைப்பும் இந்த போராட்டத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த மனநிலைமையை கேரளாவும், தமிழகமும் இன்றும் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் பிரச்சினையில் கேரளாவும், கேரளாவின் பிரச்சினையில் தமிழகமும் ஒன்றுக்கொன்று கைத்தாங்கலாக செயல்படுகிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டாக இந்த மாநிலங்கள் உள்ளன. இதை பிற மாநிலங்கள் பின்பற்றினாலும், தனிப்பட்ட சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டும். தமிழகமும், கேரளாவும் இப்படித்தான் நடந்து கொள்கின்றன. இதை மேலும் வலிமையுடன் கொண்டுசெல்ல இருமாநிலங்களாலும் முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், முன்னிலை வகித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து தீண்டாமை என்ற பதம் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், சாதி என்ற வார்த்தை நீக்கப்படவில்லை. இதுவும் நீக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் விருப்பம். அதனால் சாதி என்ற வார்த்தையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அவர் விரும்பிய, சாதிகள் இல்லாத சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago